Friday 26th of April 2024 08:58:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
பெண்களுக்கு கௌரவத்துடன் மதிப்பளிக்கும் நாடுகளில் இலங்கை முன்மாதரி! - ஜனாதிபதி!

பெண்களுக்கு கௌரவத்துடன் மதிப்பளிக்கும் நாடுகளில் இலங்கை முன்மாதரி! - ஜனாதிபதி!


ஒரு நாடு பெண்களை நடத்தும் விதம் அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டியாகும். அந்த வகையில் பெண்களுக்கு கௌரவத்துடன் மதிப்பளிக்கும் நாடுகளில் இலங்கை முன்மாதரியாகத் திகழ்வதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அவரது செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை சமூகம் பெண்களையும் தாய், சகோதரி, மகள், மனைவி, மற்றும் இல்லத்தரசி என்ற அவர்களது பல்வகைப்பட்ட வகிபங்கையும் பண்டைய காலம் முதலே மிகுந்த கௌரவத்துடன் மதித்து வந்துள்ளது. ஒரு நாடு பெண்களை நடத்தும் விதம் அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டியாகும். இந்த விடயத்தில் இலங்கை ஏனைய பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

பெண் என்பவள் எந்தவொரு சமூகத்திலும், அதன் அடிப்படை அலகாக விளங்கும் குடும்பக் கட்டமைப்பின் அடித்தளமாக விளங்குகின்றாள். தனது வாழ்நாள் முழுவதும் பலவிதமான பாத்திரங்களை வகிக்கும் அவள், பல குடும்ப அலகுகள் இணைந்து உருவாகும் சமூகத்தை பிணைத்து வைத்திருப்பதில் ஒரு வலுவான பங்கை வகிக்கின்றாள். எப்போதும் பண அடிப்படையில் மதிப்பிடப்படாத போதும், தேசிய உற்பத்திக்கான அவளது பங்களிப்பு அதிக பெறுமதியுடையது என்பதை உறுதியாக கூறமுடியும். எனவேதான் பெண்களின் கண்ணியம், சமத்துவம் மற்றும் மகிழ்ச்சியைப் பாதுகாத்து போசிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும்.

இன்று இலங்கையில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையின் பல துறைகளில் பெண்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர். இன்னும் பல துறைகளில் அவர்கள் ஆண்களுக்கு சவால் விடும் நிலையில் இருக்கின்றார்கள். இந்த வெற்றியானது பெண்ணின் அறிவாற்றல், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பைப் போன்றே எமது சமூகத்தின் சமூக நீதி மற்றும் முதிர்ச்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

அரசியல் துறையில் அவளது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். நாடும் தேசமும் உலகமும் அவளே என்ற இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் காலத்துக்கேற்ற ஒரு கருப்பொருள் என நான் நினைக்கிறேன்.

பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு அம்ச அணுகுமுறை இப்போது யதார்த்தமாகி வருகிறது.

சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டின் பெண்களுக்கு எனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE