Friday 26th of April 2024 01:29:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்க -சீன  பூகோள அரசியல் நலன்களுக்குள் நகர்கிறது ஜெனீவாத்தீர்மானம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

அமெரிக்க -சீன பூகோள அரசியல் நலன்களுக்குள் நகர்கிறது ஜெனீவாத்தீர்மானம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை-இந்திய உறவினை தற்போது தீர்மானிப்பதில் ஜெனீவாவின் நிகழ்வுகள் முதன்மையானவையாக அமைந்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஜெனீவா விடயம் இலங்கை அரசாங்கத்தினை நெருக்கடிக்குள்ளாக்கினாலும் தற்போதைய அரசாங்கமே அதிகம் இந்தியாவுடனான நட்புறவிலும் மேற்குலகத்துடனான உறவிலும் முரண்பாட்டை சந்தித்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் அனைத்து நிறுவனங்களும் நாடுகளினால் கட்டப்பட்ட நிறுவனங்களே. ஜெனீவாவும் நாடுகளின் அமைப்பே. அதனால் அரசுகளின் தேசிய நலன்களில் ஜெனீவாத் தீர்மானங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குள் அகப்பட்டுள்ளது. மனித உரிமைகளை கடந்து அரசுகளின் தேசிய நலன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போது தொடங்கியுள்ள ஜெனீவா அரங்கத்திற்கும் அத்தகைய அரசியல் பொருளாதார இராணுவ வர்த்தக நலன்களுடன் கேந்திர நிலையமும் நாடுகளின் முடிபுகளை தீர்மானிக்கும் திறன் பெற்றதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் இந்தியாவை நோக்கிய இலங்கையின் இரு தரப்பின் கோரிக்கைகளையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது இந்தியாவின் ஐ.நா. வின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே குறிப்பிட்ட கருத்தினை நோக்குவது அவசியமானது. நல்லிணங்க செயல்முறை மற்றும் அரசியலமைப்பில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமிழர்களின் வேணவாக்களுக்கு தீர்வுகாணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கையை கோருகிறோம். இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களின் சம உரிமை கௌரவம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக் கூறல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான தீர்வு விடயத்தில் இந்தியா மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனீவாவில் முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மனதார வரவேற்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஐ.நா. விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணையில் இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவிக்கும் போது கொழும்புத் துறைமுக பிரச்சினை வணிக ரீதியான செயல்படாகும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட நாள் நல்லுறவு தொடர்புபட்டதாகும் எனக் குறிப்பிட்டார்.

ஒன்று மேற்குறித்த மூன்று கருத்துக்களும் சரியான விடயம் ஒன்றினை கோடிட்டுள்ளது.இலங்கை விடயத்தின் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் அது கொண்டிருக்கும் முரண்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது. பாண்டேயின் கருத்துக்கு பின்பு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை நியாயமற்றது என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.இலங்கை விடயத்தில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் கெஹலிய கிழக்கு முனையத்தை வர்த்தக ரீதியிலான விடயம் என முடிச்சுப் போட முனைகின்றார். ஆனால் அரசுகள் எப்போது நெருக்கடி கால கைப்பற்றல்களில் கரிசனை கொள்வதுடன் அதற்கான காலத்தை நோக்கிய நகர்வுக்காய் காத்திருப்பது வழமையான அரசியலாகவே உள்ளது. இந்தியாவுக்கு கிழக்கு முனையம் மட்டுமல்ல சீனாவின் இலங்கை தொடர்பான செல்வாக்கே அதிருப்திக்கான அடிப்படையாகும். இந்த சந்தர்ப்பத்தை தவறுவிடுதல் என்பது இந்தியாவுக்கு ஆபத்தானதே. இதனை புரிந்து கொள்ளாத அரசாங்கமாக இலங்கை இல்லை என்பதுவும் அதனையும் கடந்து தந்திரோபாய ரீதியில் பயணிக்க இலங்கை அரசாங்கம் முனைகிறது என்பதை கெஹலியவின் கருத்து வெளிப்படுத்துகிறது. கடந்த காலம் முழுவதும் இலங்கை இந்தியாவை கையாண்டு வெற்றி கண்டது போல் தற்போதைய விடயத்திலும் நகரும் உத்தியை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கல்வி அமைச்சர் ஜி.எல.பீரிஸூம் வெளிப்படுத்திவருவது போல் ஊடகத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு இந்தியா மீது நம்பிக்கை கொள்வதென்பது எதிர்முரணானதே. அதில் இலங்கை ஆளும் தரப்பு கைதேர்ந்தது என்பதை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது.

இரண்டு சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன சீனாவின் நட்பு நாடுகளுடனான சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளார். அப்போது ஜெனீவா விடயத்தை கையாளுவதற்கான உத்திகளை கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் போரின் போது நிகழ்ந்தவற்றை நட்பு நாடுகளுக்கு தெரிவித்ததுடன் மிக மோசமான பயங்கரவாதத்தை அரசாங்கம் அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நிகழும் போது அங்கத்துவ நாடுகளை இலங்கைக்கு சார்பானதாக திரட்டும் முயற்சியில் அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மூன்று சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தமது நட்பு நாடுகளை அணுகி அவற்றினை இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் அங்கத்துவ நாடுகளுக்கு வலியுறுத்துவதுடன் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெறாத நாடுகளை அவற்றின் அங்கத்துவம் பெறும் நட்பு நாடுகளுடன் உரையாடுமாறும் பிராந்திய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி வருகின்றன. இதனால் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளை இலகுவில் அணுகலாம் என்றும் பிராந்திய அரசியலுக்குள் நாடுகளை ஒன்றிணைக்க முடியும் என்றும் கருதுகின்றன. இதில் சீனா - ரஷ்யா என்பன இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவதனால் வாக்கெடுப்பினை இலகுவில் வெற்றி கொள்ள முடியும் என இலங்கை கருகிறது. சீனா இலங்கையின் தோல்வி தனது தோல்வியாகவே கணக்கிட்டு;ள்ளது. இலங்கை வாக்கெடுப்பில் தோல்வி கண்டுவிடக் கூடாது என சீனாவும் ரஷ்யாவும் செயல்படுகின்றன.

நான்கு அமெரிக்காவுக்கு எதிரான அணியொன்றினை உருவாக்குவதில் அதிக கரிசனையுடைய நாடுகளாக சீனாவும் ரஷ்யாவும் காணப்படுகின்றன. ஏற்கனவே உலக அரசியலில் அத்தகைய போட்டியை கொண்டுள்ள சீனாவும் ரஷ்யாவும் இலங்கை விடயத்திலும் தமது தேசிய நலன்கள் பாதித்துவிடக் கூடாது என்ற நோக்குடன் செயல்படுகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் தெளிவான சீன ரஷ்யஅணிதிரட்டலுக்குள் அகப்பட்டுள்ளன. சோஸலிஸ சிந்தனையைக் கொண்டுள்ள கியூபா கூட அமெரிக்காவுக்கு எதிரான நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிவருகிறது. ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து கியூபா இலங்கையின் நட்பு நாடாகவே இயங்குகிறது. இங்கு மனித உரிமைகளை விட மனிதாபிமானச் சட்டங்களை விட நாடுகளின் நலன்களே முதன்மையானவையாக காணப்படுகின்றன.அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணையும் நிகழ்வாக ஜெனீவாக் களத்தை சீனா ரஷ்யா மட்டுமல்ல அமெரிக்காவின் நடவடிக்கைகளும் நகர்த்துகிறது. மிக அண்மையில் அமெரிக்க காங்கிரஸ்ன் வெளியுறவைக் கையாளும் குழுவினர் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு நாடுகளை கோரியுள்ளன. இது ஒரு அரசியல் களத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படுத்தியது போல் மீளவும் உருவாக்கியுள்ளது.இது உலக நாடுகளில் அரசியல் களம். அதற்கான அணுகுமுறைகளை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொள்கின்றன.

ஐந்து தமிழர் தரப்பு ஜெனீவாத் தீர்மானத்திற்கு அமைவாக உரையாடலை மட்டுமே உள்@ர் மட்டத்தில் மேற்கொள்கிறதே அன்றி பிராந்திய சர்வதேச அளவில் செயல்பட தவறுகின்றது. இதனால் தீர்மானத்திற்கான ஆதரவுத் தளத்தை இழக்கும் நிலை ஏற்படுவதுடன் உலக நாடுகளது அரசியலுக்குள் ஜெனீவாத் தீர்மான முடக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்போர்கள் எந்தளவுக்கு தமிழர் சார்பான தீர்மானத்தை ஊக்குமளிக்கிறார்களோ அதுவே நிலையான வாய்ப்புக்களை ஏற்படுத்தும். மாறாக எத்தகைய நகர்வும் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழ் மக்களது எதிர்பார்க்கைகள் தீர்க்கப்படாத நிலையை நீடிக்க உதவுமே அன்றி தீர்வைத் தரக்கூடிய வழிகளை உருவாக்காது. இதனால் அரசுகளின் நலன்கள் அங்கீகரிக்கப்படுமே அன்றி அதற்கான அரசியல் ஈடுபாடு ஏற்படுமே அன்றி தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படுவது கடினமாகவே அமையும் தமிழ் மக்களது தேவைகளை தமிழ் மக்களது பிரதிநிதிகள் ஆதரவளிக்கும் நாடுகளுடன் இணைந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

எனவே ஜெனீவாக் களத்தினை அரசுகள் அரசியலாக மாற்றுவதில் முனைப்பான அடைவை எட்டியுள்ளன. இலங்கையின் அரசியல் களத்தில் அமெரிக்க - சீனா ஆகிய இரு தரப்பும் தமது இலாபங்களை அடைவதில் வெற்றி கண்டுள்ளன. இந்தியாவைக் கூட தமிழ் தரப்பு பயன்படுத்திக் கொள்வதில் எத்தகைய முனைப்பையோ தந்திரத்தையோ பிரயோகிக்க வில்லை. தீர்மானம் பலவீனமானது என்பதை விட நாடுகளது அரசியல் நலனுக்கானதாக அமைந்துள்ளதை கூட கையாளமுடியாத நிலைக்குள் தமிழ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எத்தகைய மாற்றமும் ஏற்படுத்தாது நிலையை எதிர் கொள்வதற்கு தயாராதல் வேண்டும். அது மேலும் ஒரு நெருக்கடியாகவே மாறவுள்ளது. அதனைத் தடுக்கும் உத்தியற்ற நிலையே தமிழருக்குள் உள்ளது.அதற்காக அந்த நாடுகளை குற்றம் சாட்டுவதால் எத்தகைய பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களது பிரச்சினைக்கான தீர்வினை நோக்கி தமிழர்கள் தான் நகர வேண்டுமே அன்றி உலக நாடுகளல்ல. வல்லரசு நாடுகளின் பூகோள நலனுக்குள் தமிழரது அரசியல் நலனும் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்படுதலே அவசியமானது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE