Friday 26th of April 2024 12:16:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
போர்ட் சிட்டி முழு உரிமை இலங்கைக்கே சொந்தம்! - நீதி அமைச்சர் திட்டவட்டம்!

போர்ட் சிட்டி முழு உரிமை இலங்கைக்கே சொந்தம்! - நீதி அமைச்சர் திட்டவட்டம்!


கொழும்புத் துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கு மாத்திரம் தான் சொந்தமானது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைமுக நகரத்தின் ஒரு பகுதி பிறிதொரு சாராருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் சட்டபூர்வ நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"உலகில் முதலீட்டாளர்கள் பார்க்கும் இரண்டு குறியீடுகள் உள்ளன. இதில் வியாபாரம் செய்வதற்கு சிறந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாம் இருப்பது 99 ஆவது இடத்திலாகும். அதாவது நாம் மற்ற 98 நாடுகளை கடந்து வர வேண்டும்.

ஒரு ஒப்பந்தம் தொடர்பாக சிக்கல் ஏற்படும்போது, நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும் போது 165 ஆவது இடத்தில் இருக்கின்றோம். எனவே, முதலீட்டாளரைப் பெற ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீட்டு மண்டலத்தின் மொத்த பரப்பளவு 269 ஹெக்டேயர் ஆகும். பொது வசதிகளுக்காக 91 ஹெக்டேயர். அவற்றைக் கொடுக்க முடியாது. திட்ட நிறுவனத்துக்கு 116 ஹெக்டேயர் (43 சதவீதம்).

இதை உருவாக்க 2013 ஆம் ஆண்டில் ரூ.1.4 பில்லியனை அவர்கள் செலவிட்டார்கள். நம்மிடம் இன்னும் கடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. 23 சதவீதம் அரசின் பங்குகள். ஆனால், இது 100 சதவீதம் அரசுக்குச் சொந்தமானது, அரசே உரிமையாளர். வேறொருவருக்கு பாதி நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வது முற்றிலும் தவறானது.

இதனிடையே, துறைமுக நகரத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. எனவே, கொழும்புத் துறைமுக நகரத்தில் வியாபாரம் அல்லது சேவைகளை வழங்குவதற்கான உரிமங்கள் அதன் ஊடாகத்தான் வழங்கப்படுகின்றது.

துறைமுக நகரத்தில் அதிநவீன அலுவலக வளாகங்கள், அதிநவீன சுகாதார பராமரிப்பு நிலையங்கள், கல்விச் சேவைகள், படகு சேவைகள், சிறப்பு அங்காடிகள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு எனப் பலதரப்பட்ட வசதிகள் உள்ளன.

இந்தத் திட்டத்தின் ஊடாக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீத பங்களிப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகவும், அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் சில குழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன. இந்தத் தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும்.

இந்தக் குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்களை உருவாக்கி வருகின்றோம்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தச் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

இலங்கையின் சூழமைவுக்குப் பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE