Friday 26th of April 2024 04:55:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
சட்டபூர்வமான ஊடக ஒடுக்குமுறை! - நா.யோகேந்திரநாதன்!

சட்டபூர்வமான ஊடக ஒடுக்குமுறை! - நா.யோகேந்திரநாதன்!


நீதி அமைச்சர் அல் சப்ரி அவர்கள் இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் தொடர்பாகப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி ஒருநாடு, ஒரு பிரதேசம் என்பனவற்றின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துகள், பொதுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், பொது ஒழுங்கு என்பவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செய்திகள், அரசாங்கத்தின் பிறநாடுகளுடனான உதவி பற்றிய வேண்டத்தகாத விமர்சனங்கள், பல்வேறு இன, மதக் குழுக்களிடையே வெறுப்பையும், விரோதத்தையம் தூண்டக்கூடிய விடயங்கள் என்பன இச் சட்டத்தின்மூலம் சட்டபூர்வமானத் தடைசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக நோக்கும்போது நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் சுமுகமான சர்வதேச உறவுகளுக்கும் இப்படியான ஒரு சட்டம் தேவையானதுதான் எனத் தோன்றக்கூடும். ஆனால் இச்சட்டம் எப்படி அமுல்படுத்தப்படும் என்பதைக் கடந்த காலச் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இதுவும் ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு ஆயுதமாக இருக்கக்கூடுமோ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இச்சட்டத்தில் கூறப்படும் விடயங்களின் எல்லைகள் அதிகார பீடங்களாலேயே தீர்மானிக்கப்படும் நிலை இருக்கும். அநீதிகள், பாகுபாடுகள் கோலோச்சக்கூடிய நிலைமைகள் உருவாகமாட்டா எனச் சொல்லிவிட முடியாது.

அதிகாரபீடத்தினரின் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனப் பார்க்கப்படலாம். சிறுபான்மையினரின் வணக்கத்தலங்கள் ஆக்கிரமிக்கப்படும்போதும், இன, மத, தனித்துவங்களைச் சிதைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போதும், பாரம்பரிய வாழிடங்கள் பறிக்கப்படும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் குரலெழுப்பினாலோ எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவித்தாலோ அது இன, மத குரோதங்களை எழுப்புவதாகக் குற்றம் சுமத்தப்படலாம். நாட்டின் சொத்துகள், மூலவளங்கள் பிறநாட்டினருக்குக் கண்மூடித்தனமாக விற்பனை செய்யப்படும்போது அவற்றை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தால் அவை தேசவிரோத விமர்சனங்களாகப் பார்க்கப்படலாம்.

எனவே சுதந்திரமான ஊடக வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை சட்டம் முடக்கி விடும் என அச்சப்படுவதில் ஆச்சரியமில்லை.

இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர் மீதும் சட்டபூர்வமாகவும், சட்டபூர்வமற்ற வன்முறைகள் மூலமும் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை எவரும் மறுத்துவிட முடியாது. அப்படியான தொடர் ஒடுக்குமுறைகளுக்கு இப்புதிய சட்டம் மேலும் சட்டபூர்வமாக வலுவூட்டுமென்றே கருதப்படுகிறது.

ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கூறப்பட்டபோதிலும் ஜனநாயக நாடுகளில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிலவி வருகின்றன. ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, காணாமற்போகச் செய்வது, சிறை செய்யப்படுவது போன்ற அநீதிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இப்படியான ஒரு சட்டம் இல்லாமலே ஏற்கனவே அவசர காலச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதரத் தடைச்சட்டம் என்பவற்றின் அடிப்படையில் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதும், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டதும் தாராளமாகவே இடம்பெற்றன. அதேவேளையில் சட்டவிரோத வன்முறைகள் மூலம் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதும், ஊடகவியலாளர்கள் சொல்லப்பட்டதும், கடத்தப்பட்டதும், உயிர்ப் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு ஓடியதும் நடைபெற்றன.

1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது ஊடகவியலலாளர் ரிச்சட் டி சொய்சா மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்பட்டதும், விக்டர் ஐவன் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதும் இடம்பெற்றன. அதன் பின்பு ஜனாதிபதிகளாக பிரேமதாச இருந்தபோது இரண்டு பேரும், திருமதி சந்திரிகா பதவி வகித்தபோதும் 13 பேரும் மஹிந்தராஜபக்ஷ அதிகாரத்திலிருந்தபோது 24 பேருமாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் லசந்த விக்கிரமதுங்க, சுகிர்தராஜன், நிமலராஜன், சிவராம், நடேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட முக்கிய ஊடகவியலாளர்களாகும். இன்றுவரை இவர்களின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை. காணாமற் போனோரில் பிரகீத் எக்கலியகொடவும் நாட்டை விட்டு வெளியேறியோரில் இக்பால் அத்தாசும் முக்கியமானவர்களாகும்.

இலங்கை கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்களின் 188 நாடுகளின் பட்டியலில் 137 இடத்தை வகிக்கிறது.

எனவேதான் ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது எப்படியென்று கேட்கத் தோன்றுகிறது.

ஊடக சுதந்திரம் பற்றி எவ்வளவு தான் உரக்கக் கூவினாலும்கூட அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய இலத்திரனியல் ஊடகங்கள் ஒருவிதமான சுயதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டே வெளிவர நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் சட்டம் அவர்கள் மீது எப்போதும் பாயத் தயாராகவே உள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம், பொதுசன பாதுகாப்புச் சட்டம் என்பன அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தத் தயங்கப்போவதில்லை.

பயங்கரவாதத்தின் எல்லை பற்றியோ, நாட்டின் அமைதிக்கும், சமாதானத்திற்கும் பங்கம் விளைவிப்பவை எவை என்பது பற்றியோ தீர்மானிக்கும் பொறுப்பு அதிகார பீடங்களின் கையிலேயே உள்ளது.

இப்படியான நிலையிலும் சில ஊடகங்களோ அல்லது திறமைசாலிகளான ஊடகவியலாளர்களோ சட்டங்களின் ஓட்டைகளைப் பாவித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் 'இனந்தெரியாத நபர்கள்' என்றொரு கூட்டம் களமிறங்கிவிடும்.

ஊடக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படும். துணிச்சலான ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கொலை முயற்சிகளில் படுகாயமடைவார்கள் அல்லது கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்படுவார்கள்.

எம்.ரி.வி., நியூலங்கா, உதயன் போன்ற நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு, இயந்திரங்கள் சேதமடைந்தமையும் கணனிகள் நொருக்கப்பட்டமையும், பணியாளர்கள் கொல்லப்பட்டமையும் ஆசிரியர் உட்படப் பலர் படுகாயப்படுத்தப்பட்டமையையும் மறந்து விடமுடியாது. இதில் கவனிக்க வேண்டிய விடயமென்னவெனில் இவ்வாறான பாதிப்புகளுக்கு உட்படுபவர்களுக்கு நீதியை வழங்குவதில் சட்டம் உறங்கிவிடும் சட்டங்களும், சட்டங்களை அமுல்படுத்துபவர்களும் ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ எதிராக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குவதில்லை.

அச்சு, வானொலி, தொலைக்காட்சி என்பவற்றுக்கு இன்னுமொரு வகையான நிர்ப்பந்தமும் உண்டு. பெரும்பாலான இப்படியான ஊடகங்கள் இலாபத்தில் இயங்குவதற்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் முக்கியமானதாகும். அதிகமான விளம்பரங்கள், அனுபந்தங்கள் என்பன அரசாங்க நிறுவனங்களாலும் பெரும் வர்த்தக நிறுவனங்களாலுமே வழங்கப்படுகின்றன. அவற்றின் நலன்களுக்கு எதிராகச் செய்திகளையோ கட்டுரைகளையோ வெளியிட்டால் விளம்பரங்களை வழங்காமல் விட்டு விடுவார்கள். சில சமயங்களில் விளம்பர முகவர்கள் மூலம் எச்சரிக்கையும் செய்யத்தயங்குவதில்லை. எனவே இந்த ஊடகங்கள் அவர்களின் விருப்பங்களுக்கு விரோதமாகச் சென்றுவிடாமல் ஒருவிதமான சுயதணிக்கை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

சூரியன் எவ்.எம். நிறுவனத்தின் அனுமதி ரத்துச் செய்யப்பட்டதும், பின்பு சரணடைவின் காரணமாக அனுமதி வழங்கப்பட்டதும் மறந்து விடமுடியாது.

இவ்வாறு அச்சு, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சுயதணிக்கை செய்யவேண்டிய நிலைமையே நிலவுகிறது. அப்படிச் செய்யத் தவறினால் தற்போது அமுலிலுள்ள சட்டங்களோ அல்லது இனந்தெரியாதவர்களின் வன்முறைகளோ கவனித்துக்கொள்ளும்.

ஆனால் இணைத்தளங்கள், சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் மேற்கண்ட ஒடுக்குமுறைகள் பலனளிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான இணையத் தளங்கள் வெளிநாடுகளிலேயே இயங்கி வருவதால் அவற்றின் மீது இலங்கையின் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியாது. இவ்வாறு சமூக வலைத் தளங்களும் மின்னல் வேகத்தில் கருத்துக்களைப் பரப்பி விடுகின்றன. அவற்றின் மூலங்களைக் கண்டு பிடிப்பது அவ்வளவு இலகுவானதல்ல.

எனவே தான் தற்சமயம் இணைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படவுள்ளன.

ஏனெனில் அச்சு, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை விடச் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் என்பனவே இளைஞர்கள் மத்தியிலும் புத்திஜீவிகள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இவர்களே பொதுக் கருத்தியலை உருவாக்கி வருவதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்றனர்.

குறிப்பாகக் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குதல், மிலோனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெடுத்திடல் என்பவற்றைத் தடுக்கும் வகையிலும் தற்சமயம் துறைமுக நகரைத் தனி ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல் தொடர்பாகவும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் நடவடிக்கைகளும் திருப்திகரமாக அமையாமை தொடர்பாகவும் சமூகவலைத்தளங்கள் பொது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியிருந்தன.

ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களைச் செய்து வருவதாகவும் அவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றி தனக்குத் தெரியுமெனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் எச்சரிக்கும் விதத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இச்சட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு, இன ஐக்கியம், வெளிநாட்டு உறவுகள் என்ற பெயரில் ஊடகங்களைத் தடை செய்யவோ அவற்றின் மேல் நடவடிக்கை எடுக்கவோ முடியும்.

வெளிநாடுகளில் இயங்கும் இணையத் தளங்கள் மீது இலங்கைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும் அவை இலங்கையின் சட்டங்களை மீறுகின்றன எனக் குற்றம் சாட்டி அவற்றின் அலைவரிசையை இலங்கைக்குள் தடை செய்யமுடியும். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்புபவர்களைக் கைது செய்து தண்டிப்பதுடன் அவர்களின் கணக்குகளை ரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.

எனவே இது காலவரை வெவவேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடக ஒடுக்குமுறை இச்சட்டத்தின் மூலம் சட்ட வலுப்பெறவுள்ளதுதான் முக்கிய பெரும் மாற்றமாகும்.

சர்வதேச அளவில் 2014ம் ஆண்டின் ஊடக ஒடுக்குமுறை தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்போது அந்த வருடத்தில் மட்டுமே 853 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 40 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர் எனவும் சொந்த நாடுகளை விட்டு 139 பேர் தப்பியோடினர் எனவும் 119 பேர் கடத்தப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து துணிச்சலுடன் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன. எத்தகைய சட்டங்கள் மூலமோ வன்முறைகள் மூலமோ ஊடகங்களை ஒடுக்கிவிடமுடியாது என்பதே வரலாறு.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

21.04.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE