Friday 26th of April 2024 12:48:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
நாடாளுமன்ற அமர்விற்கு அழைத்து வரப்படாத ரிசாட்: விடயம் தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகர் பணிப்பு!

நாடாளுமன்ற அமர்விற்கு அழைத்து வரப்படாத ரிசாட்: விடயம் தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகர் பணிப்பு!


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாட்டினை செய்யுமாறு சபாநாயகர் பணித்திருந்த நிலையில் இன்றைய அமர்வுக்கு அவர் அழைத்து வரப்பட்டிருக்காமை தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள சபாநாயகர் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் நாடாளுமன்றத்துக்கு இன்று அழைத்துவரப்படவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டினார்.

கொரோனா அவசரகால நிலைமை தொடர்பான முழுநாள் விவாதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று சபையில் ஆரம்பமாகியது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிகாலையில் பயங்கரவாதத் தடைச் சடடத்தின் கீழ் கைது செய்திருந்ததோடு, அவரை 90 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியைப் பெற்றிருந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களுக்கு அமைய, சபை அமர்வுகளில் ரிஷாத் பதியுதீன் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியும் சபாநாயகர் வழங்கியிருந்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பில், அமர்வின்போது எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ஏன் நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரவில்லை என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.

ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு சபாநாயகரின் கையொப்பம் தேவைப்படுகின்றது எனச் சம்பந்தப்பட்ட பிரிவுகள் தெரியப்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக குறித்த கையொப்பத்தையிட்டு அவரை சபைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இது தொடர்பாக சபாநாயகரைத் தான் குறை கூறமாட்டேன் என்றும், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வைத்து ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வர யோசிக்காமல் இரண்டு தடவைகள் சபாநாயகர் ஒப்புக்கொண்டார் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.

எது எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE