Thursday 25th of April 2024 08:23:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டமூலமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டமூலமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!


வெகுவிரைவில் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல், தொழிற்சங்க மட்டங்களிலிருந்து கடும் எதிர்ப்புக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிசக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளும் 14 ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கங்கள் என்பனவும் என்பனவும் பல பொது அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

அவ்வகையில் இச் சட்டமூலத்திற்கு எதிராக அதிபர்கள் தொழிற்சங்கம், ஆசிரியர்களின் தொழிற் சங்கங்கள், கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், முன்னிலை சோஷலிசக் கட்சியினர் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து கொழும்பில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்தைப் பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அதுமுடியாமற் போகவே பொலிஸார் வன்முறைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை விரட்ட முயன்றதுடன் பலரைப் பிடித்து வாகனங்களில் ஏற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை மட்டுமின்றி ஆசிரியைகளையும் கூட வன்முறைப் பிரயோகம் மூலம் இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றியமையைத் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கமுடிந்தது.

ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் யோசேப் ஸ்டாலின், முன்னிலை சோஷலிசக் கட்சித் தலைவர் துமிந்த நமகுல, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத் தலைவர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. ஆனால் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. ஆனால் பொலிஸார் அவர்களை விடுவிக்காமல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமுக்குக் கொண்டு சென்று 33 பேரைத் தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை விடுவிக்காமல் மீண்டும் தடுத்து வைத்திருப்பது நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் செயலெனப் பல தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டது. அது தொடர்பாக பொது சன பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கருத்து வெளியிடுகையில், அவர்கள் சுகாதாரப் பணிப்பாளரின் கட்டளைக்கமையவே தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டமைக்குப் பொலிஸார் பொறுப்பல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

எப்படியிருந்த போதிலும் அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் பொலிஸாரால் படுமோசமான முறையில் நடத்தப்பட்டனரெனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவ்வாறான நிலையில் மீண்டும் கடந்த 12ம் திகதி மேற்படி சட்டமூலத்தை எதிர்த்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஒரு பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி 12 ஆம் திகதி தொடக்கம் சூம் வழிமுறை மூலம் கல்வி வழங்கும் ஆசிரியர்களின் கல்விப் பணியை நிறுத்தும் தொழிற்சங்கப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளையில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண அவர்கள் ஜோசேப் ஸ்டாலின் உட்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பாக அவ்விடயம் நீதி்மன்ற வழக்கில் தொடர்புபட்டிருப்பதால் தான் எவ்வித அபிப்பிராயமும் தெரிவிக்க விரும்பவில்லையெனத் தெரிவித்ததுடன், யாராவது தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்படியும் பொலிஸாருக்கு எவ்வித ஆலோசனையும் வழங்க வேண்டாமெனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதிலிருந்தே இத் தனிமைப்படுத்தல் நடவடிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைப் பயன்படுத்தி நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்யக்கூடாதெனத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு சட்டத்துக்கு ஏன் இவ்வளவு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்றொரு கேள்வி எழலாம். இச் சட்டமூலத்தின் பெயர் ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரில் அமைந்திருந்தாலும் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களை மட்டுமின்றி சகல கல்விப் பிரிவுகளையும் உள்ளடக்குகிறது என்பது தான் இவ்வெதிர்ப்புகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.

கொத்தலாவலைப் பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் அமைக்கப்படவுள்ள அதிகார சபையின் கரங்கள் இலங்கையின் கல்விப் புலமெங்கும் விரிவடையும் தன்மை கொண்டது என்பதுடன் இது இராணுவமயப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்த அதிகார சபையின் கீழ் உயர் கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழிமுறை தர நிர்ணய நிறுவனம், பல்கலைக்கழக செனட் சபைகள் என அனைத்தும் கொண்டு வரப்படும். அதுமட்டுமன்றி 1978ம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டமூலம் இந்த அதிகாரசபையைக் கட்டுப்படுத்தாது.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 10 பேர் கொண்ட இந்த அதிகார சபையில் ஐவர் இராணுவ அதிகாரிகளாகவும் இருவர் பாதுகாப்புச் செயலாளர்களும், மூவர் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்களாகவும் இருப்பார்கள். பல்கலைக்கழகங்களில் அமைதியின்மை ஏற்படும் சந்தர்ப்பங்களில் உபவேந்தரோ பல்கலைக்கழகத்தின் செனட்டோ அழைக்காத நிலையில் நேரடியாகத் தலையிடும் அதிகாரம் இச் சபைக்கு உண்டு.

இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் நேரடியாகவே இராணுவ அதிகாரத்துக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். மாணவர்கள் தங்கள் உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்தோ அல்லது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்தோ போராட்டங்களை நடத்தினால் நேரடியாகவே இந்த அதிகார சபை தலையிடும்போது இராணுவ ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும்.

தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ இச்சபை அனுமதியை வழங்க முடியும். அதேவேளையில் இச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டங்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்படும். இதன் காரணமாக வசதிபடைத்த மாணவர்கள் தகுதியில்லாவிடினும் பணம் கொடுத்து பட்டங்களைப் பெறமுடியும். எனவே தகுதியற்றவர்கள் பட்டதாரிகளாக வரும் பட்சத்தில் அவர்களால் வழங்கப்படும் சேவை நாட்டைப் படுபாதாளத்துக்குள் தள்ளும் நிலையும் மக்கள் பலவித துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுவது தவிர்க்கப்படமுடியாதது.

உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன அதிகார சபையின் இந்த அதிகாரங்கள் மூலமும் அதிகார சபையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுவதன் மூலம் செயலிழந்து விடும் நிலையில் உயர் கல்வி இராணுவ அதிகாரத்தின் மூலம் நெறிப்படுத்தப்படும் நிலையும் உருவாகும்.

கல்வி அமைச்சு இவ்வதிகார சபையின் அதிகார வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவதால், முழுப்பாடசாலைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இச்சபையின் அதிகார நிழல் படிவது தவிர்க்கமுடியாது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே சட்டசபையில் கல்வி அமைச்சராயிருந்த டபிள்யூ.கன்னங்கர அவர்கள் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். எனினும் தனியார் பாடசாலைகள் ஒரு சிறுதொகையை வசதிக்கட்டணம் என்ற பெயரில் அறவிட்டு வந்தன. 1957ல் பண்டாரநாயக்க பாடசாலைகளைத் தேசிய மயமாக்கியதன் மூலம் இலவசக் கல்வி முழுமைப்படுத்தப்பட்டது. ரணசிங்க பிரேமதாச பிரதமாயிருந்தபோது இலவசப் பாடப் புத்தகங்கள், இலவசச் சீருடை என்பவற்றை வழங்கியதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. அதேவேளையில் மகாபொல சீட்டிழுப்பின் மூலம் வரும் வருமானத்தை வசதி குறைந்த பல்கலைக்கழக மாகணவர்களுக்கு வழங்கியதன் மூலம் இலவசக் கல்வியை உயர் கல்வி மட்டத்துக்கும் விரிவுபடுத்தினார்.

இவ்வாறு பல தலைவர்களின் அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் மூலை முடக்கிலுள்ள கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறவும், பட்டதாரிகளாக உருவாகவும் உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுமான நிலைமைகள் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு கட்டி வளர்க்கப்பட்ட இலவசக் கல்விக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கல்விப் புலத்துக்குள் தனியார் துறை உள்நுழையும்போது வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்புகள் உருவாவதும் ஏழைகள் பின் தங்குவதும் தவிர்க்கப்படமுடியாமல் போய்விடும்.

தற்சமயம் கூட பாடசாலை மாணவர்கள் கூட மேலதிகமாகப் பெரும் பணச் செலவில் தனியார் நிறுவனங்களில் கல்வி பெறவேண்டிய தேவை எழுவதை அவதானிக்க முடியும். தனியார் கல்வி நிலையங்கள் பட்டங்களை வழங்கும் வகை செய்யப்படும்போது நிலைமை எவ்வளவு மோசமடையும் என ஊகிக்கமுடியும்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாகத் தாங்கள், மாகாண சபைகள், கல்வியமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு என்பன தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இராணுவ மயப்படுத்தப்பட்ட அதிகார சபையிடம் வழங்கப்படும் போது எதிர்காலக் கல்வியே ஆபத்துக்குள்ளாகிவிடும் என்ற அச்சம் தோன்றுவதில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை.

எனவே, கொத்தலாவல பல்கலைக்கழக பாதுகாப்பு சட்டமூலம் இலங்கையின் கல்வி முறையையே புரட்டிப் போட்டு இலவசக் கல்வியைச் செயலிழக்க வைத்து வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், முழுமையாக இராணுவ மயப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஒரு பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பின்போது கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குக் கீழ்க் கொண்டு வரப்படுமென வாக்குறுதி அளித்துள்ளார். 1978 ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டம் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக அதிகார சபையை கட்டுப்படுத்தாது என்ற நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதன் கீழ் கொண்டு வரப்படுவதால் என்ன பயன் எழுமென்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகும்.

ஆனாலும் இலவசக் கல்விக்கு ஆபத்துவரும் ஒரு நிலைமை தவிர்க்கப்படுமென்பதற்கான எவ்வித அறிகுறியும் தென்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வது நியாயமான நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

20.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE