Friday 26th of April 2024 05:27:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆட்சியாளரின் அனுசரணையில் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்! - நா.யோகேந்திரநாதன்!

ஆட்சியாளரின் அனுசரணையில் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்! - நா.யோகேந்திரநாதன்!


கோணாவல சுனில் – சுனில் பெரேரா என்ற பெயர்கொண்ட இவன் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தேர்தல் தொகுதியான களனியைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவன். இவன் மருத்துவர் ஒருவரின் மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 15 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவன். 1982ல் தேர்தல் காலத்தின்போது இவன் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டான். 1982ம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலின்போது கட்டானைத் தொகுதியில் வாக்குப் பெட்டிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தான்.

25.07.1983ம் நாள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட 35 அரசியல் கைதிகள் மீதான படுகொலை வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கியவன் இவனே.

வெலிக்கடையில் இவன் நடத்திய வெறியாட்டத்துக்கு சன்மானமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரின் மெய்ப் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டான்.

சோமபால ஏக்கநாயக்க - இவன் விமானம் கடத்திய வீரன் எனப் பாராட்டுப் பெற்றவன். இத்தாலியப் பெண்ணான தன் காதலியைத் தன்னிடம் ஒப்படைக்கவேண்டுமெனக் கோரி இத்தாலிய விமானத்தைக் கடத்தியவன். பின்பு இவன் கைது செய்யப்பட்டு வெலிக்கடையில் சிறைத் தண்டனை அனுபவித்தவன்.

27.07.1983 அன்று வெலிக்கடையில் நடத்தப்பட்ட 18 அரசியல் கைதிகளின் கோரப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்தியவன்.

வெலிக்கடையில் இவன் நடத்திய படுகொலைச் சாதனைக்குச் சன்மானமாகச் சில நாட்களில் இவன் விடுவிக்கப்பட்டதுடன் விமானப் படையில் இணைத்துக் கொள்ளப்படுகிறான்.

இவற்றிலிருந்தே மனிதகுல விரோதமான இக்கொடூரப் படுகொலைகள் எவ்வாறு ஆட்சியதிகாரத்திலிருந்த அதிகார பீடங்களால் திட்டமிடப்பட்டு வழி நடத்தப்பட்டு அரங்கேற்றப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். நிராயுத பாணிகளான கைதிகளைக் கொன்று குருதி குடித்தவர்கள் கௌரவிக்கப்பட்டு பதவிகள் வழங்கப்பட்ட அநாகரீகம் பகிரங்கமாகவே தர்மிஷ்டரின் ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி இப்படுகொலைகளில் பங்குகொண்ட ஏனைய கைதிகள் சிறிது காலத்தின் பின்பு திறந்த வெளிச் சிறைச்சாலை என்ற பேரில் நெடுங்கேணியில் அமைந்திருந்த “கென்ற் பண்ணை”, “டொலர் பண்ணை” ஆகிய 500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பண்ணைகளில் அங்கு 1960 தொடக்கம் குடியிருந்த 800 மலையகக் குடும்பங்களை விரட்டிவிட்டுக் குடியேற்றப்படுகின்றனர். அங்கும்கூட அவர்களின் கொலை வெறி அடங்கவில்லை. மாடுதேடியோ வேட்டைக்கோ தேன் எடுக்கவோ செல்லும் அயற் கிராமவாசிகளின் கழுத்துக்களை வெட்டிக் கொண்டு செல்லும் கோரச் செயல்களை நடத்தினர். இக்கொடுமைகளைத் தாங்க முடியாத நிலையில் விடுதலைப் புலிகள் அச் சிங்களக் கைதிகள் அனைவரையும் ஒன்றுகூட்டி அங்குள்ள சனசமூக நிலையக் கட்டிடத்துக்குள் அடைத்து விட்டு குண்டு வைத்துத் தகர்த்து விடுகின்றனர்.

இவ்வாறு 1983 ஜுலை மாதம் தமிழ் உயிர்களைத் தேடித்தேடி அழித்துத் தன்மேல் கறுப்பு வர்ணம் பூசிக் கொண்டது.

வெலிக்கடைச் சிறையில் 25.07.1983 அன்று பிற்பகல் 2 மணியளவில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் களனித் தொகுதியைச் சேர்ந்த ஜெயிலர் மேஜர் ஜெயசேகர கோணாவல சுனிலிடம் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு 400 சிறைக்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை மண்டபத்தைத் திறந்து விடுகிறான்.

சிங்களக் கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துத் திறந்து மண்வெட்டி, கோடரி, அலவாங்கு, குத்தூசி போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட பி- 3 மண்டபம் திறந்து விடப்படுகிறது. ஆயுதங்களுடன் பாய்ந்த சிங்களக் கைதிகள் பி.3 மண்டபத்துக்குள் பெரும் கூச்சலோடு புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை வெட்டியும் குத்தியும் அடித்தும் கொலை வெறியாட்டம் போடுகின்றனர். மரண ஓலம் சிறைச் சுவர்களில் மோதி எதிரொலிக்கிறது. பின்பு கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் குறை உயிரில் துடித்துக்கொண்டிருந்தவர்களையும் வெளியே இழுத்து வந்து எச் மண்டபத்தின் முன்னாலுள்ள புத்தர் சிலையின் முன் போடுகிறார்கள்.

குட்டிமணி நீதிமன்றில் ஆற்றிய உரையின்போது தனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு தனது கண்களை வேறு ஒருவருக்கு வழங்கும்படியும் அதன் மூலம்தான் மலரப் போகும் தமிழீழத்தைக் காணவேண்டுமெனவும் கேட்டிருந்தார்.

ஒரு கொலை வெறியன் குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து ஒரு கம்பியில் குத்தி வைத்துக்கொண்டு கூத்தாடினான். குறை உயிரில் முனகிக் கொண்டிருந்தவர்களை கம்பிகளால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் உடல்களைச் சின்னாபின்னப்படுத்தினர்.

சில கைதிகள் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தைத் தங்கள் உடல்களில் பூசிக் கொண்டு கூச்சலிட்டுக் கூத்தாடினர். பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான கொலை வெறியாட்டம் இரவுவரை நீடித்தது. சிறைச்சாலை அதிகாரிகளோ பணியாளர்களோ அவற்றைத் தடுக்கமுயலவில்லை. மாறாக சற்றுத் தொலைவில் நின்று பார்த்து உற்சாகமூட்டினர். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ இராணுவத்தினரோ உடனே வரவும் இல்லை.

கொழும்பு மாநகரெங்கும் தமிழரின் உயிர்களும் உடைமைகளும் தீயில் எரிந்து அணைத்துக் கொண்டிருந்தபோது வெலிக்கடைச் சிறையில் புத்த பகவானின் சிலையின் முன்பு சின்னாபின்னப்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன.

கொல்லாமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, காம விகாரம் கொள்ளாமை, பொய் பேசாமை, போதைப் பொருட்களைப் பாவியாமை, மது அருந்தாமை என்ற பஞ்ச சீலக் கொள்கைகளைப் போதித்த புத்த பகவானின் பௌத்த மதத்தை அரச மதமாகக் கொண்ட ஆட்சியில் அந்த ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலையில் 35 உயிர்கள் கொடூரமாகப் பறிக்கப்பட்டு புத்தர் சிலை முன் உடல்கள் போடப்பட்டன. புத்தர் சிலை முன் கொன்று போடப்பட்டவை தமிழர்களின் உடல்கள் மட்டுமல்ல புனிதமான பௌத்தமும் தான். 25ம் திகதி 35 தமிழ் அரசியல் கைதிகளின் கொலை அரங்கேற்றப்பட்ட நிலையில் நீதிமன்றத் தீர்ப்பும் ஜனாதிபதியின் ஒப்புதலுமின்றியே 35 மரண தண்டனைகள் காடைத்தனமாக ஜனநாயகத்துக்குப் புதிய விளக்கம் வழங்கப்பட்ட பின்பு 26ம் திகதியும் 27ம் திகதி பகல் பொழுதும் வெலிக்கடைச் சிறை அமைதியாகவே கழிந்தது.

27.07.83 மாலை நாலு மணியளவில் சப்பல் பகுதியிலுள்ள ஏ-3 சிறைக்கூடம் திறந்து விடப்பட்ட சேபால ஏக்கநாயக்க தலைமையிலான ஒரு தொகை சிங்களக் கைதிகள் வை.ஓ. கட்டிடம் நோக்கிப் பெரும் ஆரவாரத்துடன் பாய்ந்து வருகின்றனர். இக்கட்டிடத்திற்குள் உள் நுழைவதென்றால் 3 இரும்புக் கதவுகளையும் ஒரு சிறுகதவையும் உடைத்துக்கொண்டு ஒரு சுவரையும் தாண்ட வேண்டும். சிங்களக் கைதிகளுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. அனைத்தும் திறந்து விடப்படுகின்றன.

வந்தவர்களிடம் அறைகளின் சாவிக்கொத்து இருந்தது. ஒரு அறையைத் திறந்தபோது முன்னால் வந்த மருத்துவர் இராஜசுந்தரத்தின் தலையில் விழுந்த அடியில் அவர் மண்டை பிளந்து விழுகிறார். மற்றவர்கள் கையில் கிடைத்தவற்றையும் சிங்களக் கைதிகள் கொண்டு வந்த கம்பிகள் சிலவற்றைப் பறித்துப் போராடுகிறார்கள். ஜீவமரணப் போராட்டம் தொடர்கிறது. தமிழ்க் கைதிகள் ஒரு மேசையை உடைத்து அதன் கால்களைப் பாவித்துத் தற்காப்புத் தாக்குதலை நடத்துகின்றனர். எனினும் அங்கு மருத்துவர் இராஜசுந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்படுகின்றனர்.

அடுத்த அறைப் பூட்டை உடைத்துச் சிங்கள வெறியர்கள் உள்நுழைய முயன்றபோது தமிழ் கைதிகள் படுக்கை விரிப்புகளைச் சிறைக் கம்பிகளில் சுற்றி இழுத்துப் பிடிக்கின்றனர். சாப்பாட்டுக் கோப்பைகளாலும் குவளைகளாலும் கதவை இழுத்துத் திறக்க முயன்றவர்களைத் தாக்குகின்றனர். அவர்கள் கொண்டு வந்த கம்பி ஒன்றைப் பறித்து தமிழ் கைதி ஒருவர் அவர்களைத் தாக்குகிறார்.

மேல் தட்டில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் கம்பிகளால் தட்டியும் கூச்சல் போட்டும் கத்துகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மேல்மாடியிலிருந்து தங்களைத் தாக்கத் தமிழ்க் கைதிகள் வருவதாக எண்ணி பின் வாங்கத் தொடங்குகின்றனர். இம் மோதலில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 20 கைதிகள் காயங்களுடன் உயிர் தப்புகின்றனர்.

இந்நிலையில் விசாரணைக் கைதிகள் பிரிவிலுள்ள கைதிகள் பூட்டை உடைத்துத் தப்ப முயல்கின்றனர். நிலைமை ஆபத்தாக மாறவே படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அனைத்துக் கைதிகளையும் உள்ளே தள்ளிப் பூட்டுகின்றனர்.

அன்றும் மொத்தமாக 18 தமிழ் அரசியல் கைதி்கள் கொல்லப்படுகின்றனர்.

1983ம் ஆண்டின் ஜுலை 25, 27ம் திகதிகளில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பொலிஸார் இராணுவத்தினர் முன்னிலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதற்கு ஆட்சியிலுள்ள அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் பொறுப்புக் கூறாதது மட்டுமல்ல குறைந்த பட்சம் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. விசாரணைகள் நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை. ஆனால் கொலை வெறியாட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய கோணாவல சுனில், சேபால ஏக்கநாயக்க ஆகியோருக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

இலங்கையில் பௌத்த மதம் அரச மதமாக்கப்பட்டமை ஏனைய மதங்களை ஒடுக்குவதற்கேயொழிய புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதற்காக அல்ல என்பது மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப்படு வது மட்டும் உண்மை.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

25.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE