Friday 26th of April 2024 06:34:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
காபூலில் மற்றொரு பாரிய தாக்குதல் எச்சரிக்கை; இன்று அல்லது நாளை வெளியேறுகிறது அமெரிக்கா!

காபூலில் மற்றொரு பாரிய தாக்குதல் எச்சரிக்கை; இன்று அல்லது நாளை வெளியேறுகிறது அமெரிக்கா!


காபூல் விமான நிலையத்தின் மீது மற்றொரு பாரிய தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இந்நிலையில் மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு கூடிய விரைவில் அமெரிக்கா படைகள் முழுமையாக ஆப்கானில் இருந்து வெளியேறும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

அத்துடன், நம்பகமாக தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால் அனைத்து அமெரிக்க குடிமக்களும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உட்பட 170 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கிளைக் குழுவான ஐ.எஸ். -கே. அமைப்பு உரிமை கோரியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். -கே. அமைப்பின் நிலைகளை இலக்குவைத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் இறுதியானது இல்லை. காபூல் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் தேடி அழிப்போம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாதக் குழுக்களிலும் ஐ.எஸ்.-கே. மிகவும் தீவிரமானது. அத்துடன் மோசமான வன்முறைக் குழுவாக உள்ளது. தலிபான் இயக்கத்துடனும் இந்தக் குழு கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்கர்களுடன் தலிபான்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் இந்தக் குழு கண்டனம் வெளியிட்டது.

இந்நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து அமெரிக்கா தங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீட்புப் பணி தொடங்கியதில் இருந்து அடுத்த சில நாட்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தைச் சுற்றி தலிபான்கள் மேலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். அத்துடன், பெரும்பாலான ஆப்கானியர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்புப் பணி தொடங்கியதிலிருந்து 110,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள், ஆப்கானியர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் - காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று சனிக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாலியின் இறுதி விமானம் ரோம் சென்றடைந்தது. காபூலில் இருந்து ஏறக்குறைய 5,000 ஆப்கானிஸ்தான் குடிமக்களை வெளியேற்றியுள்ளதாக இத்தாலி கூறியது.

ஆகஸ்ட் 17 முதல் 2,800 -க்கும் அதிகமானவர்கள் மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஜேர்மனி சுமார் 4,000 ஆப்கானியர்களை அழைத்துச் சென்றதாகக் கூறியது.

இங்கிலாந்து இறுதி விமானமும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் இனியும் விமானம் மூலம் தப்பிச் செல்வது கடினம் என்பதால் பல ஆப்கானிஸ்தானர்கள் இப்போது நில எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து தஞ்சம் கோர முயன்று வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE