Friday 26th of April 2024 04:42:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ குணரத்னவின் மறைவுக்கு பிரதமர் மகிந்த இரங்கல்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ குணரத்னவின் மறைவுக்கு பிரதமர் மகிந்த இரங்கல்!


சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ குணரத்னவின் மறைவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமரின் ஊடக்கப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இரங்கல் செய்தி - 2021 ஆகஸ்ட் 29

ஆறு தசாப்த காலங்களுக்கு மேலாக இந்நாட்டின் பத்திரிகை துறைக்கு சிறப்பான சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ குணரத்ன அவர்களின் திடீர் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த கவலையடைந்தேன்.

எல்மோ குணரத்ன அவர்கள் ஊடகத்துறையில் பன்முக திறமையும் சிறந்த ஆளுமையும் வாய்ந்த விருது பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளராவார். சட்டக் கல்வி மாணவராக விளங்கிய எல்மோ குணரத்ன அவர்கள் 1954ஆம் ஆண்டு உள்ளூர் நிறுவனமொன்றின் வெளியீடான 'சிங்கள ஜாதிய' மற்றும் 'கார்டியன்' ஆகிய பத்திரிகைகளில் நீதிமன்ற செய்தியாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

எல்மோ குணரத்ன அவர்கள் 1955ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்தமையானது அவரது ஊடக வாழ்க்கையின் திருப்புமுனையாக விளங்கியது. 'சிலுமின', 'ஜனதா', 'டேலி நிவுஸ்' மற்றும் 'சன்டே ஒப்சர்வர்' பத்திரிகைகளில் பொலிஸ் மற்றும் அரசியல் செய்தியாளராக நீண்ட கால பயணத்தை ஆரம்பித்தார்.

பொதுநலவாய ஊடக சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை நெறியை கற்கச் சென்ற எல்மோ குணரத்ன அவர்கள், அங்கு கல்வி கற்றுக் கொண்டே 'ரொய்டர்', 'நிவுஸ் ஒஃப் த வேர்ல்ட்' மற்றும் 'மென்சஸ்டர் கார்டியன்' ஆகிய பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

லேக்ஹவுஸ் வெளியீட்டிலான பல பத்திரிகைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த அவர், 1973ஆம் ஆண்டு அந்நிறுவனம் அரசமயப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பை தெரிவித்து எல்மோ குணவர்தன அவர்கள் சேவையிலிருந்து விலகினார்.

தாய்லாந்து பாங்கொக்கிலிருந்து வெளியாகும் 'மோர்னிங் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் சில காலம் சேவையாற்றிய எல்மோ குணரத்ன அவர்கள், இந்நாட்டின் ஊடக துறைக்கு மீண்டும் தனது தீவிர பங்களிப்பை வழங்கி 1978ஆம் ஆண்டு 'டைம்ஸ்' மற்றும் 'டேலி மிரர்' பத்திரிகைகளில் பிரதி ஆசிரியராக சேவையை ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து 'டைம்ஸ்' நிறுவனத்தின் அனைத்து சிங்கள வெளியீடுகளினதும் நிர்வாக ஆசிரியராகவும் சிங்கள மற்றும் ஆங்கில வெளியீடுகளின் முகாமைத்துவ ஆசிரியராகவும் விளங்கியமை பத்திரிகைத் துறை வரலாற்றில் மறக்க முடியாத பதிவாகும்.

ஊடகத் துறையில் சிறந்து விளங்கிய பலரில் முன்னணியில் திகழ்பவர் எல்மோ குணரத்ன ஆவார்.

தனக்கே உரிய மொழி நடையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஊடக பணிகளை முன்னெடுத்த எல்மோ குணரத்ன அவர்கள் ஊடக துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயன்ற ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.

தனது 89ஆவது வயதில் காலமான எல்மோ குணரத்ன அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் புதல்வர்கான ஹர்ஷ குணரத்ன, துஷார குணரத்ன மற்றும் ரஜீவ் குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்

பிரதமர்


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE