Friday 26th of April 2024 05:02:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்திய விஜயம்; தமிழ்நாட்டு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சந்திப்பு!

இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்திய விஜயம்; தமிழ்நாட்டு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சந்திப்பு!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்திய விஜயம் மேற்கொண்டு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு கடந்த ஆகஸ்ட் 29 திகதி முதல் செப்டெம்பர் 04 ஆம் திகதி வரை சென்னையில் பல முக்கிய அரசியல்வாதிகளை ஜீவன் தொண்டமான் சந்தித்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வை.கோபால்சாமி, கே.எஸ்.அழகிரி, மு.க.கனிமொழி, கே.பி.பெரியகருப்பு, தொல். திருமாவளவன், பழ.நொடுமாறன், அன்பில் மகேஷ், நைமர் நாகேந்திரன் போற்றோருடன் மரியாதை நிமிர்த்தமான சந்திப்புகளிலும், உத்தியோக பூர்வ சந்திப்புகளிலும் ஈடுப்பட்டிருந்தார்.

மேலும் இவர்களை சந்தித்து பேசிய ஜீவன் தொண்டமான் ஆசிகளையும் பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், மலையக இந்திய வம்சாவளி சமூகத்தின் கல்வி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் இம்மக்களின் வாழ்வியல் நிலை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் (ஐயா) இந்திய தமிழ்நாட்டு அரச தலைவர்களுடன் பேணி வந்த நட்பை, இவரின் மறைவையடுத்து காங்கிரஸின் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தி வந்த அமரர் ஆறுமகன் தொண்டமான் புதுப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து தற்போது இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸின் செயலாளராக பெறுப்புகளை ஏற்று வழிநடத்தி வரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான ஜீவன் குமாரவேல் தொண்டமான் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் என்ற தனது பதவியோடு தமிழ்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு ஆட்சியில் உள்ள தலைவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கிடையிலான உறவுகளை புதுபித்துள்ளார்.

இவ்வாறு இடம்பெற்றுள்ள சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடலில் ஈடுப்பட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தமிழ் நாட்டின் சட்டமன்ற தலைவர்களுடன் இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்களை வழிநடத்தும் பிரதிநிதியாக பல்வேறு விடயங்களையும் முன்வைத்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டிற்கும், இலங்கை மலையக பிரதேச இந்திய வம்சாவளி மக்களுக்கிடையிலான நீண்டகால உறவு மற்றும் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் மக்களுக்கு தமிழ்நாட்டு அரசு முன்வைத்திருக்கும் நலத்திட்டங்கள் மற்றும் பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மலையக மக்களுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், கல்வி மேன்பாட்டுக்கான உதவிகள், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும், உறவுகள் என பல விடங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விஜயத்தின் நோக்கமானது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாடு முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நலத்திட்டங்களை வரவேற்று தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதலில் நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு

அந்த வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்துவாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளதுடன்,

தமிழ்நாட்டு முதலமைச்சராக சரித்திர வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு முகாம்களில் தங்கிவாழும் இலங்கை தமிழ் மக்களின் நலத்திட்டத்திற்கென 317 கோடி ரூபா நிதியொதுக்கி அதில் நலத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளமைக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் ஜீவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் மலையக மக்கள் வாழ்வியல் மற்றும், அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ளார்.

அத்துடன் மலையகத்தில் அமையவுள்ள பல்கலை கழகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு அரசு முன்னெடுக்கும் நலத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கும் பரிந்துரைப்பதாகவும்,

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மான்புமிகு மு.கா ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பில் இச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதிப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமிடையிலான உறவு நீடிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சட்டமன்ற அமைச்சர் கே.எஸ்.அழகிரி உடனான சந்திப்பு.

இந்த சந்திப்பு மரியாதை நிமிர்தமாக சென்னை நந்தனத்தில் கே.எஸ்.அழகிரியின் வீட்டில் குழுவினருடன் சுமார் ஒருமணிநேரம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாரதத்தின் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு முன்னெடுத்திருந்த நலத்திட்டங்கள் குறித்த விடயங்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறைந்த தலைவர்களுக்கும் கே.எஸ்.அழகிரி குடும்பத்தாருக்கும் இடையில் உள்ள குடும்ப உறவுகள் தொடர்பாகவும் நட்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்ட்டுள்ளது.

பள்ளி கல்வி மேன்பாட்டு அமைச்சர் மகேஷ் உடனான சந்திப்பு.

இவருடான கலந்துரையாடலின் போது இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாகவும், மலையகத்தின் கல்வி அபிவிருத்திகள் தொடர்பாகவும் தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் மேலும் மலையக கல்வி தொடர்பான பல முக்கிய விடயங்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மலையகத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசிற்கும் இடையே சுமூகமான உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும், மலையகத்தின் கல்வி செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையின் மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் நாட்டு அரசின் ஒத்துழைப்பு கிட்டும் பட்சத்தில் எமது மலையக சமூகத்தின் கல்வி முறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் மூலம் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் பல்வேறு கல்வி அபிவிருத்திகள் இலங்கையில் மலையக மாணவர்களுக்கும் வந்தடையும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொல். திருமாளவன் உடனான சந்திப்பு!

இவருடான சந்திப்பு வெளிச்சம் ஊடக காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மரியாதை நமிர்த்தமாக இடம்பெற்ற சந்திப்புக்கு சென்ற ஜீவன் தொண்டமானுக்கு அங்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு தொல் திருமாவளவன் மரியாதை அளித்துள்ளதுடன், ஜீவனும் திருமாவளவன் அவர்களுக்கு பொன்னாடையிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதன் போது இருவருகளுக்கிடையில் நட்பை பகிரும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் பின் ஜீவன் ஊடகத்திற்கு கருத்தும் தெரிவித்துள்ளார்.

இதில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பிரதநியாக இங்கு இதுவரை எவரும் வராத நிலையில் நான் சந்திக்க வந்தேன். வி.சி.கே கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் எனது தந்தை அமரர் ஆறுமுகம் தொண்டமானின் நல்ல நண்பர். இவருடன் இலங்கை நிலமை குறித்து பேசியதுடன், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், மற்றும் மலையக தமிழர்கள் தொடர்பாகவும் பேசினோம்.

அத்துடன் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டு பேசப்பட்டது. இலங்கைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தேன். இலங்கைக்கு வருவதாகவும் அவர் நட்பு ரீதியில் தெரிவித்தார் என கருத்திட்டுள்ளார்.

வைகோவுடன் இடம்பெற்ற சந்திப்பு!

சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் ஜீவன் தொண்டமான் கடந்த (30.08.2021) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தனது தந்தையார் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தமைக்காக வைகோ அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதன்போது தங்களைப் பற்றி, உங்கள் தந்தையார் நிறைய நல்ல விடயங்களை எனக்குச் சொல்லி இருக்கின்றார் என்றும், உங்கள் தாத்தா, பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடன் எனக்கு நீண்ட காலப் பழக்கம் உண்டு. எண்பதுகளில் தொடங்கி, பலமுறை சந்தித்து இருக்கின்றேன். பல நிகழ்வுகளில் அவருடன் ஒன்றாகப் பங்கேற்றும் இருக்கின்றேன். தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப் பணி ஆற்றினார். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கினார் என்றும் வை.கோ ஜீவனிடம் தெரிவித்துள்ளார் .

அதேபோல, உங்கள் தந்தையார் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள், சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பது வழக்கம். எதிர்பாராத வகையில், குறைந்த வயதில் அவர் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியாக இருந்தது என்றும், 26 வயதிலேயே நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள். என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வாழ் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் உங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன என்று, வைகோ குறிப்பிட்டுள்ளார்.

ஆமாம் ஐயா, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, நுவரெலியாவில் ஒரு கல்லூரி அமைக்க உள்ளோம் அதற்கு தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக முதல்வரையும் சந்திக்க இருக்கின்றோம் என அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார். அத்துடன் நீங்கள் இலங்கைக்கு வருகை தந்து அங்கு தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக, தமிழ்நாடு அரசு ரூ 317 கோடி நிதி ஒதுக்கி இருப்பதை வைகோ குறிப்பிட்டதை தொடர்ந்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

மு.க.கனிமொழி உடனான சந்திப்பு!

இந்த சந்திப்பில் இலங்கை மலையக வாழ் இந்திய வம்சாவளி சமூகத்தின் தற்போதைய வாழ்வு நிலை குறித்து பேசியுள்ளார்.

மேலும் முன்னால் அமைச்சரும் தனது தந்தையுமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அழைப்பின் பேரில் இலங்கை மலையக பகுதிக்கு வருகைதந்த மு.க.கனிமொழி மலையகத்தில் கண்டறிந்த விடயங்களை ஜீவனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மலையக மக்களின் வாழ்வாதாரம், கல்வி அபிவிருத்தி, மற்றும் இம் மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்படுமெனவும் ஜீவனிடம் மு.க.கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் இளம் வயதில் மக்கள் சேவையை செய்ய துணிந்து களம் இறங்கியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் எனவும், மேலும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் நிலை, மற்றும் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் மக்களின் நலத்திட்டங்கள், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு, மலையக மக்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு தொடர்பிலும், மலையக மக்களுக்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் மற்றும் இன்றி முக்கிய தலைவர்கள் ஊடாக அபிவிருத்திகளுக்கென செய்யக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் பேசியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE