Friday 26th of April 2024 10:40:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடல் மார்க்கமாக தாயகம் திரும்ப முற்பட்ட முள்ளியவளைப் பெண் தமிழக கடற்பரப்பில் கைது!

கடல் மார்க்கமாக தாயகம் திரும்ப முற்பட்ட முள்ளியவளைப் பெண் தமிழக கடற்பரப்பில் கைது!


கடல் மார்க்கமாக முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் உள்ள தன்னுடைய ஊருக்குத் திரும்புவதற்காக சட்டவிரோதமாக படகில் பயணித்த இளம் பெண், படகில் ஏற்றிவந்தவர்கள் இடைநடுவில் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

முள்ளிவளையைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளம் பெண் பெண் 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னையைச் சென்றடைந்து விசா முடிவடைந்தும் அங்கு தங்கியிருந்த நிலையில் தனது தந்தையாருக்கு உடல் நிலைப் பாதிப்பு என்பதால் கடல் மார்க்கமாக தாயகம் திரும்ப முற்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.

தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.

அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக தெரியவருகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் படகில் சென்று குறித்த பெண்ணைக் கைது செய்து தனுஷ்கோடி அழைத்து சென்றுள்ளனர்.

மரைன் போலீசார் முதல் கட்ட விசாரணை செய்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளி நாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில் அழைத்துச் சென்ற முகவரை தேடி வருகின்றனர்.

கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் அவர் முற்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, வட மாகாணம், தமிழ்நாடு, முள்ளியவளை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE