Friday 26th of April 2024 04:21:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
தாய்வான் - சீனா பதட்ட நிலை குறித்து  ஜி ஜின்பிங் உடன் ஜோ பைடன் பேச்சு!

தாய்வான் - சீனா பதட்ட நிலை குறித்து ஜி ஜின்பிங் உடன் ஜோ பைடன் பேச்சு!


தாய்வான் மற்றும் சீனாவுக்கு இடையிலான பதட்ட நிலை அதிகரித்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று செய்வாய்க்கிழமை சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பேசினார்.

இதன்போது தாய்வான் ஒப்பந்தத்துக்கு இணங்கிச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நான் தாய்வானைப் பற்றி ஜி ஜின்பிங்குடன் பேசினேன். நாங்கள் தைவான் ஒப்பந்தத்திற்கு கட்டுப்படுவோம் என்று அவர் கூறினார். ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்பதை அவரிடம் தெளிவுபடுத்தினேன் என ஜோ பைடன் குறிப்பிட்டார்.

தாய்வான் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. ஆனால் தாங்கள் இறைமையுள்ள தனி நாடு என தாய்வான் உறுதியாகக் கூறி வருகிறது.

இந்நிலையில் தாய்வானை அச்சுறுத்தும் வகையில் அதன் வான்வெளியில் தனது விமானங்களை அடிக்கடி அனுப்பி அந்நாட்டின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் சீனா நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் பீஜிங்கிடம் இருந்து பெரிய அழுத்தத்தை தாய்வான் எதிர்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை முதலான நான்கு நாட்களில் மட்டும் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 148 சீன விமானப்படை போர் விமானங்கள் நுழைந்து வெளியேறியுள்ளன.

இந்நிலையில் சீனா திட்டமிட்டு பதட்டத்தை உருவாக்கி வருவதாக தாய்வானின் முக்கிய சர்வதேச ஆதரவு நாடான அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே உருவாகியுள்ள பதட்டங்கள் குறித்து ஜோ பைடன் நேற்று சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேசினார்.

இதேவேளை, சீனாவின் அச்சுறுத்தலை சா்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். இது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக அமையும். ஜனநாயகத்தின் மீதான சா்வாதிகாரத்தின் ஆதிக்கத்தை உணர்த்தும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

தாய்வான் சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்க சாய் இங்-வென் மறுத்து வருவதால் அவரை பிரிவினைவாதி என சீனா விமர்சித்து வருகிறது.

ஆனால் தாய்வான் ஒரு இறைமையுள்ள சுதந்திர நாடு. அது எந்தவொரு நாட்டின் பகுதியும் அல்ல என சாய் இங்-வென் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் இராணுவ ரீதியான மோதலை விரும்பவில்லை. சீனா உட்பட அண்டை நாடுகளுடன் பரஸ்பரம் நன்மை பயக்கும் நல்லுறவையே விரும்புகிறது.

எனினும் தாய்வானின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வோம் எனவும் சாய் இங்-வென் எச்சரித்துள்ளார்.

சிக்கல்களுக்குத் தீா்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனாவுக்கு சாய் இங்-வென் மீண்டும் அழைப்பு விடுத்தார். ஆனால் இவ்வாறான அழைப்புக்களை சீனா பலமுறை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE