Saturday 4th of December 2021 01:38:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
தோற்கடிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்! - நா.யோகேந்தி்ரநாதன்!

தோற்கடிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்! - நா.யோகேந்தி்ரநாதன்!


ஒரு நாட்டின் தலைவர் உரையாற்றுகிறாரென்றால் அவ்வுரை தொடர்பான ஆழமான எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். அதிலும் ஒரு நெருக்கடி நேரத்தில் வெளியிடப்படும் உரைக்கு மேலும் முக்கியத்துவம் உண்டு.

அவ்வகையில் கடந்த வாரம் அனுராதபுரம் சாலியபுர படை முகாமில் கஜபா படையணியின் 72வது ஆண்டு நிறைவு விழாவின்போது இடம்பெற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வின் உரை தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு காத்திரமான எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக நாடு தற்சமயம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்ற மக்கள் மும் கொடுக்கும் இன்னல்கள் தொடர்பாகவும் அவற்றைத் தீர்ப்பது பற்றியும் ஏதாவது வழிமுறைகள் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக அத்தகைய எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்தது. அது மட்டுமின்றி ஜனாதிபதி தனது வாயாலேயே தன்னை நம்பி வாக்களித்த 69 இலட்சம் மக்களின் விருப்பங்களைத் தி்ருப்திப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேவேளையில் வழமையாக அவரின் உரைகளில் இடம்பெறும் ஒரு நாடு, ஒரே சட்டம், பயங்கரவாதம், மத அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் அச்சமின்றி பணியாற்றுவதற்கான சுதந்திரம் என்பன பற்றிக் குறிப்பிட்டதுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த உரையை நாம் உன்னிப்பாக நோக்கும்போது முக்கிய விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.

அதாவது உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு மூலம் பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பேரில் பொலிஸாரும். புலனாய்வுப் பிரிவினரும் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு நாடு பரந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட முடியும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

அதேவேளையில் வாழ்க்கைச் செலவு உயர்வு, ஊதிய உயர்வு கோரிக்கை, வேலையற்றோர் பிரச்சினை என்பன தொடர்பாக மக்கள் போராட்டங்களை நடத்தினால் பொலிஸார், புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் மூலம் அவை ஒடுக்கப்படும்.

ஒட்டு மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது மட்டுமின்றி சிங்கள மக்கள் மீதும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள நிறைவேற்று அதிகாரம் நூறு வீதம் பயன்படுத்தப்படும். அதாவது எந்த 69 இலட்சம் மக்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக கோத்தபாயவை சிம்மாசனம் ஏற்றினார்களோ அவர்களுக்கு எதிராக நிறைவேற்று அதிகாரம் பிரயோகிக்கப்படும்.

இன்னொருபுறம் நிறைவேற்று அதிகாரம் செயலிழந்து போயுள்ளதை நாம் அவதானிக்கமுடியும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கல், ஊழல் மோசடி கறுப்புச் சந்தை என்பவற்றைத் தடுத்து நிறுத்தவும், ஜனாதிபதியால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

அரிசி, சீனி, பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.

இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆரம்பத்தில் சில சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்பது உண்மைதான். சுற்றி வளைப்பில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு உரிய விலைகள் கொடுக்கப்பட்டு அரசாங்கம் கொள்முதல் செய்தது. அவற்றை ச.தொ.ச. மூலமும் தனியார் வியாபாரி்கள் மூலமும் மக்களுக்கு விநியோகிகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பதுக்கல் என்பது ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும். ஆனால் கைப்பற்றப்பட்ட பதுக்கல் பொருட்களை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கும் அதிசயம் எங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஒருசில நாட்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களால் நிர்ணய விலையில் அரிசியை விற்க முடியாதெனக் கூறித் தமது உற்பத்தியை நிறுத்தி விட்டனர். இவ்வாறே பால்மா, சீனி, கோதுமை, எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்களும் தங்கள் இறக்குமதிகளை நிறுத்தி விட்டனர். துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்க ஆரம்பித்தன.

நாடு பரந்த ரீதியில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்ட நிலையில் அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகள் அறிவித்த வர்த்தமானியைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதேநிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களும் இறக்குமதியாளர்களுமே பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகி விட்டனர்.

இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவேண்டுமென்ற குரல் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்தும் எழுந்துள்ளன. அதுவும் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விடயம் நிறைவேற்று அதிகாரம், அதனால் நியமிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணைக்குழு, அவசரகாலச் சட்டம் என அனைத்து அதிகாரங்களும் உள்ளூர் வர்த்தக முதலைகளிடமும் இறக்குமதி நிறுவனங்களிடமும் படுதோல்வியடைந்து விட்டன என்ற உண்மையாகும்.

ஆனால் யார் இந்த அரசாங்கத்தை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் ஏற்றினார்களோ அவர்கைளைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகாரம் இன்னும் வலிமை குன்றாமலே உள்ளது.

ஒரே நாடு, ஒரே சட்டம்; பயங்கரவாதம், மதவாதம் தலைதூக்க விடாதிருப்பது; பொலிஸாருக்கும் புலனாய்வுப் பரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பவற்றின் மூலம் மக்கள் மீதான நிறைவேற்று அதிகாரம் பாய்வதற்குத் தயார் நிலையிலேயே உள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை என்பன காரணமாக மூச்சுத் திணறும் சாதாரண மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட முடியாதவாறு அவசரகாலச் சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் என்பன மக்களின் கழுத்துக்கருகில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் மூலம் இச் சட்டங்கள் மேலும் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படியன ஒரு சூழ்நிலையில்தான் ஜனாதிபதி தனது உரையில் தன்னைத் தெரிவு செய்த 69 இலட்சம் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்ய முடியவில்லையெனவும் பழியைக் கொரோனாவில் போட்டும் கண்ணீர் விட்டிருக்கிறார்.

ஆனால் இலங்கையின் பெரும் வர்த்தக முதலைகளாலும் ஊழல் மோசடி பேர்வழிகளாலும் அவரின் நிறைவேற்று அதிகாரம் தோற்கடிக்கப்பட்டாலும் மக்கள் மீதான ஒடுக்குமுறையில் நிறைவேற்று அதிகாரம் மேலும் வீரியமடைந்து செயற்படுகிறது என்பதே உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகந்திரநாதன்.

19.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE