Thursday 20th of January 2022 08:32:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமேல் மாகாண ஆளுனராக வசந்த கரன்னகொட! - நா.யோகேந்திரநாதன்!

வடமேல் மாகாண ஆளுனராக வசந்த கரன்னகொட! - நா.யோகேந்திரநாதன்!


முன்னாள் கடற்படைத் தளபதியும் கப்பம் கோரி தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, அவர்களில் 11 பேர் கொல்லப்பட்ட படுகொலைகளின் பிரதம சூத்திரதாரியாகக் கருதப்பட்டவருமான வசந்த கரனன்கொட அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் அவர் வடமேல் மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அவரின் விடுதலை அவரின் நியமனம் என்ற இரு அறிவிப்புகளும் மனித உரிமையாளர்கள் மத்தியிலும் நியாயங்களைத் தேடும் மனிதர்கள் மத்தியிலும் கணிசமான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அந்த இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டபோது மனோ கணேசன், விக்கிரமராச்சி, ஸ்ரீதுங்க, பிரியாணி போன்ற முற்போக்காளர்களும் களத்தில் இறங்கி மேலும் இளைஞர்கள் காணாமற் போவதைத் தடுத்தனர்.

2006 – 2009 காலப்பகுதியில் 11 கொழும்பிலுள்ள வசதி படைத்த தமிழ் இளைஞர்கள் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டுக் காணாமற் போயினர். அவர்கள் கடத்தப்பட்டு கொழும்பிலுள்ள கடற்படை முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பின்பு அவர்கள் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கடற்படையினரின் நிலத்திற்கு அடியிலுள்ள கன்சைட் புலனாய்வுப் பிரிவு முகாமில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இக்கடத்தல்கள், கொலைகள் பற்றி ஆதாரபூர்வமான ஆதாரங்களுடன் நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். அதையடுத்து பல கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இறுதியில் தளபதி வசந்த கரனன்கொடவும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, நல்லாட்சி அரசாங்கத்தினர் தேசத்துக்கு விசுவாசமான படையதிகாரிகளையும் புலனாய்வாளர்களையும் அநீதியான முறையில் கைதுசெய்துவிட்டனர் எனவும் அதன் காரணமாக மேற்படி வழக்கிலிருந்து கடற்படை அதிகாரிகள், புலனாய்வாளர்கள் விடுவிக்கப்பட்டதுடன், அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் வசந்த கரணங்கொடவும் விடுவிக்கப்பட்டார்.

அவர் தற்சமயம் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

இலங்கை ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உட்பட்ட நாடு என்ற வகையில் வசந்த கரனங்கொடவின் விடுதலை, அவருக்கு உயர்மட்டப் பதவி வழங்கப்பட்டமை போன்ற விடயங்கள் எமது மக்கள் மத்தியில் 3 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஒன்று – நாம் ஆட்சியதிகாரத்திலுள்ளவர்களுக்கு 100 வீத விசுவாசமாகச் செயற்பட்டு வந்தால் நாட்டில் அத்தகைய கொடிய சட்டமீறல்களிலும் ஈடுபட்டு விட்டு தப்பி விடமுடியுமா? தப்புவது மட்டுமின்றி மீண்டும் தொடர்ந்து உயர் அதிகாரமுள்ள பதவிகளை வகிக்க முடியுமா?.

இரண்டாவது – ஐக்கி்ய நாடுகளின் சித்திரவதைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்பு போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு வன்முறைகளுக்கும் எதிரான ஐ.நா.வின் அமைப்பு, மனிதப் பண்பு மீறப்பட்ட முறையில் தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை மூலம் உயிர் கொல்லப்பட்டமை போன்ற விடயங்களை திருமலைக்கு நேரில் விஜயம் செய்து விசாரணை நடத்தி ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும், சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே ஐ.நா. அமைப்பின் விசாரணைகளும் முடிவுகளும் நிராகரிக்கப்படுகின்றன என்ற உண்மையும் உணரப்படவேண்டும். ஏன் அப்படி உணரப்படவில்லை?

மூன்றாவது - இலங்கை ஜனநாயக வடிவத்திலான அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட நாடு இலங்கையின் முழு விடயங்களுக்கும் மூலாதாரமாக உள்ளது இலங்கையின் அரசியலமைப்பே, எந்த ஒரு சட்டச் சிக்கலும் இறுதியில் அரசியலமைப்பின் அடிப்படையிலே தீர்த்துக்கொள்ளப் படும். அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றமே நாட்டின் அதி உயர்ந்த பட்ச அதிகார மையமாக நோக்கப்படுகின்றது.

எந்தவொரு வழக்கிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் அரசியலமைப்புக்கு உட்பட்டே வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வழக்கும் அதன் குற்றச்சாட்டுகளும் எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு விசாரிக்கத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே சட்ட மா அதிபரின் கடமையாகும். முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படப் போதிய ஆதாரங்கள் உண்டா என்பதை அவர் ஆழமான பரிசீலனை மூலம் அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ற விதத்திலேயே முடிவு செய்யப்படமுடியும்.

அப்படியிருந்தும் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த ரிசாட் பதியுதீன், ஆஸாத் சாலி போன்றவர்கள் 1 வருடத்துக்கு மேலாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுப் பின்பு ஆதாரமில்லையென விடுவிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க மீது அவரின் சிறைவாசம் முடிவடைய மீண்டும் சிறைக்கு அனுப்பும் வகையில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. நீதி மன்றத்தை அவமதித்த குற்றத்தில் சிறை செய்யப்பட்ட ஞானசார தேரர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு “ஒரே சட்டம் ஒரே நாடு” என்ற கொள்கையை அமுல்படுத்தும் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் அரசாங்க ஆதரவாளர்களிடம் ஒருவிதமாகவும் எதிரணியினர் மீது இன்னொரு விதமாகவும் சட்டம் செயற்படுமா என்ற மூன்றாவது கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இன்றைய சூழலில் இம்மூன்று கேள்விகளும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த போதிலும் இன்னும் பல கேள்விகளும் உலா வராமல் இல்லை.

2010 – 2015 காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக ஆட்சி நடத்திய போது “ஒரே நாடு ஒரே மக்கள்“ என்ற சுலோகம் முன்வைக்கப்பட்டது. அந்த நாட்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இன, மத ஒடுக்குமுறைகளும், ஆலயங்கள், மசூதிகள் மீதான தாக்குதல்களும். இனவன்முறைகள், படுகொலைகளும், கைதுகளும் காணாமற் போதல்களும் தாராளமாகவே இடம்பெற்றன.

2019 தொடக்கம் இடம்பெற்றுவரும் கோத்தபாய ராஜபக்ஷ் ஆட்சியில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற சுலோகம் முன்வைக்கப்பட்டது. அரச தரப்பினருக்கு ஒரு சட்டம், எதிர்த்தரப்பினருக்கு ஒரு சட்டம் என்ற நடைமுறை “ஒரே நாடு, ஒரே சட்டம்” கோஷத்திற்கு அடங்குமா என்பது பற்றிய விபரம் தெரியவரவில்லை.

எப்படியிருந்த போதிலும் வசந்த கரன்கொடவின் விடுதலையும் ஆளுநர் நியமன அறிவிப்பும் இலங்கையின் ஜனநாயகம் என்பது உலகில் யாருமே கேள்வி கேட்க முடியாதளவு தனித்துவமும் பெருமையும் கொண்டது என்ற விடயத்தைப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்துள்ளமை ஒரு முக்கிய உண்மையாகும்.

அதேவேளையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்சன்ட் பெர்னாண்டோ அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதில்லை எனக் கூறினார். ஆனால் “நாம் தலையிடத் தேவையில்லை. ஏனெனில் எமது விருப்பத்துக்குப் பணியாற்றும் உயர் மட்ட அதிகாரிகளை உரிய இடங்களில் நியமித்துள்ளோம். அவர்களை எப்படியும் நாம் காப்பாற்றுவோம் என்பது தெரிந்ததால் அவர்கள் துணிந்து எதையும் செய்வார்கள்” எனச் சொல்லாமல் விட்டுவிட்டார். அது அவர்களுக்குத் தேவையுமில்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

14.12.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, இலங்கை, கொழும்புபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE