Friday 26th of April 2024 04:27:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு ஐந்து தமிழ் கட்சிகள் கடிதம்!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு ஐந்து தமிழ் கட்சிகள் கடிதம்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.

2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கான அந்தக் கடிதத்தில்,

"இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள - பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தைக் குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களைத் தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாகப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE