Thursday 25th of April 2024 09:22:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
விமல், கம்மன்பிலவுக்கு சஜித் அணி கதவடைப்பு!

விமல், கம்மன்பிலவுக்கு சஜித் அணி கதவடைப்பு!


"அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ எம்.பி., எம்மிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.”

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறியதாவது:-

"விமல், உதய ஆகியோரின் பதவிகள் காலி. ரத்தின தேரருக்குப் பதவி இல்லை. இருந்தால் அதுவும் போயிருக்கும். இவர்கள் அரசியலில் இலங்கை இனவாத பிதாமைந்தர்கள். ஆகவே, இவர்கள் மீது எவருக்கும் அனுதாபம் இல்லை. நாட்டில் ராஜபக்சர்கள் மீது பெரும் வெறுப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், விமல், உதய ஆகிய இருவரை விட ராஜபக்சர்களுக்கு ஏற்புடைமை உண்டு. இவர்களுக்கு அதுவும் இல்லை.

விமல், உதய இருவரும், ராஜபக்ச ஆட்சியின இன்றைய அலங்கோலங்களுக்குப் பிரதான பொறுப்புக் கூற வேண்டியவர்கள். ராஜபக்சர்கள், இனவாதத்தையும், மத அடிப்படைவாதத்தையும் தூண்டி விட்டே ஆட்சியைப் பிடித்தார்கள். அந்த விடயத்தைப் பொறுப்பேற்று தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் கொண்டு நடத்தியவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு ஆகியோரே ஆகும்.

தமிழ் - முஸ்லிம் எதிர்ப்பு, இந்து - இஸ்லாம் - கத்தோலிக்க எதிர்ப்பு என்ற இன, மத அடிப்படைவாதங்களை இலங்கையில் ஸ்தாபன ரீதியாக முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள் மூவரும்தான். அதை வரலாறு அறியும். நான் நன்கு அறிவேன். இந்த நிமிடம்வரைக்கூட திருந்தாத இவர்கள் இடம்பெறும் ஆட்சியில் இடம்பெற நான் தயார் இல்லை. இந்த நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ எம்பியுடன் நான் உரையாடினேன். அதற்கு உரிய சிறப்பான பதிலை அவர் எனக்கு கூறியுள்ளார். அதையிட்டு மகிழ்வடைகின்றேன்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு இனவாத வினை விதைத்தார்கள். இன்று ஊழ்வினை வினை அறுக்கிறார்கள். “அறு தம்பி, அறு.., நன்றாக அறு..!” என நாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும். சிங்கள ஊடகங்களில் நான் இவர்களைப் பார்த்துக்கொள்வேன். அரசில் இருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் வேறு சிலருக்கு இங்கே இடம் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இத்தகைய அக்மார்க் இனவாதிகளுக்கு இடமிருக்க முடியாது. இடம் தந்து மீண்டும் ஒருமுறை இன்னொரு சுற்றுவட்டம் போக முடியாது. அதை எமது தமிழ், முஸ்லிம் மக்கள் தாங்க மாட்டார்கள். பொறுக்கக்கூடாது. இன்று தேசிய சூழல், சர்வதேச சூழல் ஆகியவை பொருந்தி வருகின்றன. அவற்றை மீண்டும் பாழடிக்க இந்த இனவாதிகளுக்கு இடமளிக்க முடியாது. அத்தகைய எந்தவொரு முயற்சியையும் நான், முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து எதிர்ப்பேன்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE