Friday 26th of April 2024 08:30:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பவே கூடாது! - ஜே.வி.பியின் தலைவர் அநுர வலியுறுத்து!

அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பவே கூடாது! - ஜே.வி.பியின் தலைவர் அநுர வலியுறுத்து!


"ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையைத் திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை நாட்டு மக்கள் நம்பக்கூடாது.”

- இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஆரம்பத்தில் கொரோனாவைக் காரணம் காட்டினர். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ரஷ்யா, உக்ரைன் மோதலைக் காரணம் காட்ட முற்படுகின்றனர். அடுத்ததாக ஜெனிவா விவகாரத்தையும் பயன்படுத்துவார்கள்.

அதாவது தேசப்பற்றுள்ள அரசே நாட்டை ஆள்கின்றது. இது மேற்குலகத்துக்கு சகித்துக்கொள்ள முடியவில்லை, அதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்யப்படுகின்றது எனவும் பரப்புரை முன்னெடுப்பார்கள்.

இந்தச் சூழ்ச்சிக்காரர்களின் பிடிக்குள் பேராயர் சிக்கிவிட்டார் எனவும் முழக்கம் எழுப்புவார்கள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. தகவல்கள் கிடைத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியோர் மற்றும் தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிக்காகப் போராடுவதற்கான உரிமை பேராயருக்கு இருக்கின்றது. உள்நாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் அவருக்கு சர்வதேசத்தை நாட வேண்டி வந்தது. இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்ததற்கான பொறுப்பை அரசுதான் ஏற்கவேண்டும்.

ஜெனிவாவில் அழுத்தங்கள் வந்தால் அதற்கான பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும். ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற இடமளித்துவிட்டு, அதனை வைத்து உள்நாட்டில் அரசியல் நடத்தும் நாடகம் 10 ஆண்டுகளாக தொடர்கின்றது. இனியும் மக்கள் ஏமாறக்கூடாது" - என்றார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE