;

Sunday 20th of September 2020 05:12:52 PM GMT

LANGUAGE - TAMIL
வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!
வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!

வீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா!


இலகுவில் தொற்றிக் கொள்கின்ற ஒரு வைரஸ் - ஓர் உயிரி உலகம் முழுவதையும் அஞ்சி ஒடுங்கச் செய்துள்ளது. நாடுகளின் எல்லைகளையும் பரந்து விரிந்த சமுத்திரங்களையும் கடந்து பூவுலகெங்கும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த உயிரியைக் கொன்றொழிப்பதற்கான வழி வகைகள் எதனையும் அறியாதவர்களாக, அறிய முடியாதவர்களாக விஞ்ஞானிகள் கையறு நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.

இதனைக் கண்ணால் காண முடியாது. உடனடியாக அதன் பிரசன்னத்தை உணரவும் முடியாது. ஒரு மனிதனில் இருந்து மற்றுமொரு மனிதனில் தொற்றிக் கொள்கின்ற இந்த வைரஸ் தனது அறிகுறிகளை ஆறுதலாகவே வெளிப்படுத்துகின்றது. இதனால் மனித குலத்தை வேரறுக்கின்ற இந்த கொரோனா வைரஸை மனிதனால் எதிர்த்துப் போரிட முடியவில்லை.

உடலில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அதனைக் கண்டறியவே முடியாது. ஒளித்திருந்து தனது செயல் வலிமையைப் படிப்படியாகக் காட்டத் தொடங்குகின்ற அதேவேளை அது, ஒருவரில் இருந்து மற்றவர்களுக்கு இலகுவாக பரவிவிடுகின்றது. தொடுதலின் மூலமாக, தும்மல் இருமல்களின்போது வெளிப்படுகின்ற ஈரத்துளிகளின் வழியாக, நெருங்கி இருப்பவர்களுடைய சுவாச வழியில் இந்தத் தொற்றிப் பரவுதல் இடம்பெறுகின்றது.

இத்தகைய பரவலின் மூலம் மனிதனின் உயிராதாரமாகிய மூச்சுக்குழாய் வழியில் இந்த வைரஸ் பாய்ந்து பற்றி நிலைகொண்டு விடுகின்றது. பின்னர் அங்கிருந்து சுவாசப்பையை அடைந்து தாக்குகின்றது. சுவாசத்தைத் தடைசெய்தும், அதன் ஊடாகப் பாரதூரமான பக்கவிளைவுகளை உருவாக்கியும் மனித உயிருக்கு உலை வைத்துவிடுகின்றது.

இந்த வைரஸிடமிருந்து தப்பிக் கொள்வதற்கு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் மனிதனுக்கு உள்ள ஒரேயொரு பிரதான வழி. அதைவிட வேறு வழியில்லை. சுவாச வழியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் தொடுகையின் மூலம் தொற்றிக் கொள்வதை இலகுவில் மனிதனால் தடுக்க முடியாதுள்ளது.

கைகுலுக்குவது, அன்பை வெளிப்படுத்துவதற்காக கட்டி அணைப்பது என்ற வலிந்து மேற்கொள்கின்ற தொடுகை மட்டுமல்ல. இந்த விஷக்கிருமிகள் நிலைகொண்டிருக்கின்ற கதவுப் பிடிகள், பொது இடங்களின் சாதாரண பிடிநிலைக்கு ஆதரவான கட்டமைப்புக்கள், லிப்ட் சுவிற்சுகள், லைட் சுவிற்சுகள், அணிகின்ற உடைகள், பொருட்கள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்ற அடுக்குகள் என மனிதனுடைய கைகள் சாதாரண இயல்பு வழிச் செயற்பாட்டின் மூலம் தொடுகின்ற அனைத்து இடங்களிலும் இது பதுங்கி நிலைகொண்டிருந்து, மனிதனுடைய கைகள் மற்றும் உடற்பாகங்களின் ஊடாகத் தொற்றிப் பரவுகின்றது.

இவ்வாறு தூணிலும் துரும்பிலும் - எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து மனிதனைப் பற்றிப் படர, இது துடித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் கொரோனா வைரஸிடமிருந்து மனிதன் இலகுவில் தப்ப முடியாதிருக்கின்றது.

இந்தக் கொடிய வைரஸைக் கையாள்வதற்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த மனிதகுல எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த ஆயுதமும் மருத்துவர்களிடம் இல்லை. இந்த எதிரிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்ற மனிதர்களிடம் அதனை அழிப்பதற்குரிய ஆயுதங்களும் கிடையாது.

அந்த எதிரி மீது வலிந்து தாக்குதல் மேற்கொள்வதற்குரிய சாதனங்களும் இல்லை. வியூகம் அமைத்து அதன் மீது போர் தொடுப்பதற்கான வழிமுறைகளும் இல்லை. இதனால்தான் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேரைத் தொற்றியுள்ள இந்த வைரஸ் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரைக் கொன்றொழித்துள்ளது. சுமார் 7 லட்சம் பேரின் நிலைமைகளைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆக 2 இலட்சத்துக்கும் சற்று அதிகமானவர்களே இந்தக் கொடிய வைரஸின் பிடியில் சிக்கி உயிர்தப்பியுள்ளார்கள்.

இத்துடன் நின்றுவிட வில்லை. கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் கோர முகத்தை முதலில் வெளிப்பட்ட சீனாவில் அந்த நோய் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றிப் பரவியுள்ள நாடுகளில் நிலைமைக்ள் நேர்மாறாகவே இருக்கின்றன.

சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் என ஆரம்பித்து, அமெரிக்காவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. அங்கு இரண்டு லட்சம் பேர் வரையில் கொரோனாவின் பாய்ச்சலுக்குப் பலியாகக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதியே அச்சம் வெளியிட்டுள்ளார். அந்த அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. இத்தாலியில் அதிகூடிய எண்ணிக்கையான மக்கள் கொரோனாவிலனால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

மருத்துவமனைகள், நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பு நிலையங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள் போன்ற இடங்களே கொரோனா என்ற அசுரனுக்கு எதிரான யுத்தத்தின் யுத்த களங்களாக மாறியிருக்கின்றன. அங்கு தற்காப்பு யுத்தம் ஒன்று சத்தமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மனித குலத்திற்கும் கொரோனா வைரசுக்கும் இடையிலான உலகளாவிய மோதலில் இத்தகைய களமுனைகளிலேயே உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த உலக யுத்தம் வித்தியாசமானது. குண்டுகள் கிடையாது. எறிகணைகள் இல்லை. விமானக் குண்டுகள் வீசப்படுவதில்லை. துப்பாக்கிகளின் பயன்பாடும் இல்லை. நிராயுதபாணியான ஒரு நிலையிலேயே மனிதன் கொரோனா வைரஸ் என்ற கொடிய எதிரியுடனான யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த யுத்தத்தில் தற்காப்பு என்பதே பிரதான வியூகம். யுத்தம் ஒன்றின் பிரதான அம்சமாகிய படைவீரர்களின் போர் நிலைகளாகிய பங்கர் - பதுங்கு குழிகள் இதில் பரவலாகி இருக்கின்றன. மோதல்கள் இடம்பெறுகின்ற இடங்களிலும் படையினர் நிலைகொண்டிருக்கின்ற பாசறைகளிலும் மட்டுமே இதுவரையில் பங்கர் - பதுங்கு குழிகளைக் காணக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்த யுத்தத்தில் மனிதனின் உறைவிடமாகிய வீடுகளே பதுங்கு குழிகளாக மாறியுள்ளன.

போர்ப்பிரதேசங்களின் முன்னணி அரண்கள், காவல் அரண்கள், கள நிலைகளில் எதிரிகள் நெருங்கி வர முடியாதவாறு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிரதேசம் சுற்றிலும் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்த கண்ணிவெடிப் பிரதேசப் பாதுகாப்பு முறைகள் கைக்கொள்ள முடியாத அவல நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த யுத்தத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ள பொலிசார் மற்றும் ஆயுதப்படையினர், தங்களுடைய கவசமாகிய ஆயுதங்களுக்குப் பதிலாக நோய்த் தொற்றைத் தவிர்ப்பதற்கான மருந்துகளைத் தெளிப்பதில் ஈடுபட்டிருக்கின்றார்கள். மருத்துவமனைகள், அத்திவாவசிய தேவைகளுக்காக மக்கள் கூட வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல், புகையிரத நிலையங்கள், வீதிகள், முக்கிய சந்திகள் என்பவற்றில் இந்தத் தொற்று நீக்கியைத் தெளிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் தொற்று நீக்கியைத் தெளிக்கின்ற பணியில்தான் படையினர் முழுமையாக அணிவகுத்துச் செயற்படப் பயன்படுத்தப்படுகின்றார்கள். இது தான் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் ஆயுதப்படையினரின் முக்கிய பங்களிப்பாக மாறியிருக்கின்றது.

உலக யுத்தங்களில் நாடுகளின் அரசுகளும், அரச தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் போர் வீரர்களுமே சண்டையில் ஈடுபடுவார்கள். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த யுத்தத்தில் மருத்துவர்கள், தாதியர் மற்றம் மருத்துவத்துறை பணியாளர்களும், அவர்களுக்குப் பொறுப்பானவர்களுமே நேரடி மோதலில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் உலக மாந்தர்கள் அனைவருமே போராளிகளாக – போர் புரிய வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். தனித்திருத்தல், வீடுகளில் பாதுகாப்பாகப் பதுங்கி இருத்தல் என்பவையே இந்தப் போராட்டத்த்pன் முதற்படியாகவும் முக்கியச் செயற்படாகவும் மாறி இருக்கின்றன. மொத்தத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தம் என்பது வெறுமனே ஒரு தற்காப்பு யுத்தமேயொழிய இன்னுமே அது தாக்குதல் யுத்தமாக மனிதத் தரப்பில் பரிணமிக்கவில்லை.

கொரோனா யுத்தத்தில் தாக்குதல்களை நடத்துவதும், தாக்குதல்களுக்காகப் பதுங்கி இருப்பதும், அதிரடியாகத் திடீர்ப் பாயச்சலில் தாக்குதல் நடத்துவதும், போர்நிறுத்தம் செய்வதும், மோதல்களில் இருந்து சிறிது ஓய்வு கொள்வதும் கொரோன வைரஸின் தரப்பிலேயே தங்கியிருக்கின்றது. மனித தரப்பில் இதனை எண்ணிப்பார்க்கக் கூட முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

கொள்ளை நோயாகிய கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் பொருளதாரத்துறையிலும் மருத்துவத் துறையிலும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. நாடுகளுக்கிடையிலான விமானப் போக்குவரத்துக்கள், பொருளாதாரத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதனால் உலக உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்த புறப்பாதிப்பு ஒரு புறமிருக்க, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட முடியாமல் உலக மருத்துவத்துறை திண்டாடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்துகள்pல்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. ஆனால் இந்த நோய்க்கு ஆளாகியவர்களைக் கையாள்வதற்கும் மருத்துவ ரீதியாகக் கண்காணித்துப் பராமரிப்பதற்கும் அவசியமான உபகரணங்கள், பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக்குரிய சாதனங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது இந்த நோய் நெருக்கடி நிலைமையை மேலும் விரிவுபடுத்த உள்ளது.

குறிப்பாக கொரோனா நோயாளிகளைப் பரிசோதனை செய்கின்ற ஒரு மருத்துவர் ஒருவர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அத்துடன் அவர் பாதுகாப்பு உடைகளையும் அணிந்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா போன்ற வசதிகள் மிகுந்த செல்வந்த நாடுகளில்கூட மருத்துவர்களுக்கு அவசியமான முகக்கவசங்கள் போதிய அளவில் கையிருப்பில் இல்லை என கவலையுடன் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேபோன்று கொரோனா வைரஸ் நோய் எந்த அளவில் ஒரு நோயாளியைப் பாதித்திருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை சாதனங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சுவாசத் தொற்றுத் தொடர்புடைய கொரோனா வைரஸ் நோயாளிகள் நிமோனியாவுக்கே ஆளாகின்றார்கள். அது நோயாளியின் மூச்செடுக்கும் செயற்பாட்டைப் பெரிதும் பாதிப்பதனால் செயற்கை சுவாசத்திற்கான இயந்திரத் தொகுதி ஒவ்வொரு நோயாளிக் கட்டிலுக்கும் அவசியம்.

ஆனால் அந்த வசதிகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற மருத்துவமனைகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதனால் மூச்செடுக்கக் கஸ்டப்பட்டு உயிருக்காகப் போராடுகின்ற கொரோனா நோயாளிகளை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டிய அவல நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.

மறு புறத்தில் ரொக்கட் வேகத்தில் தொற்றிப் பரவுகின்ற கொரோனா வைரஸினால் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துச் செல்கின்;ற நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கத்தக்க வகையில் மருத்துவமனைகளில் இடவசதியும் கட்டில் வசதிகளுமின்றி பல நாடுகள் தவிக்கின்றன. சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உடனடியாக ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட உடனடி தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால் வசதியற்ற நாடுகள் நிலைமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாட நேர்ந்துள்ளது.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் கண்டறிவதில் அதிக வாழ்நாள் நேரத்தைச் செலவு செய்த உலக வல்லரசுகளும், பொருளாதார ஆதிக்கப் போட்டியில் மூழ்கியிருந்த உலக அரசியல் தலைவர்களும் மனிதனின் சுகாதாரத் தேவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சுகாதாரத்துறையை வளர்ச்சியடையச் செய்வதிலும் வசதிகள் மிகுந்த மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தவில்லை.

நோயாளர்கள் இல்லாத நிலையில் தேவைக்கு அதிகமாக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்று வாதிட்டாலும்கூட, வளர்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கின்ற விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளின் பக்க விளைவாக மனிதனின் சுகாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் திடீர் பாதிப்புகள் ஏற்படக்கூடம் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை.

வைரஸ் நோய்களின் வரிசையில் கொரோனா வைரஸ் புதிதாகத் தலையெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொரோன வைரஸ் நோய் புதியது. வீpரியம் மிக்கது. பேரழிவை ஏற்படுத்த வல்லது. இதனால்தான் அதனை நவீன கோவிட் 19 என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. (Corona Virus Disease 19 novel – Covid 19 novel)

இதற்கு முன்னர் உலக நாடுகளைத் தாக்கிய வைரஸ் காய்ச்சல் எபோலா வைரஸ் போன்ற நோய்கள் பெரும் எண்ணிக்கையானவர்களைக் கொன்று குவித்தது. ஆனாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதாரத்துறையினர் வெற்றி கண்டிருந்தனர். அதுவும் பாரிய உயிர்ச் சேதங்களின் பின்னரே அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் காலத்துக்குக் காலம் வைரஸ் நோய்கள் அலையலையாகத் தலையெடுத்து உலக சுகாதாரத்துறையைத் திணறடித்து வந்துள்ளன.

சங்கிலித் தொடராகிய இந்த வைரஸ் நோய்த்தாக்கம் என்பது முடிவற்றது. எந்த வேளையிலும் மனிதர்களைத் தாக்கலாம். உலக நாடுகளைப் பெரும் சுகாதார நெருக்கடிக்குள் உள்ளாக்கலாம் என்ற விழிப்புணர்வையும் பட்டறிவையும் வல்லரசு நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் உரிய முறையில் பெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. இந்தப் பட்டறிவு இருந்த போதிலும் அத்தகையதொரு நெருக்கடி நிலைமைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடுகள் தனித்தனியாகத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை.

அதேவேளை மனிதனின் உலக சுகளாவிய சுகாதாரத்தைப் பேணுவதற்கும் அதனைக் கட்டிக்காப்பதற்குமாக உருவாக்கப்பட்ட உலக சுகாதார நிறுவனமும் இத்தகையதொரு வைரஸ் தொற்று நோயின் நெருக்கடி நிலைக்கு தயார்ப்படுத்துவதற்கு நாடுகளை வழிப்படுத்தவில்லை என்று பரவலாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இராணுவ வலிமையும் பொருளாதார வலிமையும் அரசியல் செல்வாக்கும் நாடுகளுக்கும் அரச தலைவ்ரகளுக்கும் அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மனித இருப்புக்கு ஆதாரமாகிய சுகாதாரத்துறையையும், மனிதனின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய மருத்துவத் துறையையும் போதிய அளவில் வளர்ச்சியடையச் செய்வதற்கு நாடுகள் தவறிவிட்டன. உலக சுகாதார நிறுவனமும் தவறிவிட்டது.

கொரோனா வைரஸ் நோயை உலகுக்கு முதலில் வெளிக்காட்டிய சீனா அதன் பேராபத்தில் இருந்தும், பெரும் நெருக்கடியில் இருந்தும் மீண்டிருக்கின்ற போதிலும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மனித நேய அடிப்படையில் முன்னுதாரணம் மிக்க வழிகாட்டியாகச் செயற்படவில்லை என்றே பல நாடுகளும் குற்றம் சுமத்த உள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவுடன் மிகத் தீவிரமான உலக பொருளாதார வல்லாண்மைப் போட்டியில் ஈடுபட்டிருந்த சீனா இப்போது கொரேனா வைரஸின் பிடியில் சிக்கி பொருளாதார வல்லமையை இழந்து தவிக்கின்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளையும் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பின்னடையச் செய்து தன்னிகரற்ற வகையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றது என்று உலக அரங்கில் பொதுவாக்க குற்றம் சுமத்தப்படுகின்றது.

எது எப்படியானாலும் கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தின் நிலைமை மிக மிக மோசமாகிக் கொண்டிருக்கின்றது. முன்னைய வைரஸ் நோய்கள் தாக்கியபோது கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தைப் போன்று பாதிப்பு தொடர்பிலான தகவல்கள் வெளிப்பட்டிருக்கவில்லை. முன்னைய உலகளாவிய நோய்த்தொற்று நெருக்கடி நிலைமைகளின்போது நாடுகள் உண்மையான நிலைமைகளை உள்ளது உள்ளபடி மக்களுகு;கு வெளிப்படுத்தவில்லை.

ஆனால் கொரோன வைரஸ் நோய்த்தாக்கத்தின் நிலைமை அவ்வாறில்லை. முன்னரிலும் பார்க்க இந்தப் புதிய வைரஸ் நோய்த்தாக்கம் தீவிரம் மிக்கதாகவும் 200க்கும் மேற்பட்ட நடுகளில் தொற்றிப் பரவி உயிர்களைப் பலியெடுத்து பேரிடரை ஏற்படுத்தி இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

கொரோன வைரஸ் நோய்த்தாக்கத்தினால் முன்னர் எப்போதுமில்லாத வகையிலான ஒரு சொதனை நிலைமைக்கு உலகம் முகம் கொடுத்திருக்கின்றது. இந்தக் கணத்தின் யதார்த்தம் இதுதான் என்று ஐநா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல இடங்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். சமூகங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதாரம் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றது என்று தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 2020 – 2021 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சிப் போக்கு 2009 ஆம் ஆண்டின் நிலைமைகளிலும் பார்க்க மோசமான மந்த நிலைமைக்குள் பிரவேசித்துள்ளது என உலக நாணய நிதியம் கூறியிருக்கின்றது.

ஆகவே பல பிராந்தியங்களிலும் சமூகப் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற இந்த கொவிட் 19 வைரஸ் நோயை நசுக்கி அடக்கி, அதன் அழிவுகளை ஈடு செய்வதற்கு தீர்க்கமாகப் புதிய வழிகளில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் ஐநா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

காலத்தின் தேவை கருதிய இந்த அழைப்பை அனைத்துத் தரப்பினரும் கவனத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும். அதன் ஊ.டாகத்தான் கொரோன வைரஸின் பேரிடரில் இருந்து உலக சமூகம் மீட்சி பெற முடியும்.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE