;

Wednesday 21st of October 2020 05:10:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா

“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா


குறை அபிவிருத்தி நாடுகளின் வறுமை நிலையைப் போக்கவும், அந்நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக உள்ள விடயங்களை நீக்குவதற்காகவும் கடன் அற்ற நிதி உதவியை வழங்கும் எம்.சி.சி எனப்படும் மிலேனியம் செலன்ஜ் கோப்பரேஷன் உடன்படிக்கையானது ( MILLENIUM CHALLENGE CORPORATION) இலங்கை அரசியலில் தற்போது பரவலாக பேசப்படும் ஓர் பேசுப்பொருளாகியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாக கிடைக்கும் இந்த உடன்படிக்கையை மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி 1ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலித்தசிறி குணருவன் தலைமையில் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட விசேட குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையானது கடந்த ஜுன் 25ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதன் பின்பு மீண்டும் இந்த விவகாரம் அனைவரினதும் கவனத்தினைப் பெற்று வருகின்றது.

தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்குள் இந்த எம்.சி.சி உடன்படிக்கையும் தவிர்க்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த உடன்படிக்கை விவகாரத்தினை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியலாக்கி தேர்தல் மேடைகளில் முழங்குவதற்கும், ஆளாளுக்கு சாடிக் கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றன.

இந்த உடன்படிக்கை, உள்நோக்கம் கொண்டது என்றும், நாட்டின் இறைமைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பலத்த சவால் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த கருத்துக்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சிபாரிசுக் குழுவும் தனது அறிக்கையில் அவ்வாறான விடயங்களை கூறிருந்தது. அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானால் இலங்கை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்பட நேரிடும் என்றும், இந்த உடன்படிக்கையை செய்து கொண்ட இதர நாடுகள் எந்தவிதமான முன்னேற்றத்தினையும் அடையவில்லை என்றும், வெளித்தோற்றத்தில் மிகவும் கவரத்தக்க வகையில் இந்த உடன்படிக்கை இருந்தாலும் அது நாட்டின் இறைமையை அழிக்கும் மிகவும் மோசமானதொரு திட்டம் என்று பேராசிரியர் லலித்தசிறி குணருவன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த சிபாரிசு அறிக்கையினால் மேலும் உத்வேகமடைந்த ஆளும் தரப்பு பிரதிநிதிகளான உதய கம்மம்பில, விமல் வீரவன்ச உட்பட பலர், சிங்கள மக்கள் மத்தியில் இந்த உடன்படிக்கைக்கு எதிரான பிரசாரங்களை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் “மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ள பதில் என்ன?” என்று ரணில் விக்கிரமசிங்க ஒரு புறம் அரசாங்கத்தினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை “மிலேனியம் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது” என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெட்டத் தெளிவாக ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஆனால், “மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் தேர்தலுக்கு பின்னர் அரசாங்கம் நிச்சயம் கைச்சாத்திடும்” என்று ஜே.வி.பி முக்கியஸ்தர்களான பிமல் ரத்னாயக்க, கே.டி.லால்காந்த ஆகியோர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இந்த எம்.சி.சி உடன்படிக்கைக்கு முன்னாள் நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று ஆளும் தரப்பு குற்றம் சுமத்தி வருகின்ற அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ ராஜபக்ஷக்களே இந்த ஒப்பந்தத்திற்கு காரணகர்த்தாக்கள் என்று கூறி வருகின்றதுடன், எம்.சி.சி உடன்படிக்கையினூடாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரை வார்க்க அவர்களே முதன்மையாக நின்று செயற்பட்டனர் என்று கூறியும் வருகின்றனர்.

இவ்வாறு பலரும் பலவாறு இந்த ஒப்பந்தம் குறித்து கருத்துக்களை முன்வைத்து ஒவ்வொருவரையும் சாடி வரும் நிலையில், இலங்கையின் இறைமைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக (?) இருக்கப் போகின்றது என்று கூறப்படும் இந்த உடன்படிக்கையை செய்யும் மிலேனியம் செலன்ஜ் கோப்பரேஷன் என்ற நிறுவனம் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாமல் மர்மமான முறையில் நாட்டுக்குள் ஊடுருவி உள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவர்கள் மர்மமான முறையில் நாட்டுக்குள் வரவில்லையாயின் அவர்களின் வருகைக்கும், அழைப்பு விடுப்புக்கும் யார் காரணமாக இருந்திருக்கக் கூடும்?

மகிந்த ராஜபக்ஷவும் எம்.சி.சி உடன்படிக்கையும்

எம்.சி.சி உடன்படிக்கையின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட நிதி உதவியினை அளிப்பதற்கு முன் அது பற்றி ஆராயவென எம்.சி.சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த போல் அப்ல்கிராத் 2005 மார்ச் 29 முதல் 31ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் சரத் அமுனுகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரை அவர் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தைகளில் பங்குப்பற்றிய அனைத்து தரப்பினரும் எம்.சி.சி நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புpரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ மிகவும் ஆர்வத்துடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதாக போல் அப்ல்கிராத் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நிலவரங்களை அறிந்துகொள்ளவென அப்ல்கிராத் ஹம்பாந்தோட்டைக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது அல்ப்கிரத் இலங்கையின் தொடர்பில் மிகவும் திருப்தியடைந்துள்ளார். இதன் அடிப்படையில் இலங்கைக்கு 2007ம் ஆண்டில் 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அந்த நிதி உதவியினை வேண்டாம் என நிராகரிக்கவில்லை. 2008ம் ஆண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட அவர் தயாராகவே இருந்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன. எனினும் 2007ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அந்த நிதி உதவியை இலங்கைக்கு வழங்காதிருக்க எம்.சி.சி நிறுவனம் தீர்மானித்திருந்ததாக அமெரிக்க காங்கிரஸ் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்படுகின்றது. இது பற்றி 2008ம் ஆண்டின் ஹியூமன் ரைட்ஸ் வொச் அமைப்பின் அறிக்கையொன்றிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எம்.சி.சி சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வமான ஆவணங்களில் இந்த விபரங்கள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளதுடன் அமெரிக்க காங்கிரஸ் சபை அறிக்கைகளிலும் இந்த தகவல்கள் அனைத்தும் விரிவாக உள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ராஜபக்ஷ தரப்பு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினை அரசியல் ரீதியில் துவம்சம் செய்ய இந்த விவகாரத்தினை பயன்படுத்தியிருந்தது. நாட்டை அமெரிக்காவுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என்ற கடும் குற்றச்சாட்டினை முன்வைத்து இவ்வாறு தமது அரசியலை இருப்பினைத் தக்க வைத்துக் கொண்ட ராஜபக்ஷவினர் அன்று எதிரிகளை நோக்கி வீசிய பூமராங் தன்னை நோக்கி வருவதனைப் போன்று இன்று அதே எம்.சி.சி உடன்படிக்கையை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் முற்று முழுதாக நிராகரிக்கவும் முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்;டிருக்கின்றனர்.

ஏனெனில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது நாட்டுக்கு கெடுதல் என்று கூறிய விடயத்தினை எப்படி ஆளும் தரப்புக்கு வந்த பின்னர் ஏற்று நடக்க முடியும் என்றும், அதற்காக மக்களுக்கு கூறப்போகும் எப்படி விளக்கம் அளிக்கப் போகின்றோம் என்றும் ஆளும் தரப்பு சிக்கலில் மாட்டியுள்ளது. தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழிமுறையாக, தாம் முன்வைத்த எம்.சி.சி தொடர்பான பொய்ப் புரட்டுக் கதைகளை அப்படியே எந்தவிதமான மாற்றமும் இன்றி தேர்தல் வரை பேணிக்கொண்டு செல்வதே அரசாங்கத்தின் தற்போதைய ஒரே இலக்காக உள்ளது. இதனை நிரூபிக்கும் விதத்திலேயே ஆளும் தரப்புக்கு சார்பானதாக சிபாரிசு அறிக்கையும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையை வைத்துக் கொண்டு அரசியல் இலாபம் தேடும் ஆளும் தரப்பின் முயற்சிகளுக்கு சிபாரிசு குழுவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவே தோன்றுகின்றது. அதற்கு ஓர் உதாரணமாக 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இரு தடவைகள் இந்த உடன்படிக்கையில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்ததா இல்லையா என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை என்றும், டொலர் மில்லியன் 7.6 மற்றும் டொலர் மில்லியன் 2.4 என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு வழங்க உடன்படிக்கையின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதாகவும், ஆனால் இந்த நிதிக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களயும் பெற முடியவில்லை என்றும், அதற்கான கணக்கு விபரங்கள் இல்லையென்றும் குழு முன்வைத்திருந்த கருத்தானது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டதாகும். இந்த விடயத்தினைப் பெரிதுப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கம் மீதான அதிருப்தியினை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்த உதவியது.

அமெரிக்காவின் காட்டம்

எவ்வாறாயினும்; சிபாரிசுக் குழு முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பலத்த சர்;ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், இவ்விடயம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டடு, உடன்படிக்கையில் உள்ளபடியான 480 மில்லியன் டொலரின் எந்தவிதமான பகுதிப் பணமும் இதுவரை இலங்கைக்கு வழங்கப்படவில்லையென திட்டவட்டமாக அறிவித்ததுடன், இந்த குழுவின் சிபாரிசு குறித்து விசனமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த முறுகல் நிலையின் உச்சகட்டமாக, எம்.சி.சி உடன்படிக்கை இலங்கையின் நன்மைக்கே என்று அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்திருந்தார். கடந்த ஜுன் 29ம் திகதி தொலைபேசியினூடாக வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் உரையாடிய அவர், மிலேனியம் ஒப்பந்தம் இலங்கையின் நன்மைக்கானது எனறும், இந்த ஒப்பந்தத்தினை செய்வதில் அமெரிக்காவுக்கு உள்நோக்கங்கள் எதுவும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இலங்கை மக்களின் நலன் கருதி செய்யப்படவுள்ள ஒரு உடன்படிக்கை என்றும், சந்தேகங்கள் ஏதும் இருந்தால் இலங்கை அரசு எங்களிடமே நேரடியாகக் கேட்கலாம் என்றும், இலங்கைக்கு எவ்வகையான உதவிகளையும் செய்ய அமெரிக்கா எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் மிகவும் காட்டமாக தெரிவித்திருக்கின்றார் என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் இந்த விவகாரம் தொடர்பில் பனிப்போர் இடம்பெற்று வருகின்றது.

எம்.சி.சியும் தவறான அபிப்பிராயங்களும்

எம்.சி.சி உடன்படிக்கையினூடாக வழங்கப்படும் நிதி உதவியினை அந்தந்த நாடுகளின் அரசியலமைப்பு சபைகளின் அனுமதியுடன் ஒரு சட்டமூலமாக நிறைவேற்றி அதனை அமுலாக்க வேண்டும் என்று நிபந்தனை ஒன்று காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிபந்தனை அந்த உடன்படிக்கையின் இருக்கும் நிலையில்;, நாட்டு மக்களுக்கு தெரியாமல் மறைத்து பின்கதவு வழியாக எம்.சி.சி நிதியைக் கையாள எவராலும் இயலாத காரியமாகும்.

இந்த எம்.சி.சி உடன்படிக்கையினை அமுல்படுத்தி அதன் நிதி உதவியினைக் கையாளவென வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய பணிப்பாளர்களை இலங்கை அரசு நியமிக்க வேண்டும். இதன்படி நிதியினை நிர்வகிக்கப் போவது இலங்கைப் பிரதிநிதிகளே அன்றி அமெரிக்கர்கள் அல்லர். இதுவும் இலங்கைக்கு சாதகமான ஓர் அம்சமாகும். பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரமே முறையான விலை மனுக்கோரல்கள் நடத்தப்படும்.

அதேவேளை எம்.சி.சி நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்படும் ஒரு பணிப்பாளர் வாக்குரிமை அற்றவராக இருப்பார். எம்.சி.சி நிறுவனம் இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவென- குறிப்பாக போக்குவரத்து மற்றும் காணி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பாரியளவிலான நிதி உதவியினை வழங்கும் நிலையில், அந்த நிதி எவ்வாறு இலங்கையில் கையாளப்படுகின்றது என்பதனை கண்காணிப்பதற்காகவே எம்.சி.சியின் சார்பில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுகின்றார்.

அத்துடன் ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதனைப் போன்று இந்த உடன்படிக்கைக்கும் யுஊளுயு, ளுழுகுயு உடன்படிக்கைகளுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் இந்த உடன்படிக்கைகள் குறித்தான எந்தவிதமான வார்த்தைகளும் இந்த எம்.சி.சி உடன்படிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அமெரிக்கா எம்.சி.சி நிறுவனமானது 49 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பான 65 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த நாடுகளில் நைஜீரியா, யேமன், மொரிட்டானியா, கெம்பியா, தான்சானியா, நிக்கரகுவா, ஹொன்டூரஸ், மடகாஸ்கர், ஆர்மேனியா, மாலி மற்றும் மலாவி ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கனவாகும். எவ்வாறாயினும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் இலங்கைப் போன்ற நாடுகளுக்கு கிடைக்கும் இவ்வாறான நிதி உதவிகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படும் போது சிறந்த பலனை அளிக்கின்றது.

ஆனால் அரசியல் இலாபத்தினை மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்படும் எந்தவிதமான தூரநோக்கும் அற்ற அரசியற்வாதிகளின் செயற்பாடுகள் இந்த உடன்படிக்கையின் சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து சமூகத்திற்கு எடுத்துக் கூற தடையாக இருப்பதுடன், நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த உடன்படிக்கையை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்படும் ஆபத்தான நிலை காரணமாக இந்த விவகாரத்தினை சரியான முறையில் கையாள்வதிலும், அது பற்றி பேச்சுக்களை நடத்துவதிலும் ஒருவிதமான மௌன நிலையையே அனைவரும் கடைப்பிடித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

அருவி இணையத்துக்காக அகநிலா


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, அமெரிக்காபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE