Friday 26th of April 2024 12:09:32 PM GMT

LANGUAGE - TAMIL
.
சுமந்திரனுக்கு உருப்படியான அறிவிருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டார்! - சுரேஸ் தெரிவிப்பு!

சுமந்திரனுக்கு உருப்படியான அறிவிருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டார்! - சுரேஸ் தெரிவிப்பு!


சுமந்திரனுக்கு உருப்படியான அறிவிருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டார் என தமிழ் மக்கள் தேசியகூட்டணியின் உபதலைவர்களில் ஒருவரான க.சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைமண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துகருத்த தெரிவித்த அவர்...

கூட்டமைப்பில் இருந்தபோது அரசாங்கத்தினால் எமக்கு பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அந்த உறுதிமொழிகளை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்தோம். அது நிறைவேறவில்லை.

முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற எண்ணத்தில் மைத்திரிக்கு வாக்களித்து ஒரு ஆட்சி மாற்றம் உருவாக்கப்பட்டது. ஒரு ஐனாதிபதி சாதாரணமாக அரசியல் கைதிகளாக இருக்கின்றவர்களிற்கு பொது மன்னிப்பினை வழங்கமுடியும். அவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் முன்னம் இடம்பெற்றிருந்தது. அதைக்கூட அவர் செய்யவில்லை. அது நடப்பதற்கு நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் எவரும் கடுமையாக உழைக்கவில்லை.

அரசின் பங்காளிகளாக செயற்பட்டு வந்த கூட்டமைப்பினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளில் ஒன்றிற்காவது தீர்வினை பெறமுடிந்ததா என்றால் இன்றுவரை இல்லை என்பதே உண்மை.

அவர்கள் ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு கதைகளை பேசிவருகின்றனர். அரசியல் காலகட்டங்களில் சில நேரங்களில்தான் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் ஏற்படும். அந்த காலப்பகுதியில் நாம் அவற்றை செய்து முடிக்கவேண்டும். இன்று அந்த நிலமை இல்லை. மாறாக சிங்கள மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்ற அரசாங்கமே இன்று இருக்கின்றது.

பிரபாகரன் கேட்பதை நீங்கள் கேட்டால் ஒருபோதும் தரமுடியாது என்று அவர்கள் கூறுகின்றார்கள். தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்டால் அது தீவிரவாதம் தனிநாட்டு கோரிக்கை என்று நீண்டகாலமாக அவர்கள் கூறுகின்றார்கள். தனிநாடு கேட்டு தமிழர்கள் போராடியது உண்மை.

ஆனால் இன்று ஐனநாயக பேராட்டத்தில் இருக்ககூடியவர்கள் கூறுகின்றார்கள் நாடுபிளவு படாமல் இருப்பதற்கு ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்கள் தங்களது ஆட்சி அதிகாரங்களை கொண்டிருக்ககூடிய ஒரு சமஸ்டி அரசியல் அமைப்புமுறை வேண்டும் என்று.

ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமஸ்டிக்கும் தனிநாட்டிற்கும் எவ்வாறான வேறுபாடுகள் இருக்கின்றது என்பது நன்கு தெரியும் ஆனால் அதனை கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றார்கள். சிங்கள அரசாங்கம் இறங்கிவந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை ஒருபோதும் தீர்க்காது.

எனவே அவர்களிற்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். போர் குற்றம் விசாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்களது வண்டவாளங்கள் வெளியில்வரும். அப்போதே தமிழ் மக்களின் கௌரவமாக வாழ்வதுடன் அவர்களிற்கான நீதி கிடைக்கக்கூடய சூழல் உருவாகும். அந்த சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் சம்பந்தன் தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருந்தார். புதிய அரசியல் சாசனத்திற்காக நான்கரை வருடங்கள் ஏமாற்றபட்டார்கள். நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள் என்று நாம் சொன்னோம். ஆனால் சுமந்திரனோ மாவையோ சம்பந்தனோ அதனை கேட்கவில்லை. ஆனால் இன்று ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

உண்மையில் அவர்கள் மடையர்களாகவே இருக்க வேண்டும். ஆனால் சுமந்திரன் தன்னை அறிவாளி என்றே விளம்பரம் செய்கின்றார். அவருக்கு உருப்படியான அறிவு இருந்திருக்குமானால் இப்படியான மோசமான நிலைமைக்கு இடமளித்திருக்கமாட்டார் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

இவற்றை நாம் மாற்றியமைக்க வேண்டும். தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதும் தமிழ் தலைமைகள் ஏமாறிவிட்டோம் என்று சொல்வதும் மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவே எமது சிந்தனையில் நடவடிக்கையில் அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை மதித்து அவர்களிற்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதை உணர்வதற்கு அரசாங்கத்தின் மீது ஒரு சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதற்காக, தமிழ் மக்கள் மத்தியில் சர்வஐன வாக்குரிமை ஒன்றினை நடாத்தி உலக நாடுகளின் மூலம் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

இல்லாவிடில் எமது மண்ணில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புகளும், அவலங்களும் அபகரிப்புக்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். வடகிழக்கின் நிலத்தொடர்பு மாற்றிமைக்கப்படும்

எனவே இந்த மண்ணில் தமிழர்களாக நாம் வாழவேண்டும். எமது சந்ததி நிலைக்க வேண்டும் என்றால் எமது இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொன்மையான மொழிக்கு சொந்தகாரர் நாங்கள் அதனை அழிந்து போகவிட முடியாது. அப்படியானால் நாங்கள் தமிழர்களாகவே இருக்க முடியாது. இவை எல்லாவற்றிலும் இருந்து தமிழ் கூட்டமைப்பு விலகிச்சென்றுள்ளது.

எனவே எமக்கு ஒரு மாற்றம் தேவை அந்தமாற்றம் நிச்சயமாக தமிழ் மக்களிற்கு வெளிச்சத்தை கொண்டுவரும். அந்தவகையில் வன்னியில் வரக்கூடிய 4 ஆசனங்களும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினுடையதாக இருக்க வேண்டும். நாம் 10ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றால் அனைத்து தரப்பினரையும் ஒரு பொதுக்கொள்கையின் கீழ்கொண்டு வருவோம். அந்த சக்தி எங்களிற்கு இருக்கின்றது. அதற்கு உங்களது ஆதரவு நிச்சயம் தேவை என்றார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE