Friday 26th of April 2024 11:53:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)


“என்னைச் சந்திப்பதற்கு அழைத்துவிட்டு என்னை இங்கு காத்திருக்க வைத்துவிட்டு நீ வயிறு புடைக்க தின்றுவிட்டு தூங்கிவிட்டாய். எனது பல மணி நேரத்தை வீணாக்கி விட்டாய.; நீ கவர்னராக மட்டுமல்ல ஒரு பல சரக்கு கடையை நடத்தக் கூடத் தகுதியில்லாதவன் உன்னோடு பேசத் தயாராக இல்லை.”

அப்போது இலங்கையின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக இருந்த கவர்னர் அநகாரிக தர்மபாலவைச் சந்திப்பதற்காக அழைத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தை விட மூன்று மணித்தியாலங்கள் பிந்தி சந்திக்க சமூகங்கொடுத்த போது அவரிடம் தர்மபால மேற்கண்டவாறு சீறி விழுந்துவிட்டு கவர்னருடன் பேசாமலே வெளியேறிவட்டார்.

இச்சம்பவம் பௌத்த சிங்களய, சிங்கள யாதிக போன்ற பத்திரிகைகளாலும் சிங்கள இனவாதிகளாலும் பிரபலப்படுத்தப்பட்டு சிங்கள இனத்தின் துணிவுமிக்க வீரநாயகனாக சிங்கள மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் பரப்பப்பட்டது. மேலும் 1893ல் அமெரிக்காவின் சிக்காகோவில் இடம்பெற்ற சர்வமதப் பாராளுமன்றத்தில் தேரவாத பௌத்தத்தின் சார்பில் அநகாரிக தர்மபால உரையாற்றினார். சுவாமி விவேகானந்தரின் உலகப் புகழ் பெற்ற இந்து சமயம் பற்றிய உரையும் அம்மகாநாட்டிலேயே இடம்பெற்றது. விவேகானந்தரின் உரையைப் போன்றே அநகாரிக தர்மபாலவின் உரையும் அங்கு வந்திருந்த பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டது. அது மட்டுமின்றி சுவாமி விவேகானந்தருடன் உறவைப் பேணிவர அவருக்கு இம்மாநாடு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.

இந்த இரு விடயங்களினடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில் அநகாரிக தர்மபாலா பற்றிய ஒரு பிரமாண்டமான விம்பம் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே புத்தரின் பஞ்ச சீலக் கொள்கைகளை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு மாட்டிறைச்சி உண்பவர்களுக்கெதிராகவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் மீது சிங்கள் மக்கள் மத்தியில் கீழ்த்தரமான அபிப்பிராயங்களைப் பரப்பியதன் மூலம் அவர் தன்னை ஒரு பௌத்த மதத்தின் தூய்மையான அர்ப்பணிப்புள்ள தலைமை நாயகனாக காட்டிக்கொண்டார். ஒட்டுமொத்தமாக புத்தர் உயிர்க்கொலைகளையே பாவமாக போதித்தாரே ஒழிய மாட்டிறைச்சி உண்பதை மட்டுமல்ல. ஆனால் அநகாரிக தர்மபால புத்தரின் போதனைகளை ஏனைய இனங்களை கீழ்மைப்படுத்தும் வகையில் பாவிக்கும் நோக்கத்துடன் திரிபு படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார்.

இப்படியாக கவர்னருடன் இடம்பெற்ற சம்பவம் சிக்காக்கோ மாநாட்டு உரை ஏனைய இனங்களைக் கீழ்மைப்படுத்தல் போன்றவை மூலம் இவரொரு அவதார புருசராக கற்பிதம் செய்யப்பட்டார். அதன் காரணமாகவே பௌத்த சிங்கள மறுமலர்ச்சியின் மூலவர்களான ஒல்கொட், புல்ஜென்ஸ், லெட் பீட்டர் போன்றவர்களை ஓரங்கட்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமையை இவரால் ஏற்படுத்த முடிந்தது. எனவே இவரின் தலைமையில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் சிங்கள பௌத்த பேரினவாத ஏனைய இனங்கள் மீதான மேலாதிக்க இயக்கமாக உருமாற்றம் பெற்றது. அநகாரிக தர்மபாலவின் சித்தாந்தம் மூலம் தேசபக்தியென்பது சிங்கள தேசபக்தியாக சுதேசியமென்பது ஏனைய இனங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது போன்ற உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. இதுNவு 1915ல் முஸ்லீம்களுக்கெதிரான பேரழிவுக் கலவரத்தின் முக்கிய தத்துவார்த்த வழிகாட்டலாக விளங்கியது.

முஸ்லீம்களுக்கு கடல் வணிகம் தொடர்பாக ஏனைய வர்த்தக நடவடிக்கை தொடர்பாகவும் பாரம்பரிய அனுபவங்கள் இருந்தமை காரணமாகவும் ஆங்கிலேயருடன் இணைந்து ஏற்றுமதி இறக்கும்தி வர்த்தகத்திலும் கொழும்பு, கண்டி கம்பளை போன்ற நகரங்களின் மொத்த வியாபார நடவடிக்கைகளிலும் செல்வாக்கு செலுத்திவந்தனர். கரையோரச் சிங்கள வர்த்தகர்களாலும் கண்டிய நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் வர்த்தகத்தில் முஸ்லீம்களுடன் போடடியிடமுடியவில்லை.

எனவே அநகாரிக தர்மபாலவின் முஸ்லிம்களுக்கெதிரான பிரசாரங்களும் அவற்றினடிப்படையில் முஸ்லீம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சில வன்முறை நடவடிக்கைகளும் இவ்வர்த்தகர்களின் தேவையினடிப்படையில் விரிவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. இப்படியாக முஸ்லீமகளுக்கெதிரான உணர்வுகள் சூடேற்றப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் வறக்காப்பொல சம்பவம் இடம்பெற்றது. ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்துகொண்டு இருந்தபோது அமைதி பேணப்படாத நிலையில் பெரஹரா மீது பள்ளிவாசலிலிருந்து கல்லெறி மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையில் ஊர்வலத்தில் வந்தவர்கள் பள்ளிவாசலுக்குள் புகுந்து அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன் பள்ளிவாசலையும் சேதப்படுத்தினர். எனினும் ஊர்வலம் திட்டமிட்டபடி கங்காதிக்க விகாரையைச் சென்றடைந்து நிறைவுபெற்றது.

1915 மே 4ம் நாள் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையேயான மோதல்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. கம்பளையில் புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டது. இவற்றின் காரணமாக கண்டி கொழும்பு, கம்பளை, குருநாகல் பதுளை போன்ற பல பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. எந்தநேரம் எது நடக்குமென்று சொல்லமுடியாதளவுக்கு முறுகல் நிலை வலுவடைந்து கொண்டு வந்தது. அதேவேளையில் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய போன்ற பத்திரிகைகள் முஸ்லீம்களுக்கு எதிரான துNவுசப் பிரசாரங்களை தீவிரப்படுத்தினர். இன்னொருபுறம் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டன.

இவற்றில் முக்கியமானது வெசாக் தினத்தன்று தலதா மாளிகையில் பெரஹராவும் முஸ்லீம்களால் தாக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவிலிருந்தும் கொழும்பிலிருந்தும் ஆயுத தாரிகளாக முஸ்லீம்கள் கண்டியை நோக்கி தாக்குதல்களை நடத்த வருவதாகவும் எங்கும் வாந்திகள் பரப்பப்பட்டன. இன்னொருபுறம் தலதாமாளிகையை பாதுகாக்க ஏராளமான சிங்களவர்கள் ஆயுத தாரிகளாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டனர்.

நிலமை மோசமாவதை அவதானித்த பொலிசார் கடுகன்னாவையில் புகையிரதத்தை மறித்து அதில் பயணம் செய்த முஸ்லீம்களை இறக்கி கொழும்புக்கு திருப்பியனுப்பினர். இச்செய்தி கண்டிக்கு பரவிய நிலையில் சிங்களவர்களின் வன்முறைக் கும்பலொன்று புகையிரதப் பாதைவழியே கடுகன்னாவை நோக்கிப் புறப்பட்டது. அக்குழு கடுகன்னாவையை நெருங்கியபோது முஸ்லீம் கடையொன்றின் கூரையிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு அரசாங்க எழுதுவினைஞர் கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரம் வெடிக்கிறது. கண்டி கடுகன்னாவை மாத்தறை பேராதனை என கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முஸ்லீம்களின் கடைகள் கொள்ளையிடப்பட்டதுடன் எரியூட்டப்படுகின்றன. முஸ்லிம்களின் வீடகள் உட்பட சொத்துகள் அழிக்கப்படுகின்றன. ஒரு சிங்களவர் உட்பட ஏழுபேர் கொல்லப்படுகின்றனர்.

அதே வேளையில் தலதா மாளிகையிலிருந்து புறப்பட்ட பெரஹரா, சல்காது என்ற சிங்கள வர்த்தகரின் வீட்டை நெருங்கியபோது அருகிலிருந்த பள்ளிவாசலிலிருந்து போத்தல்கள் கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வழமையாக ஒவ்வொரு வருடமும் அவரின் வீட்டின் முன் பெரஹரா நின்று அவர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்வதுண்டு. அப்போது பள்ளிவாசல் முன்பாக வரும்போது ஆட்டபாட்டங்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படும். அன்று அமைதி பேணப்படாத நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஊர்வலத்தில் வந்தவர்களும் தயாராக வந்த காரண்தினால் இருதரப்பினருக்குமிடையே பெரும் மோதல் வெடித்தது. இம்மோதல் எங்கும் பரவி கண்டியில் மட்டும் 21 பேர் கைது செய்யப்படுகின்றனர்.

அதனையடுத்து கலவரம் கம்பளை, குருணாகல், பதுளை, கொழும்பு என முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பரவுகின்றது. ஏற்கனNவு அநகாரிக தர்மபால பேரினவாத சக்திகளால் ஊட்டப்பட்ட முஸ்லீம்களுக்கெதிரான வெறுப்புணர்வு கொழுந்துவிட்டெரிய ஆரம்பிக்கிறது. முஸ்லீம்கள் தேடித் தேடி வேட்டையாடப்படுகின்றனர்.

கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்திலும் மோதல்கள் பரவவே நிலையம் இழுத்து மூடப்படுகிறது. அந்த நிலையில் பயணிக்க வந்த சிங்களவர்கள் வீதிகளில் இறங்கி கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் உணவகங்கள் என்பன அடித்து நொருக்கப்படுகின்றன.

நாடு பூராகவும் பரவிய இக்கலவரம் காரணமாக முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வு கொண்டவர்கள் ஒரு புறமும் கொள்ளையர்கள் ஒரு புறமுமாக வன்முறைகள் பெருமளவில் பெருகுகின்றன. இவ்வன்முறைகளின் போது 49 முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். 189 முஸ்லீம்கள் படுகாயமடைகின்றனர். 4 முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குற்படுத்தப்படுகின்றனர். முஸ்லீம்களின் 4075 வர்த்தக நிலையங்களும் 250 வீடுகளும் எரித்தும்; அடித்து நொருக்கியும் தாக்கியழிக்கப்படுகின்றன.

இவ்வாறான பேரழிவுகள் இடம்பெற ஆரம்பித்து உச்ச கட்டத்தை அடைந்தபோது ஆங்கில அரசு இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறது. கொழும்பு நகருக்குள் இந்திய பஞ்சாப் படையினர் இறக்கப்படுகின்றனர். கண்டவுடன் சுடும் அதிகாரம் கொண்ட மார்சல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது. கலவரங்கள் 3 வாரங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்பும் மார்சல் லோ 100 நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது.

இக்கலவரம் காரணமாக சிங்களவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் 300 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர். 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றன. பெத்திரீஸ் என்ற பிரபல வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். ஏனையோர் தூக்கிலிடப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி பௌத்த மறுமலர்ச்சி என்ற பெயரில் ஏனைய இனங்கள் மீது வெறுப்பை ஊட்டியவர்கள், மது ஒழிப்பில் தீவிரங்காட்டியவர்கள் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய பத்திரிகைகளுடன் தொடர்புபட்ட சிங்களத் தலைவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

இவர்களுடன் எவ்.ஆர்.சேனாநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.பி.ஜெயதிலக்க, வலிசிங்க, பிரேமச்சந்திரா, ஆதர லீ டயஸ், பியதாச சிறீசேன, அநகாரிக தர்மபாலவின் சகோதரர்கள் இருவர் எனப் பலர் சிறைசெய்யப்படுகின்றனர். அநகாரிக தர்மபால வீட்டுக்காவலில் வைக்கப்படுகின்றார். ஒருவாறு கண்டிக்கலவரம் என அழைக்கப்படும் முஸ்லீமகளுக்கெதிரான வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. எனினும் அநகாரிக தர்மபாலவால் ஊட்டப்பட்ட சிங்களப் பௌத்த மேலாதிக்க போக்கும் ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வும் இன்றுவரை தொடர்ந்து சிங்களவர் மத்தியில் மக்கள் மயப்படுத்தப்பட்டு இலங்கையின் அமைதியைச் சிதைத்து வருவதுடன் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு கலவரங்களுக்கும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளுக்கும் மூலமாக அமைந்துள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும் அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE