Wednesday 1st of May 2024 04:35:04 PM GMT

LANGUAGE - TAMIL
.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தின் கட்டளை இன்று : முடிவுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் காத்திருப்பு!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தின் கட்டளை இன்று : முடிவுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் காத்திருப்பு!


தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றக் கட்டளை இன்று பகல் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அக்கட்டளையின் பின்னரே தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இன்று மதியம் மீண்டும் கூடி நீதிமன்றக் கட்டளை தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்படுகின்ற தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கின்ற நிலையில் அந்தத் தடையுத்தரவை நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் கோரிக்கை விடுத்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்குக் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்தன.

இந்தத் தடையுத்தரவு தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் நடைபெற்று வருகின்ற நிலையில் அந்த வழக்கு தொடர்பான நீதிமன்றக் கட்டளை இன்று அறிவிக்கப்படவுள்ளது. நீதிமன்றத் தடையுத்தரவு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று கட்டளை பிறப்பிக்கப்படும்.

இவ்வாறான நிலையில் நேற்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் மூன்றாவது தடவையாக ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என 9 தமிழ்த் தேசிய அணிகள் கலந்துகொண்டன.

இதன்போது தியாக தீபம் தீலீபன் நினைவேந்தலுக்கு அரசு விதித்துள்ள தடையுத்தரவு மற்றும் அந்தத் தடையுத்தரவை நீக்கி நினைவேந்தலுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அரசிடம் விடுத்த கோரிக்கை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இருந்தபோதிலும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் எந்தவித தீர்மானமும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஏனெனில் திலீபனின் நினைவேந்தல் குறித்தான நீதிமன்றக் கட்டளையொன்று இன்று பிறப்பிக்கப்பட இருப்பதால் அதன் பின்னர் இது குறித்தான இறுதி முடிவை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் முடிவைடைந்த பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் குறித்த வழக்கு தொடர்பான நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் இந்தத் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் இன்று மதியம் மீண்டும் ஒன்றுகூடி கலந்துரையாடலை நடத்த இருக்கின்றன.

இவ்வாறு நீதிமன்றக் கட்டளையின் பின்னராகக் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று எடுக்கவுள்ளது.

அந்தத் தீர்மானம் தொடர்பில் இன்றைய கூட்டத்தின் முடிவில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE