;

Monday 26th of October 2020 07:32:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)


'எமது தலைமைகள் பதவிகளுக்கு ஆசைப்படாமல் அமைச்சரவையில் தமிழ்ப்பிரதிநிதிகளுக்கு இடம் வழங்கப்படாமை தொடர்பாக பிரித்தானிய அரசுடன் வாதாடி இருக்கவேண்டும். ஆனால் தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் எதிர்காலம் குறித்து தூரநோக்குடன் செயற்படாது தமது சொந்த அபிலாசைகளிலும், பதவிகளிலுமே கண்ணாய் இருந்தனர்.'

இது அந்த நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'ஈழகேசரி' என்ற பிரபல பத்திரிகையில் 19.04.1939 இல் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த கருத்தாகும்.

டொனமூர் விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தத்தின்படி 1936 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச சபைத் தேர்தலில் 38 சிங்களவர்களும் 7 வடக்கு கிழக்குத் தமிழர்களும் 2 இந்தியர்களும் 1 முஸ்லீமும் தெரிவு செய்யப்பட்டனர். அதன்போது அரசுத் தலைவராக பொறுப்பேற்ற டீ.எஸ்.சேனாநாயக்க 10 சிங்களவர்களைக் கொண்ட ஒரு தனிச்சிங்கள அமைச்சரவையை உருவாக்கினார். ஒரு தமிழரோ அல்லது ஒரு முஸ்லீமோ கூட இல்லாத தனிச்சிங்கள அமைச்சரவையாக அது உருவாக்கப்பட்டது.

இந்த நாட்டில் இரு தேசிய இனங்களினதும் பங்களிப்பு இல்லாத அமைச்சரவை பிரித்தானிய ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தாது என்பதாலும் அதை எதிர்த்து தமிழர்கள் ஆளுனரிடம் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார் என்பதாலும் டீ.எஸ்.சேனாநாயக்க ஒரு தந்திரத்தை மேற்கொண்டார். அதாவது வைத்திலிங்கம் துரைச்சாமியை சபாநாயக்கராகத் தெரிவு செய்ததுடன் எவ்வித அதிகாரமுமற்ற துணை அமைச்சர் பதவிகளை ஜீ.ஜீ.பொன்னம்பலம், மகாதேவா, ஆர்.பாலசிங்கம் ஆகியோருக்கு அவர் வழங்கினார். அதன் காரணமாக தமிழ்ச் சிங்கள அமைச்சரவை என்ற நயவஞ்சகம் மூடிமறைக்கப்பட்டதுடன் தமிழ்த் தலைமைகளின் எதிர்ப்பும் இல்லாமல் செய்யப்பட்டது.

ஆனால் வடபகுதியிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட சில கல்விமான்கள் தமிழ்ச் சிங்கள அமைச்சரவைக்கும், தமிழ்த் தலைவர்கள் அதிகாரமற்ற பதவிகளைப் பெற்றுக்கொண்டமைக்கும் எதிராக கடுங்கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டனர். அத்தகைய கண்டனங்கள் மோர்னிங் ஸ்டார், ஈழகேசரி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்தன. அதில் ஆ.சிவராஜா என்ற அரசியல் அறிஞர் ஈழகேசரியில் வெளியிட்ட கட்டுரையில் தமிழ்த் தலைவர்களின் சுயநல அடிப்படையிலான துரோகத்தைப் பற்றி குறிப்பிட்டமையே நாம் ஆரம்பத்தில் பார்த்தோம். 1931ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை யாழ் குடா நாட்டு மக்கள் இளைஞர் காங்கிரசின் அழைப்பை ஏற்று ஏகமனதாகப் பகிஸ்கரித்தபோதும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதனுடன் ஒத்துப்போகாமல் அத்தேர்தலில் மன்னாரில் போட்டியிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் மன்னார் யாழ் குடாநாட்டுக்கு வெளியே இமைந்துள்ளது என்பதாகும். அத்தேர்தலில் அவர் தோல்வி அடைந்த போதும் அவர் அதைத் தனது தமிழ் மக்களிடையேயான அரசியல் பிரவேசத்துக்கு வெகு இலாவகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இனவாரியான தேர்தலுக்குப் பதிலாக முன்வைக்கப்பட்ட பிரதேசவாரியான தேர்தல் முறையையும் சர்வஜன வாக்குரிமை வழங்க்கப்படுவதையும் எதிர்த்து சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் தமிழர் மகாஜன சபை மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. அதன் காரணமாகவே மரபு வழித் தமிழ்த் தலைமைகள் செல்வாக்கு இழக்க தமிழ் இளைஞர் பேரவைக்கான ஆதரவு மேலோங்கியது. ஆனால் 1931இல் அரசாங்க சபையில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அங்கத்துவம் இல்லாது போனமை காரணமாக இளைஞர் காங்கிரஸின் ஆதரவுத்தளமும் சரிவடைய ஆரம்பித்தது.

அந்த இடைவெளியைப் பாவித்து லண்டன் சர்வ கலாசாலைப் பட்டதாரியும், சிறந்த வழக்கறிஞரில் ஒருவரும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் அரசியலுக்குள் புகுந்து கொண்டார். அவரின் பேச்சாற்றல் காரணமாகவும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடிப் பாரம்பரிய செல்வாக்குக் காரணமாகவும், தந்திரமான அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாகவும் வெகுவிரைவிலேயே அவர் தன்னை மரபுரீதியான மற்ற தமிழ்த் தலைவர்களை விட மேம்பட்ட ஒருவராக இனங்காட்டிக்கொண்டார்.

1931ஆம் ஆண்டு தேர்தல் பகிஸ்கரிப்புக் காரணமாக வெற்றிடமான குடாநாட்டுக்கான நான்கு சட்டசபை அங்கத்துவம் வெற்றிடமாகவே இருந்துவந்தது. எனினும் மக்கள் முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கை காரணமாக 1934 இல் நான்கு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெற்றி பெற்று அரச சபை உறுப்பினரானார். அதனையடுத்து 1934 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் சகாப்தம் 1952இல் தமிழரசுக் கட்சி உருவாகி அது 1956இல் பலம் பெறும் வரையில் நீடித்தது. அவரின் சுயநலம்மிக்க தவறுகளை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளாதவாறு தனது எதிரிகளை மடக்கும் தர்க்க ஆற்றல் காரணமாகவும், கவர்ச்சிகரமான பேச்சாற்றல் காரணமாகவும் மறைத்து தன்னைச் சுற்றி ஒரு நாயகத் தன்மையை உருவாக்கியிருந்தார்.

அதையடுத்து 1936இல் ஏழு வடக்கு கிழக்கு தமிழர்கள் வெற்றி பெற்றனர். டீ.எஸ்.சேனாநாயக்கா திட்டமிட்டு அவர்கள் எவரையும் அமைச்சரவையில் சேர்க்காமல் வை.துரைச்சாமிக்கு சபாநாயகர் பதவியையும், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மகாதேவா, ஆர்.பாலசிங்கம் ஆகியோருக்கு அதிகாரமற்ற துணையமைச்சுப் பதவிகளையும் வழங்கி தனிச்சிங்கள ஆட்சியதிகாரம் என்ற தோற்றத்தை மறைத்தபோது தமிழ்த் தலைவர்கள் அதற்கு துணைபோன வரலாற்றுத் தவறை மேற்கொண்டனர். அதுவே இலங்கை அரசியலில் சிங்கள மேலாதிக்கம் அசைக்கமுடியாதளவுக்கு நிலைபெற்றிருப்பதற்கு அத்திவாரமாக அமைந்தது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. சேர். பொன்.அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் காலத்திலிருந்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலம் வரை தமிழ்த் தலைவர்கள் கொழும்பு மைய அரசியலில் தமிழர்களின் பெயரால் தங்களை வலுப்படுத்த முயன்று வந்ததே தமிழ் அரசியலாக விளங்கி வந்தது. 1924 இல் சேர். பொன் அருணாசலத்தால் தாயகக்கோட்பாடு முன்வைக்கப்பட்ட போதிலும் அதே ஆண்டு அவர் மரணமடைந்து போனதால் அதுவும் வலுவிழந்துபோனது. இளைஞர் காங்கிரஸ் நேரடியாக கொழும்பு மைய அரசியலுக்குள் புகுந்து கொள்ளாவிட்டாலும் முழு இலங்கைக்குமான சுதந்திரம் என்ற கொள்கையின் மூலம் அவர்களும் தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணும் அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டனர்.

தமிழ் நிலப்பிரபுத்துவ மேல்தட்டுக் கனவான்கள் எப்போதும் கொழும்பு மைய அரசியலை அடிப்பைடயாகக் கொண்டமைக்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கினறன. முதலாவது அவர்கள் அரசியலை ஒரு பகுதி நேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இரண்டாவது தமது சொந்த அரசியலில் எதிர்காலத்தில் தமது தனிப்பட்ட முக்கியத்துவத்தை பாதுகாப்பதில் கண்ணாய் இருந்தனர். மூன்றாவது கொழும்பில் மேல்மட்ட கனவான் வாழ்க்கை முறையிலிருந்து அவர்கள் விடுபடத் தயாராக இருக்கவில்லை. நான்காவது சிங்களத் தலைவர்களுடன் தனிப்பட்ட நல்லுறவையும் நெருக்கத்தையும் பேணி வந்தனர். ஐந்தாவது சிங்கள அரசியலுடன் சமரசம் செய்து கொள்வதற்கு தயாரான மனநிலையைக் கொண்டிருந்தார்கள்.

எனவேதான் 1926இல், 1928 காலப்பகுதியில் எஸ்.டி.பண்டாரநாயக்காவாலும் கண்டித் தேசிய சங்கத்தாலும் முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தலைமைகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

1936 தேர்தலை அடுத்து கொழும்பு மைய அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த பதவி மோகத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்கால நலன்களை விற்றுவிட்ட நிலையில் வடக்கில் சில முற்போக்கு சிந்தனையுடைய கல்வியாளர்களைக் கொண்ட, 'அகில இலங்கை பாரம்பரியக் குடிமக்களின் இலங்கை அமைப்பு', (யுடட ஊநலடழn யுடிழசபைiயெட ஐnhயடிவையவெள வுயஅடை யுளளழஉயைவழைn ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது சமஷ்டித் தீர்வையே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக முன்வைத்தது. அவ்வமைப்பின் சார்பில் தமிழர்களின் இறைமையும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அப்படிப் பாதுகாக்கத் தவறினால் அழிவு நிச்சயம் எனவும் பகிரங்கப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. அதை வலியுறுத்தி அதன் சார்பில் பி.சின்னத்துரை என்பவரால் 25.07.1930 அன்று இந்து ஓர்கன் பத்திரிகையில் இலங்கைக்கு ஓர் சமஷ்டி அமைப்பு என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்து அவ்வமைப்பின் செயலாளரான ஆ.கந்தசாமி என்பவரால், 01.03.1940 அன்று, 'தமிழ் - இலங்கை அரச சபையும் சிங்கள - இலங்கை அரச சபையும் என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் டெல்லியில் இடம்பெற்ற திராவிடர்களுக்கும், சிங்களவர்களுக்குமான மாநாட்டில் தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட சமஷ்டி தொடர்பான தீர்மான ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் செயலாளரால் 15.09.1940 இல் லண்டனில் உள்ள குடியேற்ற நாட்டுச் செயலாளராக மகஜராக அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அவ் அமைப்பு மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கைகள் எவையும் கொழும்பு மைய தமிழ்த் தலைமைகளாலோ, பிரித்தானிய ஆட்சியாளர்களாலோ பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் நாயக வழிபாட்டுப் பாரம்பரியம் காரணமாகத் தமிழ் அரசியலில் வை.துரைசிங்கம், மகாதேவா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்களின் விம்பமே மேலோங்கி நின்றது. அவர்கள் பாரம்பரியக் குடிமக்கள் அமைப்பையோ அவர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கையோ கவனத்திலெடுக்கப்படவில்லை.

1926 – 1928 காலப்பகுதியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவாலும், 1939 – 1940 காலப்பகுதியில் பாரம்பரியக் குடிமக்கள் அமைப்பால் இருமுறை முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கைகள் மேட்டுக்குடித் தமிழ்த் தலைமைகளாலும் தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்டன. அதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் 1952 இல் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசுக்கட்சியை ஆரம்பித்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், டாக்டர். இ.எம்.வி.நாகநாதன் போன்ற தலைவர்கள் கூட அப்போது ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பின்னால் நின்றனரே ஒழிய சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவை வழங்கவில்லை.

அன்றைய தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் தனித்துவம் பற்றியோ இறைமை பற்றியோ எவ்வித அக்கறைகளுமின்றி பதவிகளை ஏற்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தாலும் கூட துரைசாமி, மகாதேவா போன்றோர் தமிழர் மகாஜன சபையை வழிநடத்தி வந்ததாலும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் சட்டநிபுணத்துவம் எதிர்த்தரப்பினரை மட்டந்தட்டி லாவகமாக முறியடிக்கும் வாதத்திறமை என்பன காரணமாகவும் தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருந்த இவர்கள் பற்றிய நாயகத் தோற்றப்பாடு இவர்கள் தொடர்ந்து தங்கள் அரசியலை முன்னெடுக்க வழி திறந்து விட்டது.

எப்படியிருந்தபோதிலும் கொழும்பு மைய மேட்டுக்குடி அரசியலின் சுயநல அபிலாசைகள் மிக்க துரோகத்தின் காரணமாக அப்போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள மேலாதிக்க சிந்தனைப் போக்கு இன்றை வரை நிலைத்து வளர்ச்சிபெற்று இன்று எமது மக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், துன்ப துயரங்களுக்கும் மூலவேராக அமைந்தன என்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE