Friday 26th of April 2024 09:23:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
மணிவண்ணனை யாழ்.மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை!

மணிவண்ணனை யாழ்.மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை!


யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாண மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார் .

மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை எதிர் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனுதாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், தனது மனுவை ஆதரித்து சமர்ப்பணத்தை முன்வைத்தார். இடைக்காலத் தடை உத்தரவை வழங்குமாறும் பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறும் அவர் கோரினார்.

மனுதாரரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்து இடைக்கால நிவாரணமான தடை உத்தரவு தொடர்பில் நாளை (இன்று) புதன்கிழமை கட்டளை வழங்குவதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தவணையிட்டது.

மனு இன்று மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

“மனுதாரரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பிரதிவாதிகளை நவம்பர் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

மனுதாரரின் இடைக்கால நிவாரணமான அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் கட்டளை வழங்கினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE