Thursday 25th of April 2024 08:38:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தலைமைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தலைமைகளும்! - நா.யோகேந்திரநாதன்!


உலக அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தைக் கையகப்படுத்த அமெரிக்காவும், சீனாவுக்குமிடையேயான போட்டி வலுப்பெற்று ஒரு பனிப்போராக விரிவடைந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று அதன் முடிவுகள் வெளிவந்து விட்டன.

சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியமை, உலக சுகாதார நிறுவனத்துடன் முரண்பட்டு அதற்கான உதவிகளை நிறுத்தியமை, உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தை நிராகரித்து ஒப்பமிட மறுத்தமை, ஈரான் வடகொரிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நிலவிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியமை போன்ற முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வன்போக்கைக் கையாண்டு வந்தமையும் உள்நாட்டில் கொவிட் - 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்நோய் தொடர்பாகச் சீனாவைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தமையும் வேலையில்லாத்திண்டாட்ட அதிகரிப்பை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமையும் உலக அரங்கிலும் உள்நாட்டிலும் அவர் தொடர்பான எதிர்ப்புணர்வை வலுப்படுத்தியிருந்தன. அவர் ஒரு மூன்றாம் உலக நாட்டின் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போல் நடந்து கொண்டார் எனச் சில அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுமளவுக்கு அவரின் போக்கு வழமைக்கு முரணாக அமைந்திருந்தது.

அதேவேளையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ.பைடன் இருமுறை துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்த அனுபவம் கொண்டவராகவும் உலக நாடுகளுடன் ஒரு மென்போக்கான போக்கை வெளிப்படுத்துபவராகவும் வார்த்தைகளை மிகவும் நாகரீகமாகப் பிரயோகிப்பவராகவும் விளங்கி வருகிறார்.

அப்படியான ஒரு சூழலிலே இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ.பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதேவேளையில் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான கமலா ஹரீஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரும் அமெரிக்க அரசியலிலும் இராஜதந்திரப் பணிகளிலும் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உலகின் மிக முக்கிய ஜனநாயக நாடு எனக் கூறப்பட்டபோதிலும் அதன் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் எனக் கருதப்படுகிறது. ஆனால் பொருளாதாரம் உலக வர்த்தக மையத்தாலும் பாதுகாப்பு பென்டகன் அமைப்பாலும், வெளிவிவகாரங்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யாலும் வகுக்கப்படும் வியூகங்களே அமெரிக்காவை வழிநடத்துகிறது.

எவர் அமெரிக்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வந்தாலும் அவரோ, ஆட்சி பீடமோ அந்த வியூகத்துக்குள்ளேயே செயற்படமுடியும். அந்த எல்லையை மீறுபவர்கள் படுகொலை செய்யப்படுவர், அல்லது ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்படுவார்கள் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன், ஜோன் எவ். கென்னடி, ரிச்சேட் நிக்ஸன் போன்ற ஜனாதிபதிகளின் வரலாறுகள் சாட்சியமாக உள்ளன.

இப்படியான ஒரு புறச் சூழலில் ஜோ.பைடனின் பதவியேற்பு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில். நியாயபூர்வமான பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அமெரிக்காவின் உலக வல்லாதிக்கப் போட்டியில் தனக்குச் சாதகமாக எமது பிரச்சினைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

இப்படியான ஒரு நிலையில் ஜோ.பைடனுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி உள்ளடக்கிய விடயம் தொடர்பாகவோ, நாடு கடந்த தமிழீழத் தலைவர் உருத்திரகுமாரன் வெளியிட்ட கருத்து தொடர்பாகவோ கவனத்திலெடுக்காமல் விடமுடியாது.

ஆனால் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனோ, ஏற்கனவே உலகமயமாக்கல் நிலைமைகளின் கீழ்த் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறும் வகையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரோ இதுவரை ஜோ.பைடனின் வெற்றி பற்றி எவ்வித கருத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ.பைடனும், உபஜனாதிபதியாக கமலா ஹரீசும் தெரிவு செய்யப்பட்டமையை வரவேற்பதாகவும் இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் உறுதியான மீளப் பெறமுடியாத தீர்வைப் பெறுவதற்கு ஜோ.பைடனும் கமலா ஹரிசும் உதவுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

2015ல். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றவிடாமல் தடுப்பதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டமைக்கான புறச் சூழல் எவ்வாறு அமைந்திருந்ததோ அவ்வாறான ஒரு நிலைமை தற்சமயம் இலங்கையில் உருவாகியுள்ளமையை மறந்து விடமுடியாது. அது போலவே இலங்கையில் சீனாவின் நிலை வலுப்பெற்றுள்ளது மட்டுமின்றி, அந்நிலையிலிருந்து பின்வாங்கப் போவதில்லையென்பதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சொல்லாலும் செயலாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

தற்போது இலங்கையில் நிலவும் சூழலில் எவ்வித வழி மூலமும் இன்றைய ஆட்சியைக் கவிழ்க்கமுடியாது என்ற நிலையில் அதைப் பலவீனப்படுத்தவும், அதற்குத் தொல்லை கொடுக்கவும் சர்வதேச அரங்கிலும் இலங்கையிலும் அமெரிக்க, இந்திய தரப்புகள் முயற்சிக்கத் தவறமாட்டா என்பதில் சந்தேகமில்லை. எனவே இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பன தொடர்பான விடயங்கள் முன்னுக்குக் கொண்டு வரப்படும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ பேச்சுக்களை நடத்தியபோது கடந்த காலங்களுக்கான இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டது கவனிக்கப்படவேண்டிதொன்றாகும்.

ஆனால் இலங்கை சீனா பக்கம் மேலும் மேலும் சாய்வதைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்படப் பல பிரச்சினைகள் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும். ஆனால் அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே அமைந்திருக்கும். ஏனெனில் இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்தால் அது முற்றாகவே சீனா பக்கம் சாய்ந்து விடுமென்ற அச்சம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டு.

எனவே, இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்பார்ப்பது போல ஜோ.பைடனும், கமலா ஹரீசும் தமிழ் மக்களுக்கு உச்ச கட்ட அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்படுவார்கள் என்பது நடப்பதற்கான சத்தியங்கள் கிடையாது. தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத் தரும். அமெரிக்கா பெற்றுத்தரும் என காலம் காலமாகத் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததன் தொடர்ச்சியே அவரது தற்போதைய கருத்துக்களாகும். இவர்கள் 2015 தொட்டு 2019 வரை நல்லெண்ண ஆட்சியில் உத்தியோகப்பற்றற்ற பங்காளிகளாக விளங்கிய போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதை மறந்து விட முடியாது. ஆனால் மேற்குலகினதும் இந்தியாவினதும் அபிலாஷைகளுக்கு இயைவான முறையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுத்தனர் என்பது உண்மைதான்! அதற்காகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவோ, இந்தியாவோ முதன்மைப்படுத்தி உச்ச கட்ட அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த செயற்படுவார்களென எதிர்பார்த்தால் அதைவிட வேறு முட்டாள்தனம் இருக்கமுடியாது.

ஆனால் தமிழ் தலைமைகள் ஒரு வலுவான பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை முன் வைப்பார்களானால் சில சாத்தியமான நிலைமைகள் உருவாகக்கூடும்.

இப்படியான போராட்டங்களை முன்வைத்து அமெரிக்கா, இந்தியா ஆகியன இலங்கை சீனா பக்கம் சாய்வதைத் தடுக்க அல்லது குறைக்கப் பயன்படுத்துவார்கள். அதேவேளையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் தரப்பினரும் இனப்பிரச்சினை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத்தவறினால் அவர்கள் மக்களின் ஆதரவை முற்றாக இழக்க வேண்டிவரும்.

இவ்வாறான பலமிக்க வெகுஜனப் போராட்டங்கள் மூலமே அரசாங்கத்துக்கு இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அழுத்தங்கள் அதிகரிக்கும்.

ஆனால் தமிழ் தலைமைகள் தங்கள் சுயநல எல்லைக் கோடுகளைக் கடந்து ஐக்கியப்படவோ, வெகுஜனப் போராட்டங்களில் இறங்கிக் கைது செய்யப்படவோ சிறை செல்லவோ தயாராயில்லை. அவர்கள் காலம் காலமாக சர்வதேசத்தையும், இந்தியாவையும் காட்டி ஏமாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

அதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அமெரிக்கா இந்தியா மூலமே எமது பிரச்சினைகளைக் கையாளுமெனவும் நாம் எமது வியூகங்களை இந்தியா எமது பிரச்சினையில் அக்கறைப்படுமளவுக்கு வகுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். அது ஓரளவு ஏற்றக்கொள்ளக்கூடிய கருத்து என்றாலும்கூட அது எவ்வாறு என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும் அது தனது பிராந்திய மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கும். அதற்கமைவாகச் செயற்படுமளவுக்கும் அது பிராந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கு தமிழரிடம் பலம் உள்ளதா? என்பதே கேள்வி.

அதுகூட தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழியில் முனைப்புப் பெறுவது மூலமும் புலம் பெயர் தமிழர்கள் அதற்கு ஆதரவான போராட்டங்களை நடத்தி அந்தந்த நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும். அதை உருத்திரகுமாரன் செய்வாரா?

ஆனால் உள்நாட்டுத் தமிழ் தலைமைகளோ கடல் கடந்த தமிழ் தலைமைகளோ தங்கள் கனவான் அரசியலை விட்டு வெளிவந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலில் இறங்கப்போவதில்லை. அதற்கான விசுவாசமோ, அர்ப்பண உணர்வோ அவர்களிடமில்லை.

இவர்களால் எப்போதுமே இந்தியாவையும் சர்வதேசத்தையும் காட்டி தமிழ் மக்களை இலவுகாந்த கிளிகளாக்கி உரிமைப்போராட்ட உணர்வை மழுங்கடித்து ஒடுக்குமுறையாளர்களுக்குச் சேவை செய்வதையே மேற்கொள்ளமுடியும். இதுவே கடந்த காலம் தமிழ் மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் அனுபவமாகும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

17.11.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE