Tuesday 27th of July 2021 03:28:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)


"பௌத்த சிங்கள தேசிய எழுச்சி"

நாட்டுக்குத் தேவை தேசியப் பெருமிதம். ஆனால் இங்கு சிங்கள, தமிழ் பெருமிதமே தோன்றியுள்ளது. எனவே சிங்கள மகா சபையின் பிரதான இலக்கு தேசியப் பெருமிதத்தைக் கட்டியெழுப்புவதாகும். மதம் தர்மம் தொடர்பிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்கக்கூடிய இயல்பு வளர்த்தெடுக்கப்படவேண்டும். நமக்கான உணவு, உடை உட்பட்ட பண்பாட்டு அம்சங்கள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். இவற்றை அடைவதற்கு முதலில் பிளவுபட்டுள்ள சிங்கள இனத்தைப் பேதங்களின்றி ஒன்றிணைத்துப் பின்னர் ஏனைய இனங்களையும் சேர்த்துக் கொண்டு ஐக்கியமாக சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் வென்றெடுக்க வேண்டும்.

1934ம் ஆண்டு மே மாதம் 19ம் நாள் கொழும்பில் அமைந்துள்ள பௌத்த மண்டலயவில் சிங்கள மகா சபை உருவாக்கப்பட்டபோது அதன் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் அவ்வமைப்பின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட கருத்துக்கள் இவை.

எமது தமிழ்த் தலைவர்கள் காலங்காலமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவைப் படுமோசமான இனவாதியாகவும் சிங்கள மகாசபையை ஒரு தமிழர் விரோத அமைப்பாகவும் சித்தரித்து வந்தனர். ஆனால் அவர்கள் தமது மொழியையும் மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்து தமது இனத்தை, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அக்கறை காட்டிய அதேவேளையில் ஏனைய இனங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பதையும் கொள்கையாகக் கொண்டிருந்தனர் என்பது இப்பிரகடனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்தவொரு இனமும் தனது மொழியை, மதத்தை, பண்பாட்டைப் பேணி வளர்ப்பது என்பது நியாயமானது. அது எக்காரணம் கொண்டும் தவறாக இருக்கமுடியாது.

ஆறுமுகநாவலரால் முன்னெடுக்கப்பட்ட சைவத் தமிழ்த் தேசிய எழுச்சியை பல அறிஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளல்ல. 1924ல் சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் தமிழர் மகாஜன சபையை உருவாக்கி தமிழ்த் தேசிய அடையாளம் தொடர்பான அரசியலை முன் வைத்தார். ஆனால் அவரின் இறப்பின் பின் தமிழ்த் தலைமைகள் கொழும்பு மைய அரசியலில் தங்களைப் பலப்படுத்தத் தமிழ் அடையாளத்தைப் பயன்படுத்தினரேயொழிய தமிழ்த் தேசிய உணர்வை மக்கள் மத்தியில் கட்டிவளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அவர்கள் ஆங்கிலம் கற்ற கனவான்களாகவும் கொழும்பு மைய மேற்கத்தைய வாழ்வு முறைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.

இவ்வாறே இலங்கைத் தேசியக் காங்கிரஸ் அமைப்பினரும் ஆங்கிலம் கற்ற மேற்கத்தைய வாழ்வுமுறையைப் பின்பற்றும் மேட்டுக்குடியினராயிருந்தனர். 1944ல் சட்டசபையில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக இருக்கவேண்டுமென்ற பிரேரணையைக் கொண்டு வந்ததும் இலங்கைத் தேசியக் கொடியில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தைப் பதித்ததும் அவர்கள் சிங்கள மேட்டுக்குடியினரின் அரசியல் மேலாதிக்கத்தை ஏனைய சிங்கள மக்கள் மீதும் இனங்கள் மீதும் தக்க வைக்கும் நோக்கம் கொண்டவையாகும்.

எனவே இந்த இரு மேட்டுக்குடித் தலைமைகளும் உண்மையான பௌத்த சிங்கள தேசிய அமைப்பான சிங்கள மகா சபையை எதிர்த்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

1924ல் சேர்.பொன்.அருணாசலத்தால் அரசியல் அரங்கில் முதன் முதலாகத் தமிழ்த் தேசியம் முன்வைக்கப்பட்டபோதும் அவரின் இறப்பின் பின்பு அரசியலை முன்னெடுத்த இளைஞர் காங்கிரஸ் உட்பட்ட தமிழ் தலைமைகள் தமிழ்த் தேசியம் பற்றிய அக்கறைகளை முன்னெடுக்கத் தவறிய நிலையில் அது மெல்ல மெல்ல வலுவிழந்து போய்விட்டது.

ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ்த் தேசியம் பற்றிய அக்கறையற்றவராக இருந்த போதிலும் கொழும்பு மைய அரசியலில் தமிழுக்கான உரிய இடத்தைப் பெறுவது தொடர்பாகத் தீவிர கவனம் செலுத்தினார். அதன் காரணமாக அவர் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன் வைத்தார். அதாவது டொனமூர் அரசியலமைப்பு மூலம் ஏற்படுத்தப்பட்ட பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை நீக்கி இன அடிப்படையிலான சிங்களவர்களுக்கு 50 வீதமும் தமிழ் உட்பட ஏனைய சிறுபான்மையினருக்கு 50வீத பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தில் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையைப் பலமாக வலியுறுத்தினார்.

அதற்காக அவர் மேற்கொண்ட பிரசாரங்கள் காரணமாக தமிழ் மக்களின் இன உணர்வு தட்டியெழுப்பப்பட்டதை மறுத்துவிட முடியாது. சோல்பேரி அரசியலமைப்பு உருவாக்கத்தில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பு 1947ல் இடம்பெற்ற தேர்தலில் அவரின் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கோஷத்தை முன் வைத்தே போட்டியிட்டு தமிழ்ப் பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றது. 1945ல் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்க் காங்கிரஸ் தமிழர்களின் ஒரு வலிமையான அரசியல் தலைமையாக எழுச்சி பெற்றது என்பது உண்மை. ஆனால் 1934ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபை சிங்கள தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்தபோது 1945ல் தொடங்கப்பட்ட தமிழ்க் காங்கி;ரஸ் இலங்கைத் தேசியத்தில் தமிழர்களுக்கான உரிய பங்கைப் பெறுவதில் மட்டுமே அக்கறை செலுத்தியது.

சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்பு என்.எம்.பெரேரா, டொக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற தீவிர இடதுசாரிகள் தலைமையில் லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை முன்வைத்து தமது அரசியலை முன்னெடுத்த காரணத்தால் அக்கட்சி தொழிலாளர்கள் மத்தியிலும் படித்த, நடுத்தர இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக வளர ஆரம்பித்தது. அது மட்டுமன்றி மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் அக்கட்சி பலமான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கியது.

சிங்கள மகா சபையும் சமசமாஜக் கட்சியும் மக்கள் அமைப்புக்களாக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சியடைந்த போதிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் இலங்கையின் பூரண சுதந்திரம் தொடர்பாகவும் ஒரே விதமான தீவிரக் கொள்கைகளைக் கொண்டிருந்தன.

இவ்விரு கட்சிகளும் எவ்வளவுதான் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த போதிலும் பிரித்தானிய அரசுடன் பேரம் பேசும் சக்தியை சிங்கள மேட்டுக்குடியினரின் அமைப்பான இலங்கைத் தேசியக் காங்கிரஸும் தமிழர் சார்பில் தமிழ்க் காங்கிரஸுமே கொண்டிருந்தன.

இலங்கைத் தேசிய காங்கிரஸ் அரசியல் களத்தில் ஒரு பலம் பெற்ற சக்தியாகத் தோற்றம் கொண்டிருந்தபோதும் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அவர்களால் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. நகரப் புறங்களில் சமசமாஜக் கட்சியும் கிராமப் புறங்களில் சிங்கள மகா சபையும் பலமான அணிகளாக வளர்ச்சி பெற்று வந்தன.

எனவே இலங்கைத் தேசிய காங்கிரஸ் சிங்கள மகா சபையைத் தம்முடன் இணைத்துக்கொள்ள எடுத்த பல முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. எனினும் பெரும் முயற்சிகளின் பின்பு இலங்கைத் தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, முஸ்லிம் அமைப்புகள், நடேசன், மகாதேவா போன்ற சில தமிழ்த் தலைமைகள் ஆகியோரை ஒன்றிணைத்து ஐ.தே.கட்சி உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக டி.எஸ்.சேனநாயக்கவும் உபதலைவராக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் பண்டாரநாயக்க சிங்கள மகா சபையைக் கலைத்து விடவில்லை. மாறாக அதற்கேயுரிய சிங்கள பௌத்த தேசியக் கொள்கையுடன் அதை வளர்ப்பதில் தீவிரம் காட்டினார்.

1947ல் இடம்பெற்ற தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றி பெற்றது. டி.எஸ்.சேனநாயக்க பிரதமரானார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உள்ள10ராட்சி மற்றும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் சபை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

1948 பெப்ரவரி மாதம் இலங்கை சுதந்திரம் பெற்றபோது தனிச் சிங்களக் கொடி தேசியக் கொடியாக ஏற்றப்பட்டபோதிலும் 1948 ஒக்டோபரில் 18ம் இலக்க சட்டத்தின் மூலம் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டபோதும் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தேசியக் கொடியில் மாற்றம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் பண்டாரநாயக்கவே நியமிக்கப்பட்டார். அக்குழுவே தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒவ்வொரு கோடுகளால் அடக்கிவிட்டு அதை ஒரு பௌத்த சிங்களக் கொடியாக உருவாக்குவதற்கான சிபார்சை வழங்கியது.

இந்த இரு சந்தர்ப்பங்களிலும் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டபோது வலியுறுத்தப்பட்ட தேசியப் பெருமிதமும் சிங்கள இனத்தைப் பேதங்களின்றி ஒன்றுபடுத்திப் பின்னர் ஏனைய இனங்களையும் சேர்த்துக் கொண்டு ஐக்கியமாகச் சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் வென்றெடுத்தல் என்ற கொள்கையும் முற்றாகவே கைவிடப்பட்டு விட்டன.

அதேவேளையில் அதே அரசாங்கத்தில் தமிழ்க் காங்கிரஸும் பங்கு கொண்டது என்பதும் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட விடயத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சுயேட்சை உறுப்பினரான வவுனியாத் தொகுதி உறுப்பினரான சுந்தரலிங்கமும் ஆதரவு வழங்கினர் என்பதும் தேசியக் கொடியை முதலில் கடுமையாக எதிர்த்த போதிலும் பின்பு அதை மௌனமாக ஏற்றுக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் 1947ல் வர்த்தக அமைச்சராக மு.சுந்தரலிங்கமும் 1948ல் பிற்பகுதியில் கைத்தொழில் அமைச்சராக ஜீ.ஜீ.பொன்னம்பலமும் பதவியேற்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அன்றைய தமிழ்த் தலைமைகளுக்குமிடையே இடையிடையே முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்றாலும்கூட ஒரு உள்ளார்ந்த உறவு நிலவியதை அவதானிக்கமுடியும். அது ஏகாதிபத்தியச் சார்பு, மேட்டுக்குடி உயர் குழாத்தின் அரசியல் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவாகும்.

இந்த நிலையில்தான் 1949ல் இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழ்க் காங்கிரஸை விட்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி. நாகநாதன், சி.வன்னியசிங்கம் போன்ற தலைவர்கள் வெளியேறினர்.

அதையடுத்து 1949ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை கொழும்பு மைய அரசியலில் உரிய பங்கைப் பெறுவதற்கான பாதையில் சென்ற தமிழ் அரசியலிலிருந்து வெளியேறி தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை என்பவற்றை வலியுறுத்தும் சமஷ்டிக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதற்கான பயணத்தின் ஆரம்பம் என்றால் மிகையாகாது.

இவ்வாறு தமிழர் தரப்பில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் கால்கோள் இடப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள பௌத்த தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிங்கள மகா சபைக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையேயான முரண்பாடுகள் கூர்மையடைய ஆரம்பித்தன. ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் சிங்கள மகா சபையைச் சேர்ந்த 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் 4 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் துணை அமைச்சர்களாகவும் பங்கு கொண்டிருந்த போதிலும் அவர்களது வேலைத்திட்டங்களை ஐ.தே.கட்சித் தலைமை புறந்தள்ளும் வகையிலேயே செயற்பட்டு வந்தது.

1951 ஜூலை 3ம் நாள் மாதம்பை மாநாடு எனப் பிரசித்திபெற்ற சிங்கள மகா சபையின் 19ஆவது மாநாடு இடம்பெற்றது. அம்மாநாட்டில் உடனடியாகச் சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட வேண்டுமெனவும் தமிழர் தரப்பு கோரினால் அதையும் அரச கரும மொழியாக்க வேண்டுமெனவும் அந்நியராட்சியில் சீரழிக்கப்பட்ட பௌத்த மதத்துக்கும் சிங்களக் கலாசாரத்துக்கும் புத்துயிரளிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் தீர்மானங்களை சிங்கள மகா சபை ஐக்கிய தேசியக் கட்சியில் முன் வைத்தபோது டி.எஸ்.சேனநாயக்க அவற்றை முற்றாகவே நிராகரித்தார். இந்த நிலையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஐ.தே.கட்சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் போய் அமர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்கள மகா சபையை கலைத்துவிட்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு, இலங்கைத் தேசிய எழுச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 1951ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார்.

இது ஐ.தே.கட்சியின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு அரசியல், பொருளாதார, கலாசார சுயாதீனமுள்ள ஒரு இலங்கையைக் கட்டியமைப்பதைக் கொள்கையா கக் கொண்டு வேகமாக வளர ஆரம்பித்தது.

சிங்கள பௌத்த தேசிய அபிலாஷைகளைக் கொள்கையாகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ்த் தேசிய அபிலாஷைகளைக் கொள்கையாகக் கொண்ட தமிழரசு கட்சி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் வேகமாக வளர ஆரம்பித்தது.

இது ஏற்கனவே இலங்கையில் கோலோச்சிய ஏகாதிபத்திய சார்பு, நிலப்பிரபுத்துவ மரபுகள் அரசியலை விட்டு வெளியேறி தேசிய அபிலாஷைகளை முன்னெடுக்கும் ஒரு வரலாற்று மாற்றமாகவே ஆரம்பமானது.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE