Monday 19th of April 2021 11:15:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
நினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்! - நா.யோகேந்திரநாதன்!

நினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்! - நா.யோகேந்திரநாதன்!


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல தரப்பினருடனும் முக்கிய பேச்சுகளை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இலங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்ற அதேநாள் இரவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சரின் விஜயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு விடயங்களாகத் தோன்றியபோதிலும் ஆழமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சர் வெளியிட்டிருந்த கருத்துகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் வழங்கப்பட்ட பதிலாகவே நினைவுத் தூபி இடிப்பைப் பார்க்க முடிகிறது. ஏற்கனவே இந்த நினைவாலயத்தை அகற்றும்படியும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்நினைவாலயம் அமைப்பதை இடைநிறுத்தும்படியும் உயர் கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உத்தரவிட்டிருந்தபோதும் அது கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஆண்டு அஞ்சலி நிகழ்வும் நடத்தப்படும்வரை அக்கட்டளையை நிறைவேற்றாது தற்சமயம் திடீரென அதை அழிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டமைக்கான காரணம் எதுவென்ற கேள்வி எழுகிறது. எனவே இச் சம்பவம் இந்திய அமைச்சர் வெளியிட்ட கருத்துகளுக்கு வழங்கிய பதில் என்றே கருதப்படுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கை இனப்பிரச்சினை உட்படப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்திய பின்பு அவரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இணைந்து மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துகள் மிகவும் முக்கியமானவையாகும். அவர் தனதுரையில் "இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது ஐக்கிய இலங்கையில் தமிழர்களுக்கு நீதி, சமத்துவம், அமைதி, கண்ணியம் என்பவற்றை உறுதி செய்வது; இனப்பிரச்சினைத் தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்பன இலங்கையின் நீண்ட கால நலனுக்கு நல்லது" எனத் தெரிவித்திருந்தார். அங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்த்தன அவை பற்றிய கருத்துக்கள் எவற்றையும் வெளியிடாது கொரோனாவுக்கு இந்திய உதவி, முதலீடுகள், வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, கடற்றொழில் என்பன பற்றி ஆக்கபூர்வமான பேச்சுகள் இடம்பெற்றமை பற்றிய விடயங்களை மட்டுமே தெரிவித்திருந்தார்.

அவர் மட்டுமன்றி ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சரவை பேச்சாளரோ ஜெய்சங்கர் அவர்கள் வலியுறுத்திய அந்த விடயம் தொடர்பாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதாகவோ அல்லது நிராகரிப்பதாகவோ எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் அவர் இலங்கையை விட்டு வெளியேற விமானமேறிய அன்று இரவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிம் என்பன உறுதி செய்யப்படவேண்டும் என்பதும் எவ்வகையான முறையில் நிறைவேற்றப்படும் என்பது யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தூபி இடித்தழிக்கப்பட்டதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துகளுக்குச் சவால் விடும் வகையில் பதிலிறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த நினைவாலயத் தகர்ப்பின் மூலம் அரசாங்கம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துகளை ஏற்கப் போவதில்லை என்ற செய்தியை அவருக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் தெரிவித்து அவர்களையும் திருப்திப்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத் தரும் நடவடிக்கையில் இந்தியாவைத் தாம் நம்புவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 2010ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப் பிரச்சினைத் தீர்வுக்கு 13 பிளஸ் மூலம் தீர்வு வழங்கப் போவதாக முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலருக்கு வாக்குறுதி வழங்கிய நாள் தொட்டு இன்றுவரை சம்பந்தன் இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்பதைச் சலிப்பின்றிக் கூறி வருகிறார். அதாவது கடந்த 11 வருட காலமாகக் கானலை நீர் எனக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்.

இப்போது ஜெய்சங்கரின் கருத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவாலயத் தகர்ப்பின் மூலம் இலங்கை அரசு பதிலளித்த நிலையிலும்கூட பழைய பல்லவியை மீண்டும் சம்பந்தன் இசைத்திருக்கிறார். இவ்வாறு சம்பந்தனும் அவரைச் சார்ந்தவர்களும் யதார்த்த நிலைமைகளைப் பற்றிப் பொருட்படுத்தாது தமிழ் மக்களுக்கு கற்பனைக் கனவுகளைக் காட்டி ஏமாற்று அரசியல் செய்ய ஆட்சியாளர்களோ முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்ப்பின் மூலம் வேறு பல இனவாத பலாபலன்களையும் இலக்கு வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கருத்து வெளியிடுகையில், தற்சமயம் யாழ்.பல்கலைகழகத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒற்றுமையாகக் கற்று வருகின்றனர் எனவும் அவர்களுக்குப் போர் காலத்தில் 10 அல்லது 11 வயதாக இருந்தது எனவும் தூபிகள் அமைப்பது போன்ற விடயங்கள் அவர்களுக்கு போர் காலத்தை நினைவூட்டி நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும் எனவும் எனவே மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படாமல் தவிர்க்கவே உபவேந்தர் இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பல்கலைக்கழகம் சுயாதீனமான நிறுவனமெனவும் மாணவர்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு உபவேந்தர் மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பல்கலைகழக நிர்வாகம் மாணவர்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் அப்படி வேறுயாராவது கட்டளையிட்டிருந்தால் யாரால் கட்டளையிடப்பட்டதென ஆராயப்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

போர் முடிந்த பின்பு ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பாக இதுவரை மாணவர்களிடையே எவ்வித குழப்பங்களும் ஏற்பட்டதில்லை என்பது மட்டுமல்ல இவற்றில் சிங்கள மாணவர்களும் பங்கு கொண்டுள்ளனர். பொலிஸார், படையினரால் சில நெருக்கடிகள் ஏற்பட்டனவேயொழிய மாணவர்களிடையே எவ்வித குழப்பமும் ஏற்பட்டதில்லை. அப்படியான நிலையில் மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் நினைவுத் தூபியால் நல்லிணக்கம் குலைந்து விடுமென விசித்திரமான கற்பனையை முன் வைக்கிறார்.

அதேவேளையில் இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அது நிர்வாகத்தின் தீர்மானமேயென்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல பல்கலைக்கழகம் ஒரு சுயாதீனமான நிறுவனமெனவும் மேற்படி சம்பவம் தொடர்பாக நிர்வாகமே முடிவெடுத்ததெனவும் கூறியதுடன் இக்கட்டிடம் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடமோ, அல்லது உயர் கல்வியமைச்சிடமோ அனுமதி பெறப்படவில்லையெனவும் அனுமதி கோரியிருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், இராணுவத் தளபதி, அமைச்சரவைப் பேச்சாளர் என அனைவருமே இந்த இடிப்புக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையெனத் தெரிவித்துப் பழியைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையிலேயே போட்டுள்ளனர்.

ஆனால் பல்கலைகழக உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் இந்த நினைவுத் தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததெனவும் அதை அகற்றுமாறு அழுத்தங்கள் தன்மீது பிரயோகிக்கப்பட்டதெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்படப் பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே அதை இடிப்பதற்கான தீர்மானத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டி வந்ததெனவும் தெரிவித்திருந்தார்.

எனவே பல்வேறு தரப்பினரும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே உபவேந்தர் இப்படியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதையும் ஆனால் தற்சமயம் அழுத்தம் கொடுத்த அதே தரப்பினர் உபவேந்தர்; இந்நடவடிக்கையைத் தன்னிச்சையாக மேற்கொண்டார் என்பதாகப் பழியை அவர் மீது சுமத்துகின்றனர்.

2015ம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் களனி, பேராதனை, சப்ரகமுவ, ரஜரட்டை, தென்கிழக்கு, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பல்வேறு விதமான மாணவர்களுக்கும் உபவேந்தர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகத் தொடர்ந்து குழப்பங்கள் நிலவின. இதன் காரணமாக ஆர்ப்பாட்டங்கள், கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள், மாணவர்களின் கைது போன்ற அமைதியின்மை நிலவின. இவ்வாறு அங்கெல்லாம் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டபோதும் யாழ்.பல்கலைக்கழகத்தில் அவை சுமுகமாக இடம்பெற் றன.

எனவே மேலிடங்களின் அழுத்தங்கள் காரணமாகவே உபவேந்தர் இந்நடவடிக்கையை மேற்கொண்டபோதும் பழியை அவர் மீது சுமத்துவதன் மூலம் அவர் மீது மாணவர்களுக்கு கசப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதென்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதன் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளையும் குழப்பும் உள்நோக்கம் இல்லையென்று சொல்லிவிடமுடியாது.

அதேவேளையில் இறந்தவர்களுக்கான நடுகல் வழிபாடு என்பது தமிழ் மக்களிடையே சங்க காலம் தொட்டு நிலவி வரும் பாரம்பரிய கலாசார விழுமியங்களில் ஒன்றாகும். எனவே இந்த நினைவுத் தூபி இடிப்பு தமிழர்களின் அடிப்படைப் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றே கருத வேண்டியுள்ளது. எவ்வாறு கொரோனாவில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டு உரிமை பறிக்கப்படுகிறதோ அவ்வாறே தமிழர்கள் உரிமையும் இச்சம்பவம் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

எனவே இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென வெளியிட்ட கருத்துக்கு பல்கலைக்கழக சமூகம் மரணித்த தங்கள் உறவுகளை நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையெனவும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சமுகமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியும் பாரம்பரிய பண்பாட்டு விழுமியத்தை மறுதலித்தும் இலங்கை அரசு பதில் வழங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவாலாகவே கருதப்படவேண்டியுள்ளது.

எனினும் ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போன்று இவ்விடயம் சாதாரணமாக முடிந்துவிடவில்லை. அடுத்த நாள் அதிகாலையிலேயே பொது மக்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என ஏராளமானோர் பல்கலைக்கழக வாயிலில் ஒன்று தி;ரண்டு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அதுமட்டுமன்றி மாணவர்கள் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்படும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வதென முடிவுசெய்து அன்று நண்பகலே அதை ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி அடுத்தநாள் வட, கிழக்கு எங்கும் பரந்தளவில் இவ் அட்டூழியத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு பரந்தளவில் ஹர்த்தால் நடவடிக்கையை மேற்கொள்ளும்படியும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அறைகூவல் விடுத்தனர்.

அதையடுத்து தமிழ் அரசியல் தலைமைகள் மட்டுமன்றி முஸ்லிம் தலைமைகளும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டதுடன் ஹர்த்தாலில் கலந்து கொள்ளும்படி சகல முஸ்லிம், தமிழ் மக்களுக்கும் அழைப்புவிடுத்தனர்.

இது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில் இரவோடிரவாக மீண்டும் தூபியை அமைப்பதற்கான அனுமதியை உபவேந்தருக்கு அறிவித்தது. அவ்வகையில் அடுத்தநாள் அதிகாலையில் மீண்டும் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு உபவேந்தர் தலைமையில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளையில் மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதுடன் தாங்கள் போராட்டத்தை நிரந்தரமாகக் கைவிடவில்லை எனவும் நினைவுத் தூபி அமைக்கும் நடவடிக்கையைப் பொறுத்து அவ்விடயம் இழுத்துப்பறித்து நிறைவேற்றாமல் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் மீண்டும் களத்தில் இறங்கப்போவதாகத் தெரிவித்தனர்.

போராட்ட நிலைமைகள் கூர்மையடையும்போது சமாளிக்கும் வகையிலான சில நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுப்பதும் பின்பு அதை ஆறப்போட்டு நீர்த்துப் போகவைத்து இறுதியில் கைவிடுவதும் புதிய விடயமல்ல.

ஆனால் இது பரந்துபட்ட தமிழ் மக்களின் இதய உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற காரணத்தால் அத்தகைய நடவடிக்கைகளில் ஆட்சி;யாளர்கள் வெற்றிபெறமுடியாது.

ஏனெனில். மீண்டும் நினைவுத்தூபி அமைக்கப்படுவதென்ற வாக்குறுதி ஒரு ஏமாற்றாக அமையு மென்றால் மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் களத்தில் இறங்குவார்கள் என்பதே யதார்த்தமாகும்.

அருவி இணையத்திற்காக - நா.யோகேந்திரநாதன்

13.01.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE