Friday 26th of April 2024 11:43:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!


வடகிழக்கு தமிழர் தாயத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் முன்னாள் ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான காணொளி கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர் இச்சந்திப்பிற்கென அனைத்து மட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டல் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் இன்னமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமது ஆய்வறிக்கை அமெரிக்க அரசிற்கும் ஜநா ஆணையாளரிற்கும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் இணை அனுசரணை நாடுகளிற்கும் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஆயினும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது போராட்டத்தை தமிழ் மக்கள் தொடரவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் தமது பணியை தளரவிடாது முன்னெடுக்கவும் கோரியிருந்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியின் வெற்றியானது சர்வதேசத்திற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்த அனுராதா மிட்டல் அதனை முன்னின்று செயற்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வேலன் சுவாமிகள் மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE