Thursday 25th of April 2024 11:11:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
அதி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைக்க வடக்கின் பிரதம செயலாளர் இடையூறு - தெல்லிப்பளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி!

"அதி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைக்க வடக்கின் பிரதம செயலாளர் இடையூறு" - தெல்லிப்பளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி!


தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் நிர்மாணிப்பதென திட்டமிடப்பட்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது வட மாகண பிரதம செயலாளர் அவர்களின் தலையீட்டினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு குறித்த நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளையினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக மக்களிற்கான சேவையை வழங்கி வருகிறது.வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தேவையும் அதிகரித்துள்ளது.ஆரம்பதில் ஐந்து வைத்திய அதிகாரிகளுடனும் இயங்கிய வைத்திய சாலை தற்போது அறுபது வைத்திய அதிகாரிகளுடன் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த வருட இறுதியில் உள்ளக பயிற்சி வைத்தியர்களும் சேவையில் இணைத்து கொள்ளப்படவிருப்பதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் நிர்மாணிப்பதென திட்டமிடப்பட்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது வட மாகண பிரதம செயலாளர் அவர்களின் தலையீட்டினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டுமே அதிதீவிர சிகிச்சைப்பிரிவு உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள கொரனா பெருந்தொற்றானது நாடு முழுவதும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உருவாக்கத்திற்கான தேவையையும் அதிகரித்துள்ளது.

மேலும் வைத்தியர்களுக்கென அமையப் பெறவுள்ள விடுதியின் குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றாளர்களின் சிகிச்சைப் பிரிவுக்கென வைத்தியர்களின் இரு விடுதிகளை வைத்தியர்கள் வழங்கியுள்ளனர். மூன்றாவது விடுதியும் COVID 19 தொற்றுக்குள்ளான சிறுபிள்ளைகளை சிகிச்சை வழங்குவற்காக மாற்றம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் வடமாகாண பிரதம செயலாளரின் இச் செயற்பாட்டானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமையப் பெறவேண்டிய அதி தீவிர சிகிச்சை நிலையத்தினை இவ்வருடத்தினுள் ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது, வைத்தியசாலையை நாடி வரும் மக்களின் நலனில் அக்கறை இல்லாத செயற்பாடாகும்.

இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்க தெல்லிப்பளை கிளை தனது அதிருப்தியை தெரிவித்து கொள்கின்றது.

அத்துடன் இவரது தன்னிச்சையான செயற்பாடுகள் இவரைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்கவிருக்கும் பிரதம செயலாளர் தமது பணிகளை மேற்கொள்ள, புதியவருக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE