Friday 26th of April 2024 02:56:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
என்னை நடுங்க வைத்த இருவர்; மனம் திறந்த முரளிதரன்!

என்னை நடுங்க வைத்த இருவர்; மனம் திறந்த முரளிதரன்!


உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக கொடிகட்டிப் பறந்த காலத்தில் தன்னை நடுங்க வைத்த இரு துடுப்பாட்ட வீரர்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்ததையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும்(133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார்.

இவ்விரு வடிவிலான கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய உலக சாதனையாளராக தற்போது வரை முரளிதரன் திகழ்ந்து வருகிறார்.

தன்னை மிரள வைத்த துடுப்பாட்ட வீரர்களின் விவரத்தை இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது காலக்கட்டத்தில் பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), வீரேந்திர ஷேவாக் (இந்தியா) ஆகியோருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது.

எனக்கு எதிராக நிறைய அபாயகரமான பேட்ஸ்மேன்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் கூட நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை கணிக்க முடியாமல் தடுமாறுவார். அவர் ஒரே ஒரு முறை மட்டும் எங்களுக்கு எதிராக 3-வது வரிசையில் இறங்கி 150 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மற்ற எல்லோரையும் காட்டிலும் ஷேவாக்கும், லாராவும் தான் எனக்கு அதிகமாக குடைச்சல் கொடுத்தவர்கள் ஆவர். இருவரும் நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை புரிந்து செயல்படுவார்கள்.

ஷேவாக்குக்கு பந்து வீசும்போது நான் பயந்து இருக்கிறேன். ஏனெனில் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு ஆட்டக்காரர் ஷேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 மணி நேரம் களத்தில் நின்றாலும் கூட 150 ரன்கள் திரட்டி விடுவார். ஒரு நாள் முழுவதும் விளையாடினால் ஸ்கோர் போர்டில் அவரது பெயரில் 300 ரன்களை காட்டும். அன்றைய தினம் முதல் பந்தை சந்தித்தாலும் சரி, 98 அல்லது 99 ரன்னில் இருந்தாலும் சரி. தடுப்பாட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அவருக்கு இருக்காது. மற்றவர்கள் இதே சூழலில் இருந்தால் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து சதத்தை நிறைவு செய்ய நினைப்பார்கள்.

ஆனால் ஷேவாக் சதத்தை பற்றி கவலைப்படமாட்டார். அந்த நிலையிலும் பந்தை சிக்சருக்கு விரட்டவே முயற்சிப்பார். ஆக்ரோஷமாக விளையாடுவது அவருக்கு பிடிக்கும். கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா போன்று தனிநபராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமைசாலி. 2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் நான் அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அடித்து தள்ளினார். அந்த டெஸ்டில் அவர் 293 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.

இதே போல் எல்லா திசையிலும் பந்தை விரட்டக்கூடியவர் பிரையன் லாரா. அவ்வளவு எளிதில் அவரை அவுட் ஆக்க முடியாது. அவர் எப்போது தவறு செய்வார் என காத்திருக்க வேண்டியது இருக்கும். ஒரு முறை கொழும்பில் நடந்த டெஸ்டில் அவர் இரட்டை சதம் அடித்தார். பந்து வீச்சுக்கு ஏற்ப தன்னை வெகு எளிதாக மாற்றிக்கொண்டு அருமையாக ஆடினார்.

சச்சின் தெண்டுல்கர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு எதிராக பந்து வீசியபோது நான் பயந்தது கிடையாது. ஏனெனில் அவர் எனது பந்து வீச்சை பெரிய அளவில் அடித்து நொறுக்கியது இல்லை. தெண்டுல்கரின் விக்கெட்டை சாய்ப்பது மிகவும் கடினம். எனது பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் விளையாடுவார். பந்து எப்படி வருகிறது என்பதை நன்றாக கவனித்து சாதுர்யமாக செயல்படுவார். இருப்பினும் எனது ஆப்-ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தெண்டுல்கர் கொஞ்சம் பலவீனமாக ஆடுவதை பார்த்து இருக்கிறேன். இந்த வகை பந்து வீச்சில் அவரை பலமுறை அவுட் ஆக்கி இருக்கிறேன். எதுஎப்படி என்றாலும், ஷேவாக் அளவுக்கு அவர் என்னை காயப்படுத்தியதில்லை.

இவ்வாறு முரளிதரன் கூறினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE