Friday 26th of April 2024 02:19:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 74 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இன மோதல் - 74 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்!


அதிகாரப் பசி அடங்காத ஜே.ஆர்.ஜயவர்த்தன! - நா.யோகேந்திரநாதன்!

'பாம்பிடம் அகப்பட்ட தேரை தன் உடல் விழுங்கப்பட்டு மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில்வரும் ஈயைக் கௌவுவதற்கு வாயைப் பிளப்பதுபோல் மனிதனுக்கு ஆசையும் அவன் அழியுமட்டும் இருந்து கொண்டிருக்கும்'.

இது இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 'பார்வேட் ப்ளக்' கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் சுதந்திர போராட்ட எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது வெளியிட்ட கருத்தாகும்.

சூரியன் அஸ்தமிக்காத ராஜ்யம் என ஒவ்வொரு ஆங்கிலேயனும் பெருமைப்படுமளவுக்கு ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களில் பெரும்பாலான நாடுகளைக் கைப்பற்றித் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது பிரித்தானியா. ஆனால் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனி பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் உட்படப் பெரும் பகுதியைக் கைப்பற்றியதுடன் பிரிட்டனையும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் லண்டன் உட்படப் பிரித்தானிய நகரங்கள் மீது குண்டு பொழிய ஆரம்பித்தது. அதேவேளையில் ஜேர்மனியின் கூட்டு நாடான ஜப்பான், பிரிட்டன் வசமிருந்த மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியதுடன் இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளையும் பிரிட்டனிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் இவ்வாறு பலவிதமான நெருக்கடிகளுக்கும் பின்னடைவுகளுக்குள்ளும் சிக்கித் தவித்தபோதும் இந்திய மக்கள் தமது தாயகத்தை விடுவிக்கக் கோரிப் போராட்டங்களை மேற்கொண்டபோது அதை வழங்க மறுத்ததுடன் மக்களின் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வந்தது.

பிரிட்டன் தனது எல்லையிலேயே எதிரி நிற்கும் ஆபத்தான நிலையிலும்கூட அது தனது ஏகாதிபத்திய ஆசையைக் கைவிடத் தயாராயிருக்கவில்லை.

தமக்கு ஆபத்தான நிலையிலும்கூட பிறநாடுகளை அடிமை கொள்ளும் பிரிட்டனின் ஏகாதிபத்தியப் பேராசையைச் சுட்டிக்காட்டியே பெரியார் பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் மேற்கண்ட உதாரணத்தால் விளக்கியிருந்தார்.

அவர் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் பிரிட்டன் வசமிருந்த பர்மாவைக் கைப்பற்றி இந்தியாவின் மணிப்பூர் எல்லைக்குள் இறங்கியிருந்தது.

இவ்வாறே ஜே.ஆர்.ஜயவர்த்தன தன்னிடமிருந்த 5/6 நாடாளுமன்றப் பலத்தைப் பாவித்து அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து இரு வருடங்கள் முன்பாகவே அதாவது 1984ல் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை 1982ல் நடத்தினார். அந்த 1982 சூழல் அவருக்கு வெற்றியடைய வாய்ப்பாக அமைந்திருந்ததுடன் அவர் மேலும் பல தந்திரமான காய் நகர்த்தல்கள் மூலம் அவர் 52.3 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அவரது முதலாவது பதவிக் காலத்தில் எஞ்சிய 2 வருடங்கள், இரண்டாவது பதவிக் காலத்தின் 6 வருடங்கள் என அவர் அடுத்த 8 ஆண்டுகளுக்கான நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றுவிட்ட போதிலும் அவரின் பேராசை அடங்கவில்லை. தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு சர்வாதிகாரியாகவும் இனவெறியராகவும் நோக்கப்பட்டுத் தனது கௌரவத்தை இழந்து கொண்டிருந்த நிலையிலும்கூட அதைப் பொருட்படுத்தாமல் வலிந்து பெற்றக்கொண்ட அதிகாரத்தைத் தக்க வைக்கவும் அதை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் திட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். 52 வீத வாக்குகளையும் ஹெக்டர் கொப்பேகடுவ 39 வீத வாக்குகளையும் பெற்றிருந்த போதிலும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு எதிராக மொத்தமாக 48 வீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இப்படியான ஒரு நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுமானால் ஐ.தே.கட்சி 5/6 பெரும்பான்மையை மட்டுமல்ல 2/3 பெரும்பான்மையைக் கூடப் பெறுவது சாத்தியமில்லை என்பதை ஜே.ஆர்.ஜயவர்த்தன நன்குணர்ந்திருந்தார்.

அதுமட்டுமின்றி 1978ம் ஆண்டின் அரசியல் யாப்புக்கமைந்த விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 2/3 பெரும்பான்மையைப் பெறுவது மிகவும் கடினமானதாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 2/3 க்கு அதிக பெரும்பான்மையைப் பெறாவிட்டால் அடிக்கடி அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்து தான் விரும்பிய விதத்தில் ஆட்சியை நடத்த முடியாதாகையால் 1982ம் ஆண்டில் இடம்பெறவேண்டிய தேர்தலை நடத்தாமல் அதற்குப் பதிலாக வேறு ஒரு நடவடிக்கை எடுக்கமுடிவு செய்தார். அதாவது தற்போதிருந்த அரசாங்கத்தை இன்னுமொரு பதவிக்காலத்துக்கு நீடிப்பதா, இல்லையா என்பதை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணையைப் பெறுவதாகும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பதிலாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதென்ற தீர்மானம் அமைச்சரவையிலும் நாடாளுமன்ற குழுவிலும் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்ற பின்பு பிரதமர் ரணசிங்க பிரேமதாசவால் அது அரசியலமைப்பின் நான்காவது திருத்தமாக முன்வைக்கப்பட்டது.

இது உயர் நீதிமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடப்பட்டபோது 3 நீதிபதிகள் எதிர்த்தும் 4 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டும் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில் ஜே.ஆர்.தனது ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களை வாங்கிக் கொண்டார்.

கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் மட்டும் அங்கம் வகித்தார். ஆனால் அவர்களின் 'அத்த' பத்திரிகை மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஐ.தே.கட்சியின் கடந்த 4 வருட ஆட்சியில் உயர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம், வெளிநாட்டு இறக்குமதிகள் மூலம் உள்ளுர் உற்பத்திகளை முடக்கியமை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெதிராக அப்பத்திரிகை மேற்கொண்ட பிரசாரங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தி வந்தன. எனவே அப்பத்திரிகையைத் தொடர்ந்து வெளிவரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்த ஜே.ஆர். அதைத் தடை செய்ய முடிவெடுத்தார். நான்காவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முதல் நாள் நள்ளிரவில் 'அத்த' பத்திரிகை தடை செய்யப்பட்டது.

1982ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22ம் திகதி சர்வஜன வாக்கெடுப்புக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜே.ஆர். 'அத்த' பத்திரிகையைத் தடை செய்ததுடன் நின்றுவிடவில்லை. சர்வஜன வாக்கெடுப்பில் அரசாங்க தரப்பை தோற்கடிக்கக் கூடிய பலம் வாய்ந்த சக்திகள் அனைவரையும் தேர்தல் களத்திலிருந்து அகற்ற முடிவெடுத்தார்.

அந்த நோக்கத்துடன் அவரால் விரிக்கப்பட்ட சதி வலை தான் 'நக்சலைட் சதி' என்ற பிரசாரமாகும்.

இந்தியாவில் மேற்க வங்காளத்திலுள்ள புரட்சிவாதிகள் நக்சல்பாரி என்ற மலைப் பிரதேசத்தை அரச படைகளிடமிருந்து கைப்பற்றி ஒரு விடுதலைப் பிரதேசத்தை அமைத்திருந்தனர். ஆந்திர மாநிலத்திலும் தெலுங்கானாவிலுள்ள சிலிகுரி மாவட்டத்தில் புரட்சியாளர்களின் தீவிர தாக்குதல்கள் இடம்பெற்று வந்தன. ஆனால் இந்த நக்சலைட் புரட்சியாளர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே எவ்வித தொடர்பும் ஏற்பட வழியிருக்கவுமில்லை. அதுமட்டுமின்றி இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே நல்லுறவு நிலவி வந்தது.

திருமதி ஸ்ரீமாவோவின் மகள் சந்திரிகாவின் கணவரும் இலங்கையின் பெரும் ரசிகர் தொகையைக் கொண்டிருந்த சினிமா நடிகருமான விஜயகுமாரணதுங்க மக்கள் அபிமானம் பெற்ற அரசியல்வாதியாக வளர்ந்து வந்தார். இவர் தென்னிலங்கையின் கிராமங்கள் எங்கும் சென்று கட்சிக் கிளைகளை அமைத்தும், பெரும் தொகையான இளைஞர்களை அணி திரட்டியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி வந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டு வந்தார்.

அவரைத் தேர்தல் களத்திலிருந்து அகற்றாவிடில் சர்வஜன வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்த ஜே.ஆர்.அவரை முற்றாகவே முடக்க முடிவெடுத்தார்.

அதன் ஆரம்பமாக அப்போதைய உயர்கல்வி அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உரை அமைந்திருந்தது.

அதன்போது அவர் ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவ வெற்றி பெற்றிருந்தால் நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான இராணுவத் தளபதிகளின் உதவியுடன் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அமைச்சரவையினர் அனைவரும் கைது செய்யப்படவிருந்ததாகவும் ஒரு பெரும் நக்சலைட் சதி இடம்பெறவிருந்தாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றன.

இது தொடர்பாக ஜே.ஆர். 03.11.1982 அன்று வெளியிட்ட அறிக்கையில் தான் இச்சதி பற்றி புலனாய்வுத் தகவல்கள் மூலம் ஒக்டோபர் 31ம் திகதியே அறிந்திருந்ததாகவும் அதன் மூலம் தன்னையும் முக்கிய அமைச்சர்களையும் இராணுவத் தளபதிகளையும் கொலை செய்யவும் திருமதி ஸ்ரீமாவோவைக் கைது செய்யவும் நாட்டின் அதிகாரத்தை விஜயகுமாரணதுங்க தலைமையிலான தீவிரவாதிகள் கைப்பற்றவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து விஜயகுமாரணதுங்க உட்படப் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் சரத்முத்தட்டுகமவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களை அடைத்து வைப்பது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் விஜயகுமாரணதுங்க தவிர்ந்த ஏனையோரை பிணையில் விடுவித்து தேர்தல் முடியும் வரை விஜயகுமாரணதுங்க விடுக்கப்படவில்லை.

ஆனால் நக்சலைட் சதி மூலம் ஜனநாயகம் இல்லாமற் செய்யப்படும் அபாயத்தைத் தவிர்க்க சர்வஜன வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தின் ஆயுள் நீடிக்க வாக்களிக்கும்படி ஜே.ஆர். தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார்.

அரச ஊடகங்கள், லேக்ஹவுஸ், தவஸ நிறுவனங்கள் என்பன நக்சலைட் ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி தீவிர பி;ரசாரத்தை மேற்கொண்டன.

இந்நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத்தின் ஆயுளை மேலும் 5 வருடங்கள் நீடிக்கும் 4ஆவது திருத்தச் சட்டம் பிரதமர் பிரேமதாசவால் முன் வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் சரத்முத்தட்டுகமவும் எதிர்த்து உரையாற்றினர். திரு.அமிர்தலிங்கம் மேற்படி திருத்தத்தை எதிர்த்து உரையாற்றியபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயமும் இவர்கள் எதிர்த்து உரையாற்றிவிட்டு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் உரிமைகளை ஐ.தே.கட்சி நிராகரித்த சந்தர்ப்பங்களில்கூட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜனநாயகத்தைக் காப்பாற்றவே ஐ.தே.கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டனர். ஆனால் 4ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றாகவே ஜனநாயகம் மீறப்பட்டபோதும் கூட அதை எதிர்த்து வாக்களிக்காது வெளியேறி விட்டனர்.

இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றவே எதிர்த்து உரையாற்றிவிட்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவைத் திருப்திப்படுத்தவே எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறினர் எனவே கருதவேண்டியுள்ளது. அதேவேளையில் தேர்தல் சமயத்தில்கூட நாடாளுமன்றத்தின் ஆயுள் நீடிப்பதற்கு எதிராக வாக்களிக்கும்படி தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளவில்லையென்பது முக்கிய விடயமாகும்.

அதேவேளையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன அமிர்தலிங்கம் தன்னிடம் நாடாளுமன்ற ஆயுளை நீடிப்பதற்கு எதிராகப் பிரசாரம் செய்யப் போவதில்லையென வாக்குறுதி வழங்கியிருந்ததாகத் தெரிவித்தார்.

அவ்வகையில் 22.12.1982ல் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற ஆயுள் நீடிப்பை ஆதரிப்பதாயின் 'ஆம்' என 'விளக்கு' சின்னத்துக்கும் எதிர்ப்பதாயின் 'இல்லை' என 'பானை' சின்னத்துக்கும் வாக்களிக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சகல விதமான தேர்தல் மோசடிகள், எதிர்க்கட்சியினர் மீதான வன்முறை ஒடுக்குமுறைகள் என்பவற்றுடன் இடம்பெற்று முடிந்த தேர்தலில் விளக்குக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பெற்று நாடாளுமன்ற ஆயுள் நீடிப்பு அங்கீகரிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில் தொண்டமான் தீவிர ஆதரவை வழங்கி நுவரெலியா மாவட்டத்தில் விளக்குக்கு ஆதரவாக 62 வீத வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தார்.

வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் பானைக்கு பெரும்பான்மையாக வாக்களித்து நாடாளுமன்ற நீடிப்புக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அதிகாரப் பசிக்கு ஆதரவை வழங்கி தாங்கள் போர்த்தியிருந்த போலி ஜனநாயகப் போர்வையை அகற்றிவிட்டுத் தங்களை அம்பலப்படுத்திக் காட்டினர்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE