Monday 29th of November 2021 05:04:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
வெள்ளப் பெருக்கும் தொடரும் பேரழிவுகளும்! - நா.யோகேந்திரநாதன்!

வெள்ளப் பெருக்கும் தொடரும் பேரழிவுகளும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கையில் சில நாட்கள் தொடர்ந்த அடைமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்தமை, குளங்கள் நிரம்பி வழிந்தமை என்பனவற்றையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மண் சரிவுகள், கட்டிடங்கள், இடிந்து விழுந்தமை, மரங்கள் முறிந்து விழுந்தமை என்பவற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன. இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமற் போனதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

பெரும் ஆறுகள் இல்லாத குளம் நிரம்பி வழியாத வடபகுதியிலும் உயிரிழப்புகளும், இடப் பெயர்வுகளும் இடம்பெற்றுள்ளன என்பதையும் கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது.

முன்பெல்லாம் இலங்கையில் மண் சரிவு என்பது பல வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் அனர்த்தமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்சமயம் மழை வந்தாலே மண் சரிவு என்றளவுக்கு மண் சரிவும் உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்படும் ஆபத்துகளாகி விட்டன. இப்படியான அனர்த்தங்கள் மூலம் மலையக மக்களே கூடுதலாகப் பாதிக்கப்படும் நிலை நிலவி வருகிறது. வருடாவருடம் இப்படியான பேரழிவுகள் இடம்பெற்றபோதும், எவ்வாறு அடிக்கடி மலையக மக்கள் மீது இடம்பெறும் குளவிக் கெட்டுக்கும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் தீர்வு காணப்படவில்லையோ, அவ்வாறே இம் மண் சரிவுகளுக்கு எதிரான மாற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவுமில்லை, எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுமில்லை. மாறாக மேலும் அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளே அபிவிருத்தியின் பெயராலும், ஆக்கிரமிப்பின் பேராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவுப் பொதிகள், உலர் உணவுகள், நிவாரணங்கள் வழங்குவதுடன் அரச தரப்பு தன் கடமைகளை முடித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு வருடமும் அனர்த்தங்கள் ஏற்படும்போது அவை அடுத்த வருடமும் இடம்பெறும் என்பது சகலருமே அறிந்த விடயமாகும். அப்படியானால் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த வருடமோ அல்லது அடுத்தடுத்த வருடங்களிலோ தடுத்து நிறுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது.

சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வரும் தற்போதைய அரசாங்கம் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி என்பதற்கொப்பாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றுவது, நிர்வாகங்களில் இராணுவ மேலாண்மையை அதிகரித்தல் போன்ற விடயங்களில் பின்பற்றி வருகிறது. அதேபோன்று வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவது, தன்னிறைவுப் பொருளாதாரம் என்பதில் ஏன் பின்பற்றவில்லை என்பது கேள்வியாக விழுகிறது. அரச சர்வாதிகாரப் பாணியிலான விடயங்களைப் பின்பற்றும் இலங்கை தேசிய நலன்கள் சார்ந்த விடயங்களில் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா ஒரு காலத்தில் உலகிலேயே மிகமிக வறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியதுடன் பஞ்சம், வறுமை, வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களால் வருடாவருடம் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தும் வந்தனர். யாங்ஷி நதி, மஞ்சள் நதி என்பவற்றால் ஏற்படும் வெள்ளப் பெருக்குகளால் வருடாவருடம் பல இலட்சம் மக்கள் உயிரிழந்து வந்தனர்.

இந்த நிலையில் யங்ஷி நதியைக் கட்டுப்படுத்த 5 இலட்சம் மக்கள் சம்பளமின்றி உணவுக்கும், உடைக்கும் மட்டும் ஊதியம் பெற்று களத்தில் இறங்கினர். யாங்ஷி நதியில் வெள்ளப் பெருக்குக்கு அணைகட்டிக் கட்டுப்படுத்தப்பட்டதுடன் பல இலட்சம் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக்கப்பட்டன. சீனாவின் பெரும் பகுதி மின்சார மயப்படுத்தப்பட்டது.

இன்று சீனா வல்லரசுகளுடன் போட்டியிடுமளவுக்கு பொருளாதார, இராணுவ வலிமையில் உயர்ந்து நிற்கிறது.

அவ்வாறானால் இலங்கையில் வெள்ளப் பெருக்குகளைக் கட்டுப்படுத்த மக்கள் களமிறங்குவார்களா?

சீனாவில் சாதாரண விவசாயிகள், அரச அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், இராணுவத்தினர் என அனைவருமே தேசப்பற்றுடன் அர்ப்பணிப்புடன் பணியில் இறங்கினர். ஊழல், மோசடி, விரயம், துஷ்பிரயோகம் என்பன தவிர்க்கப்பட்டு மக்களின் அர்ப்பணிப்பு நாட்டுக்கே பயன்பட்டது.

ஆனால் இங்கு ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன காரணமாகப் பல அரச உயர் அதிகாரிகள் பதவி விலகுமளவுக்கு அதிகரித்துள்ளன. உணவுக்கும் உடைக்கும் வேலை செய்வது கூட தற்சமயம் ஏற்பட்ட விலைவாசி உயர்வினால் சாத்தியமற்றுப் போய்விட்டது. மக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும் அவற்றின் பலன்களைப் பெரும் வர்த்தக முதலைகளும் இறக்குமதியாளர்களும் சுருட்டிக் கொள்ளும் நிலையே நிலவுகிறது.

எனவே எமது நாட்டில் பெரும் மக்கள் இயக்கம் மூலம் இயற்கை அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத விடயமாகும்.

அதேவேளையில் அபிவிருத்தியின் பேராலும் வேறு சில காரணங்களுக்காகவும் மேற்கொண்ட பல திட்டங்களும் இன்றைய வெள்ளப் பெருக்கு, மண் சரிவு என்பவற்றுக்குக் காரணங்கள் என்பதையும் மறுத்துவிடமுடியாது.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின்போது தேசிய மயமாக்கப்பட்ட மலையகத் தோட்டங்கள், ஜே.ஆர்.ஆட்சியில் மீண்டும் தனியாருக்கு வழங்கப்பட்டன. அந்த தனியார் தோட்டங்களிலுள்ள பெரு மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டனர். இதனால் ஏற்படும் மண்ணரிப்பு மண்ணை இழக்கச் செய்து மண்ணரிப்புக்கு வழி கோலுகிறது. வெள்ளம் வழிந்தோடும் பாறைகளுக்குக் குறுக்காக நெடுஞ்சாலைகளும் கட்டிடங்களும் அமைக்கப்படுகின்றன. அதன் காரணமாக வெள்ள நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படவும் மண் சரிவு ஏற்படவும் வழியமைக்கப்படுகின்றன.

வடக்கில்கூட ஒவ்வொரு கோவிலில் ஒரு கேணியும் ஒரு குளமும் அமைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி வயல் வெளிகளின் நடுவிலும் ஊரில் பல முக்கிய இடங்களிலும் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இவை வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதுடன் நிலக் கீழ் நீரையும் பாதுகாப்பவையாக இருந்தன. ஆனால் தற்சமயம் குளங்கள் மூடப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்ட நிலையில் வெள்ளப் பெருக்கு தவிர்க்கப்பட முடியாததாகிறது.

எனவே சகல மட்டங்களிலும் சகல கட்டமைப்புகளிலும் உரிய மாற்றங்களைக் கொண்டு வராமல் வெள்ளப் பெருக்குகளையோ, மண் சரிவுகளையோ தடுத்து நிறுத்திவிட முடியாது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

16.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இலங்கை, வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE