Friday 26th of April 2024 11:37:10 AM GMT

LANGUAGE - TAMIL
23 ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பலியெடுத்த கொடூரம்
23 ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பலியெடுத்த கொடூரம் - 'இந்திய வல்லரசுப் பெருமை'!

23 ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பலியெடுத்த கொடூரம் - 'இந்திய வல்லரசுப் பெருமை'!


ஒரே நாடு.. ஒரே ஆட்சி.. ஒரே அறிவிப்பு.. அத்துணை துயரங்களையும் அள்ளிக்கொண்டு வந்து தெருவில் போட்டது. 'தம் ஊரடங்கு’ எனும் பெயரில் முன்னோட்டம் விடப்பட்டு, கடந்த மார்ச் 24 அன்று இரவு 8 மணிக்கு விடப்பட்ட பொது அறிவித்தலின் மூலம், இந்தியா முழுவதும் மீப்பெரு இடர்மிகு காலம் ஒன்று அன்றைய இரவைப் போலவே ’இந்நாட்டு மன்னர்’கள் மீது இருளாக சுமத்தப்பட்டது.

இந்தியா வல்லரசாக 2020ஆம் ஆண்டை இலக்குவைத்து கனவுகாணச் சொல்லிக்கொண்டே இருந்தார், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். இலக்கு ஆண்டிலும் முன்னும்பின்னும் தற்செயலாக, அவரை அந்தப் பதவிக்கு முன்னிறுத்திக் கொண்டுவந்த கட்சியின் ஆட்சியே இங்கு அமைந்துவிட்டது, இன்னும் பொருத்தம். ஆனால் என்ன நடக்கிறது.. நடந்திருக்கிறது?

ஒற்றை அறிவிப்பால் இலட்சக்கணக்கான இந்தியர்கள் நிர்கதியாக தெருவில் அல்லஅல்ல வீதிகளில் நாயைவிடக் கேவலமாக அலையவும் மனம் உளையவும் விடப்பட்டார்கள். தலைநகர் டெல்லியிலிருந்தும் தொழில் தலைநகரமான மராட்டியத்தின் மும்பையிலிருந்தும் குசராத்தின் அகமாதாபாத்திலிருந்தும் சென்னை, கேரளத்தின் கொச்சி, எர்ணாகுளம் போன்ற நகரங்களிலிருந்தும் ’விருந்தினர் தொழிலாளர்’கள், சொந்த ஊரைநோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். ஆம், ஊர், உறவு, சுற்றத்தையெல்லாம் பிரிந்து, பிழைப்புக்காக அந்நியமானதொரு நிலத்தில் அந்த்ந்தப் பகுதிகளின் அத்துணை கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் அரும்பாடு படும் இவர்களுக்கு, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விசயன் சூட்டிய பெயர் ‘விருந்தினர் தொழிலாளர்’. ஆனால் மானுடப் பரப்பில் எங்காவது விருந்தினரை விரட்டியடிப்போமா..? மானுட முரண்பாடுகளின் மற்றுமொரு அவலமுரணாக, இலட்சக்கணக்கான விருந்தினர் தொழிலாளர்கள் எந்த மண்ணுக்காக, மக்களுக்காக உழைத்துக்கொட்டினார்களோ அங்கிருந்து சில, பல நூறு மைல் தொலைவில் உள்ள தத்தம் ஊரை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள்.

பலவற்றையும் போல புலப்பெயர்வும் இப்போது உலகமயம் ஆகிவிட்டது. 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா.சார் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு-ஐ.எல்.ஓ.-ன் அறிக்கையின்படி, உலகளாவிய புலம்பெயர்வோரில் 41% பேர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களில் 1.7 கோடி பேர் இந்தியர்கள். இந்தியாவில் பிறந்து அயல்நாடுகளில் வாழ்ந்துவருபவர்களின் எண்ணிக்கை 1.56 கோடி பேர். அதாவது, உலக அளவில் புலம்பெயரும் இருபது பேரில் ஒருவர், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்கிறது பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் அறிக்கை.

இந்தியாவில் தொழிலாளர் புலப்பெயர்வின் மாதிரிகளாக சிலவற்றைப் பார்க்கமுடிகிறது. வாழ்க்கைவசதியில் பின்தங்கியுள்ள உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்டு, சத்திசுக்கர், ஒதிசா, மேற்குவங்காளம், இராசசுத்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தென்பகுதியில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுமே இப்போதைய பேசுபொருளாக ஆகியிருக்கின்றனர். மற்றவகையினரின் தன்மைகளும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் வெவ்வேறானவை.

கொரோனா பேரிடர் காரணமாக சொந்த ஊருக்கே மறுபுலப்பெயர்வு கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள், புதுடெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை போன்ற நகரங்களில் வசித்தவர்கள். மும்பை என்றால் நாக்பூர், சென்னை என்றால் அதையொட்டிய மற்றும் சற்று தொலைவான தொழில்நகரங்களும் அடக்கம். 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கின்படி புதுடெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை, பெங்களூர், கோல்கத்தா ஆகிய நகரங்களில் மொத்தம் 6 கோடி புலம்பெயர்த் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நினைவில்கொள்ள வேண்டியது, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீடு, இது!

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 37 விழுக்காட்டினர், உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள்; தோராயமாக, 45.36 கோடி பேர் என்கிறது 2011 மக்கள்தொகை புள்ளிவிவரம். இந்திய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 47.1 கோடி பேர் என்பது அண்மைய புள்ளிவிவரம் ஒன்றின் கணக்கீடு. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கின்படி, நாட்டிலேயே அதிக அளவாக மராட்டிய மாநிலத்தில்தான் 2.3 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றனர். மக்கள் அடர்த்தி மிகுதியான மும்பையில்தான், இந்த மறு புலப்பெயர்வு தொடங்கியது எனலாம். மும்பை பெருநகரம், பூனா, நாக்பூர், பிம்பிரிசிஞ்ச்வாத் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 20 அன்றே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. மார்ச் 31வரை நீடிக்கும் என்றது மகாராசுட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் அறிவிப்பு. மேற்கு இந்தியாவின் முனையமான அங்கு பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்களின் சொந்த ஊர்கள், மத்தியப்பிரதேசம், சார்க்கண்டு, பீகார், ஒதிசா, கிழக்கிந்தியாவின் முனையான மேற்குவங்கம்வரை என நீண்டு பரவி உள்ளன.

யாருக்கும் யோசிக்க நேரம் இல்லை. மராட்டிய மாநிலத்தை மற்ற வட இந்தியப் பகுதிகளுடன் இணைக்கும் தொடர்வண்டிகள் அனைத்திலும் வழிந்தது, மக்கள் கூட்டம். மும்பையின் தொடர்வண்டி முனையங்களான லோகமான்ய திலக்கும் சத்திரபதி சிவாச்சி இரண்டிலுமே, ஒரே மனிதத் தலைகளாக மிரட்சியான சித்திரம்! இருபது ஆண்டுகளில் மும்பை முனையங்களில் இப்படியொரு கூட்டம் திரண்டதில்லை என்றன ஊடகங்கள். எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்துவிட வேண்டும் எனும் இலக்கில், முடியும் என நம்பிக்கையில் அங்கு வந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்; அதிகமான தொடர்வண்டிகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்புகள்..! வேலை இடத்துக்குத் திரும்புவதற்கான எந்த பிடிமானமும் இல்லை. கிழக்கிந்தியாவின் கடைக்கோடியில் இருந்தபோதும் சொந்த இடத்துக்கான பயணத்தை கால்நடையாகவே தொடங்கியது, பெரும் மக்கள் கூட்டம்.

நாட்டின் தலைநகர் டெல்லியிலும் இதைப் போலவே என்பதைவிட, இன்னும் கொடுமையாக என்பதே பொருத்தம். மராட்டியத்திலாவது மும்பையிலிருந்து சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. தேசியத் தலைநகர வட்டகை- என்.சி.ஆர். எனப்படும் டெல்லி பகுதியானது முற்றுமுழுதாக சட்டமன்றம்- மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; சட்டம் ஒழுங்கை இந்திய மைய அரசே மேற்கொள்கிறது. இப்படியான அரசுக் கட்டமைப்புச் சூழலில், தொடக்கநிலை கரோனா தொற்று கண்டறியப்பட்ட டெல்லியில், இந்திய நாடடங்குக்கு முன்னரே அந்த ’ஒன்றியப் பகுதி’ அளவுக்கு நான்கு பேருக்கு மேல் பொது இடத்தில் கூடுவதைத் தடுக்கும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 22 அதிகாலை 0.00 மணி முதல் ’தம் ஊரடங்கு’ தொடங்கியதால், முன்னைய நாள் மாலையில் டெல்லியிலிருந்து புறப்படவேண்டிய தொடரிகள் நிறுத்தப்பட்டன. 22 அன்று நாடு முழுக்க அரசுரீதியாக போக்குவரத்து முடக்கப்பட்டது. மார்ச் 31வரை டெல்லியில் 144 ஆணை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லிக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள், அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பீகார், சார்க்கண்டு, சத்திசுக்கர், மேற்குவங்கம் மக்களும் இருக்கிறார்கள். போலவே, குசராத்தின் அகமதாபாத்தில் இராசசுத்தான், அரியானா மக்கள் புலம்பெயர்ந்து பணியாற்றிவந்தனர். ஒரே நாளில் சட்டென இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும் பெரும் பாறாங்கல் தாக்கியதைப்போல் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனாலும் உடனே சுதாரித்துக்கொண்டு ஒரே சிந்தனையாக, அவரவர் ஊருக்கு மூட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். எத்தனையோ ஆண்டுகள், தாங்கள் உருவாக்கிய வீடுகள், அலுவலகங்கள், உணவக விடுதிகள், பெரும் ஆலைகள் எல்லாம் அப்படியே இருக்கையில், அவர்களால் அங்கு தொடர்ந்து தங்கமுடியாமல் போனது ஏன்?

ஊரை நோக்கிய மறுபுலப்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் விவரங்கள், இதற்கான ஒரு பதிலாக அமையக்கூடும்.

புதுடெல்லியின் துக்ளகாபாத்தில் உள்ள ஓர் உணவகத்தில் பணியாற்றியவர், இரண்வீர் சிங், 39. மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மத்தியப்பிரதேச மாநிலம் மொரனா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாத்பா என்கிற அவரின் சொந்த ஊரை நோக்கிய பாதையில் 200 கிமீ தொலைவைக் கடந்திருந்தபோது, தாச்மகால் அமைந்துள்ள ஆக்ராவில் மார்ச் 28 அன்று அவர் இறந்துபோனார். மாரடைப்பால் இறந்துபோனதாக அவரின் சடலக்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு நடந்ததால் நீரிழப்பால் இதயம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே நாளில், மும்பையிலிருந்து இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான பசுவாடாவுக்கு திரும்பிச்செல்கையில், நான்கு பேர் மீது சுமையூர்தி ஒன்று மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மும்பை - குசராத் நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இந்தக் கோர விபத்தில், உடன்சென்ற மூவர் மட்டும் உயிர்தப்பினர். இவர்கள் அனைவருமே பணியாற்றிய தேநீர்க் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுவிட்டதை அடுத்து இவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிதின்குமார், 26, அரியானாவின் சோனிப்பேட்டிலிருந்து ஊரை நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தபோது, மொரதாபாத்தில் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். உடன்சென்ற அவரின் தம்பி பங்கச்சின் கண்முன்னாலேயே இந்தத் துயரம் நடந்தேறியது, வேதனையானது.

அதற்கு முந்தைய நாளான மார்ச் 27-ல், கர்நாடக மாநிலம் இரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊர்திரும்பும் வழியில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் சாலை விபத்து ஆகி, எட்டு பேர் இறந்துபோனார்கள். அவர்களில் ஒன்றரை வயதுக் குழந்தை, ஒரு சிறுவன், 9 வயது சிறுமி ஆகியோரும் அடக்கம்.

மார்ச் 29 அன்று அதிகாலையில் அரியானாவின் பிலாசுப்பூர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் குழந்தைகள். கொடுமை என்னவென்றால், அவர்களின் ஊர், பெயர் விவரம்கூட அவர்களின் உடை, உடைமைகளிலிருந்து காவல்துறையால் கண்டறிய முடியவில்லை.

ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரு வகை மக்கள்பிரிவினராகிவிட்ட இவர்கள், குடியேறிய நகரங்களில் என்னதான் செய்கிறார்கள்? முதன்மையாக கட்டிட வேலை, தேநீர்க் கடைகள், உணவகங்கள், துப்புரவுப் பணி, வீட்டுவேலைகள், சமையல் பணி, தொழிற்சாலைகளில் தொழில்முறை அல்லாத உதிரிப் பணிகள் போன்றவை. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரட்டை இலக்கத்தில் ஊதியம் கிடைப்பது, பெரிது. ஒரே குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைசெய்தால்தான் முழுக் குடும்பத்துக்கும் சோறு. கைக்கு கிடைப்பது வயிற்றுக்கே சரியாகப் போய்விடும். இதுதான் அவர்களின் பொருளாதாரம். இதற்குள்தான் இலட்சக்கணக்கான இந்த மனிதர்களின் சுக, துக்கம் அனைத்துமே நடந்தாகவேண்டும்; அப்படித்தான் நடக்கிறது. அன்றாட ஊதியம் இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கையில் அடுத்த நாள் இல்லை.

நாடடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டில்தான் முதல் உயிரிழப்பு நேர்ந்தது. கேரளத்துக்குப் புலம்பெயர்ந்திருந்த ஒரு தமிழர் குடும்பம், பேருந்துப் போக்குவரத்து முடக்கப்பட்டதால், மலைப்பகுதியின் வழியாக நடந்துவந்தபோது, காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில், ஒரு வயதுக் குழந்தை உள்பட நான்கு பேர் இறந்துபோயினர்.

மகாராசுட்டிரத்தின் வார்தா நகரிலிருந்து தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இலோகேசு,22, என்பவர், கிடைத்த வண்டிகளைப் பிடித்தும் நடந்துவந்தும் ஊர்திரும்ப முயன்றபோது, ஐதராபாத்தில் மயங்கிவிழுந்து இறந்துபோனார். வார்தாவில் தொழில்பயிற்சியுடன் இணைந்த வேளாண் நுட்பப் பணியில் இருந்த இவருடன், மொத்தம் 30 பேர் அங்கிருந்து ஒரு குழுவாகப் புறப்பட்டுள்ளனர். இடையில் தங்களின் தோழனை இழப்போம் என அவர்களில் யார்தான் நினைத்திருப்பார்கள்.

போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போக, கால்நடையாக ஊர் திரும்பிவிடலாமென எண்ணிப் புறப்பட்ட புலப்பெயர்வுத் தொழிலாளர் குடும்பத்தினரில், ஒரு வாரத்தில் 23+ மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.

ஊரடங்கோடு நாடடங்கும் சேர்ந்துகொள்ள, ஒற்றை அறிவிப்பால் இவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் நாளையிலிருந்து இல்லை என்று ஆகிப்போனது, ஒன்று. சோற்றுக்கு என்ன செய்ய.. ஒரு பதிலும் கிடைக்கவில்லை. சமாளித்து இருக்கலாம் என்றால் வீட்டு வாடகையை யார் கட்டுவது? - பிரச்னை பெரிதாகி அழுத்தம் வருவதற்கு முன்னர், அரசாங்கம் வாய் திறக்கவில்லை. (நான்காவது நாளன்று திருவாய் மலர்கிறார், டெல்லி முதலமைச்சர் அர்விந்து கெச்சிரிவால்.) இதற்கிடையே கரோனா தொற்று தாக்காமல் இருக்க வழி உண்டா? ஊரில் குடும்பத்தில் உயிரனைய குடும்ப உறவுகளுக்கு கரோனா தாக்கம் வந்தால் யார் கவனிப்பது, இங்கேயே நமக்கு வந்தால் நம்மையும் குடும்பத்தினர் அவ்வளவு தொலைவிலிருந்து வரமுடியுமா? - கேள்விமேல் கேள்விகள் மனதுக்குள் முகிழ்த்து எழ எழ, மனது அறிவுக்கு உறுத்தியது, ’சொந்த மண்ணை நோக்கிப் புறப்படு’!

அடைக்கலம் தந்த அந்நிய மண்ணிலும் நடந்திராத அவலம், சொந்த ஊருக்குத் திரும்பிய உத்தரப்பிரதேச உறவுகளுக்கு நேர்ந்தது. கிருமிநாசினியைக் கொண்டு அவர்களைக் கிருமிநீக்கம் செய்து, தங்களின் மானுடத்தன்மையை உலகத்துக்குக் காட்டிக்கொண்டது, அந்த மாநில அரசு இயந்திரம்.

உலகமே இந்தக் கொடுமைகளைக் கண்டு இடித்ததை அடுத்து, மறுபுலப்பெயர்வில் அந்தரத்தில் தொங்கும்நிலையில் ஆங்காங்கே திகைத்து நின்றவர்களை, அந்தந்த மாநில அரசுகள் கவனித்துக்கொள்ள வேண்டும் என டெல்லியின் ஆட்சிபீடம் ஆணையிட்டது. அந்தந்த அரசுகள் கவனித்திருந்தால், வாழ்நிலைக்கு உறுதிப்பாடு அளித்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு கால்நடைப் பயணமாகச் செல்லவேண்டும் என விரும்பியிருப்பார்களா என்ன?

நாடு முழுவதும் நிகழும் தொழிலுக்கான புலப்பெயர்வை ஒரு சித்திரமாக்கினால், குறுக்கும் நெடுக்குமான கோடுகளின் பின்னலைக் கொண்ட ஒரு சிக்கல் படம் கிடைக்கும். நடப்பிலும் அப்படியே இது ஒரு பெரும் மானுடத் துயராக உள்ளுறையாக நீடித்து நிலைத்திருப்பதற்கான முகாந்திரங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன.

திக்கற்றுப் போனதோ இத்திருநாடு; வக்கற்றுப் போனதோ வல்லரசு என்று மனம் அரற்றுகிறது!

-இர. இரா. தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE