Friday 26th of April 2024 03:07:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
சர்வதேச வாக்குறுதிகளிலிருந்து தப்பவே முடியாது இலங்கை அரசு: சம்பந்தனுடனான சந்திப்பில் சுவிஸ் தூதுவர்!

சர்வதேச வாக்குறுதிகளிலிருந்து தப்பவே முடியாது இலங்கை அரசு: சம்பந்தனுடனான சந்திப்பில் சுவிஸ் தூதுவர்!


"இலங்கை அரசு, சர்வதேசத்துக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதனை நிறைவேற்றவே வேண்டும். அந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு விலகவே முடியாது."

- இவ்வாறு இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். இதன்போதே சுவிஸ் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும், அடிப்படை மனித உரிமைகள் குறித்தும் சம்பந்தனுடன் சுவிஸ் தூதுவர் கலந்துரையாடினார்.

விசேடமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாகவும், தேர்தலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானங்கள் மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பிலும், புதிய அரசமைப்பு குறித்தும் இருவரும் பேசினார்கள்.

இந்தச் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவர், அவரது அரசியல் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினேன். குறிப்பாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகவும், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நிலைமை எவ்வாறாக அமையும் என்பது பற்றியும் சுவிஸ் தூதுவர் தனது கணிப்பை என்னிடம் கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் பல கடமைகளை நிறைவேற்றவேண்டிவரும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டிய முடிவுகள், புதிய அரசமைப்பு உட்பட பல விடயங்கள் புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னர் முன்னெடுக்கப்படும் என நான் அவரிடம் தெரிவித்தேன்.

இந்த விடயங்கள் இலகுவாக இருக்காது. மாறாக கடினமாக இருக்கும். இருந்தபோதும் ஓர் அரசு, ஒரு நாடு சர்வதேசத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி அல்லது சர்வதேச சட்டத்தை மீறி, அவர்களால் சர்வதேசத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி தொடர்ந்தும் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. இலங்கை அரசு நீண்டகாலமாகத் தனது ஒப்பந்தங்களை, வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டு வந்திருக்கின்றது. அதற்கு முடிவு வரவேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், நாங்கள் எவரையும் பகைக்க விரும்பவில்லை. அதேநேரம் எமது மக்களது அடிப்படை உரிமைகளில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. எமது மக்கள் சார்ப்பாக மேற்கொள்ளவேண்டிய கடமைகளை மேற்கொள்வோம். அதேபோன்று எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்கவேண்டிய நேரத்தில் எடுப்போம் என்று சுவிஸ் தூதுவரிடம் நான் தெரிவித்தேன்.

இதற்குப் பதிலளித்த அவர், 'இலங்கை அரசு, சர்வதேசத்துக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதனை நிறைவேற்றவே வேண்டும். அந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு விலகவே முடியாது' என்று கூறினார். சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. நான் சொல்ல வேண்டிய விடயங்களை அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE