Friday 26th of April 2024 01:48:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
தொல்பொருள் செயலணிக்கு பொருத்தமான நிபுணர்கள்!- நா.யோகேந்திரநாதன்!

தொல்பொருள் செயலணிக்கு பொருத்தமான நிபுணர்கள்!- நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கென தனியான ஒரு பிரிவுண்டு. அதற்கென துறைத் தலைவர் உட்பட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என அத்துறையில் அனுபவமும், பாண்டித்தியமும் பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு அங்கு பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி வருடா வருடம் தொல்லியல் துறையில் பல பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறி அரச நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை விட ஓய்வு நிலை தொல்லியல் சார் ஆய்வாளர்களாக பத்மநாதன், ரகுபதி, இந்திரபாலா போன்ற நிபுணர்கள் பல பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு எமது வரலாற்று தொன்மங்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

அந்த நிலையில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட கிழக்கிலங்கை தொல்லியல் பொருட்களை கண்டறிவதும் பாதுகாப்பதும் தொடர்பான செயலணிக்கு நியமிப்பதற்கு பொருத்தமான தமிழ் முஸ்லீம் நிபுணர்கள் இல்லையென்றும் அதனால் அச்செயலணியில் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் அதற்கு வெளியே ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிபுணர்களும் சர்வதேச அங்கீகாரம் பெறுமளவுக்கு பெறுபேறுகளை ஈட்டி வரும் நிலையில் இங்கு நிபுணர்களே இல்லையென்ற ஒரு விசித்திரமான கருத்தை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தனிச்சிங்கள நிபுணர்களையும், புத்த குருமார்களையும் கொண்டு அமைக்கப்பட்ட தொல்பொருட்கள் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு தேர்தலுக்கு முன்னைய நாட்களில் தமிழ் ஆய்வாளர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார். அது மட்டுமின்றி அப்படி உள்வாங்கப்படுவார்கள் என மக்களுக்கு வாக்குறுதியும் அளித்திருந்தார். தேர்தல் முடிவடைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட பின்பு அவர் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் மேற்படி செயலணியில் தமிழர்களை உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அப்படியான நிலையிலே அமைச்சர் அவர்கள் போர் காலத்தில் தமிழ் ஆயுதத் தலைமையினால் பல புத்திஜீவிகள் கொல்லப்பட்டனர் எனவும் ஏனையோர் அச்சம் காரணமாக நாட்டைவிட்டு ஓடிவிட்டனர் எனவும் அதனால் ஜனாதிபதி செயலணிக்கு நியமிப்பதற்கு பொருத்தமான நிபுணர்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் தொடர்பாக பழியை விடுதலைப் புலிகள் மீதோ அல்லது ஏனைய தமிழ்த் தலைவர்கள் மீதோ சுமத்திவிட்டு அரசாங்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை அடிக்கடி வெளியிடும் அவரின் அரசியல் பற்றி விமர்சிக்கும் நோக்கம் எமக்கில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் செயலணிக்கு நியமிப்பதற்கான தொல்லியல் நிபுணர்கள் இல்லை என்ற கருத்தை எக்காரணம் கொண்டும் எம்மால் எற்றுக்கொள்ள முடியாது. அது நூறு வீதம் உண்மைக்கு மாறானது என்பதை எமது மக்கள் நன்குணர்வர்.

ஆனால் அவர் பொருத்தமான நிபுணர்கள் இல்லையென்று கூறும் போது அந்தப் பொருத்தம் என்பது எப்படியான பொருத்தம் என்பதுதான் இங்கெழும் கேள்வியாகும்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட அந்த பேரணியின் ஒரு முக்கியமான உறுப்பினரும் இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் எனச் சிங்களக் கடும்போக்குவாதிகளால் போற்றப்படுவருமான எல்லாவல்ல மெத்தானந்த தேரர் அண்மையில் வெளியிட்ட கருத்துகளை நோக்கும் போது அவர்தான் பொருத்தமான செயலணியின் உறுப்பினர் என்றால் தமிழர்கள் மத்தியில் அவரைப் போன்ற எந்தவொரு நிபுணரும் இல்லையென்பது உண்மைதான்.

எல்லாவல்ல மெத்தானந்த தேரருக்கு தொல்லியல் துறை சார்ந்த இன ஒடுக்குமுறைக் கருத்துகளை வெளியிடுவதிலும், நடைமுறைகளை மேற்கொள்வதிலும் நீண்ட அனுபவம் உண்டு. ஒரு காலத்தில் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் தான் நிலைகொண்டிருந்தார்கள் எனவும் சோழர்களின் படையெடுப்பின் போது அவர்கள் இலங்கையின் உட்புறமாக விரட்டப்பட்டார்கள் என்றும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை எவ்வித ஆதாரமும் இல்லாமலே முன்வைத்தவர் அவர்.

முனீஸ்வரம் சிவன் கோவிலில் இராஜ கோபுரம் அமைப்பதற்கு அத்திவாரம் வெட்டப்பட்ட போது ஒரு சந்திரவட்டக்கல் கண்டெடுக்கப்பட்டது. உடனே கொதித்தெழுந்த மெத்தானந்த தேரர் அங்கு ஒரு பௌத்த விகாரை இருந்ததாகவும், சோழர்கள் இலங்கையை கைப்பற்றியிருந்த போது விகாரையை அழித்து விட்டு சிவன் கோவிலைக் கட்டினார்கள் என்று கூறி இராஜகோபுரம் அமைப்பதைத் தடுத்து நிறுத்தும்படி நீதிமன்றத்துக்கு மனுக்கொடுத்து அப்பணிகள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

அண்மைக் காலத்தில் கூட நாயன்மாரின் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம் கோகண விகாரை என்ற பௌத்த சைத்தியம் அமைந்துள்ள இடத்திலேயே கட்டப்பட்டது எனவும் அவரும், அவருடன் ஒத்த சில பௌத்த பிக்குமாரும் ஒரு பெரும் வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்கள். முல்லை மாவட்டம், நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் குளக்கரையில் நீராவிப்பிட்டியில் பௌத்த விகாரையை அமைத்து ஆக்கிரமிப்பு மேற்கொண்ட பௌத்த பிக்குவின் சடலத்தைத் தகனம் செய்வதற்கு தலைமை தாங்கி தனது மதமேலாதிக்க வெறியை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் முழுப்பகுதியையுமே சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கத்துக்கு அமைவாக தொல்பொருள் ஆய்வுகள் மூலமான போலிப் பெறுபெறுகளை முன்வைக்கும் நோக்கத்துடன் செயற்படும் இன மத வெறியர்கள் தான் தொல்பொருள் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமானவர்கள் என்றால் நிச்சயமாக தமிழ் மக்கள் மத்தியில் அப்படியான நிபுணர்கள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும்.

பாளி இலக்கியங்கள் இலங்கையில் கி.மு 6ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் இடம்பெற்ற புலப்பெயர்வுடனேயே மனித குல நாகரீகம் ஆரம்பித்ததாக கூறுகின்றன. ஆனால் ஆனைக்கோட்டை, சாட்டி, பூநகரி, வெற்றிலைக்கேணி, மந்திகை, உடுத்துறை, பல்லவராயன்கட்டு, இரணைமடு, அக்கராயன் போன்ற இடங்களில் யாழ் பல்கலைக்கழகத்தினரும் வேறு பல தொல்லியல் நிபுணர்களும் நடத்திய ஆய்வின்படி விஜயன் யுகத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே இலங்கையில் மனித நாகரீகம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

இதுவரை 80 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் விளைவாக 37,000 வருடங்களுக்கு முற்பட்ட நுண்கற்காலப் பண்பாட்டுக்குரிய மக்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பது நிறுவப்பட்டுள்ளது.

பருத்தித்துறை அருகில் அமைந்துள்ள வல்லிபுரம் கோவிலுக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட பொற் சாசனம் ஒன்று யாழ்ப்பாணத்துக்கு நாகதீபம் என்ற ஒரு பெயர் வழக்கிலிருந்ததை உறுதிப்படுத்துகிறது. சீன யாத்திரீகர் தொலமி கூட வடக்கில் ஒரு நகரம், 'நாகநாடு' என்ற பெயரில் அமைந்திருந்ததாக தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். கி.மு 1000 ஆண்டுகள் காலப்பகுதியில் வடக்கில் பெரும் கற்காலப் பண்பாடு நிலவியதை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட பெருங் கற்கால குடியிருப்பு மற்றும் ஈமச்சின்னங்கள் உறுதி செய்கின்றன.

அரசின் தோற்றம் குளத்து நீர்ப்பாசனம் நிரந்தர வசிப்பிடம் சிறு கைத்தொழில்கள் பண்டமாற்று முறைகள் போன்ற பெருங்கற்காலப் பண்பாடு வடக்கில் நிலவியதும் சங்க காலத்துக்கு பிற்பாடு தென்னிந்தியாவுடன் இப்பகுதி மக்கள் நெருக்கமான உறவைப் பேணி வந்ததும் மறுக்கமுடியாத உண்மையாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னணியின் தொடர்ச்சியாக பெருங்கற் காலப் பண்பாட்டுக் காலந்தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளமை தொல்பொருள் எச்சங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாகநாடு ஏற்கனவே நாகவழிபாட்டைக் கொண்டிருந்த மக்கள் தங்களுக்கென ஆட்சியதிகாரத்தை நிறுவி ஒரு நாகரீகமான மக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்திருந்தனர். இக்காலப்பகுதியில் நாகதீபம் என அழைக்கப்பட்ட அங்கு இரு சகோதரர்களுக்கிடையில் ஆட்சிபீடம் தொடர்பான மோதல் ஏற்பட்டதாகவும், புத்தர் ஆகாய மார்க்கமாக பறந்து வந்து அத் தகராற்றைத் தீர்த்து வைத்ததாகவும் அதன் பின்பு நாகநாட்டு மன்னரும் மக்களும் பௌத்த சமயத்தை பின்பற்றியதாக பாளி இலக்கியங்கள் கூறுகின்றன.

அச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் போது இங்கு வந்து தகராற்றைத் தீர்த்து வைத்தது புத்தர் அல்ல, அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரரே எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் தமிழ் நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்தமையும் பதிணென் கீழ்கணக்கு, நெடுநெல் வாடை போன்ற நூல்களும் வீரசோழியம் என்ற தமிழ் இலக்கண நூலும் இக்காலத்திலேயே உருவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும் நாகநாடு மட்டுமல்ல கந்தரோடை, சிங்கை நகர் போன்ற காலத்துக்கு காலம் நிலவிய தமிழரசுகள் சிறந்த நாகரீகத்தைக் கொண்ட தமிழரசுகளாக விளங்கியதுடன் தென்னிந்தியா, வடஇந்தியா, கிரேக்கம், உரோமம் அரேபியம், சீனம் ஆகிய நாடுகளுடன் கடல் வணிகத்தைக் கொண்டிருந்தமையை அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள், சிற்பங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன.

இப்படியான நிலையில் இலங்கையில் முதற் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றும் குறிப்பிடப்பட்டதை எதிர்த்து மேதானந்த தேரர் கொதித்தெழுந்திருக்கிறார். அவர் இது அப்பட்டமான பொய் என்றும் இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றும், தமிழ்தான் இலங்கையிலிருந்த மொழியெனில் சில பகுதிகளாவது சிங்கள மொழியுடன் பொருந்தியிருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

கி.பி 5ம் நூற்றாண்டில் தாது சேன மன்னன் காலத்தில் மகாநாம தேரரால் பாளி மொழியில் மகாவம்சம் எழுதப்பட்ட போது சிங்கள மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்பதையும், சிங்கள மொழி பாளி, சமஸ்கிருதம், வங்காளம், தமிழ் பிராமி முதலிய மொழிகளில் இரவல் வாங்கி உருவான மொழியென்பதை வெகு இலாவகமாக மறைத்துள்ளார்.

பல தமிழ் சொற்களும், எழுத்துகளும் சிங்களத்தில் இருப்பதையும் அவர் மறந்து விட்டார் போல் தெரிகிறது. அதுமட்டுமின்றி தமிழ் மக்கள் இடையில் குடியேறியவர்கள் என்றும் வாடகை வீட்டில் இருப்போர் வீட்டு உரிமையாளரை அனுசரித்து வாழ வேண்டும் என்பது போன்று இங்கு வாழும் சிறுபான்மையின மக்களும் பெரும்பான்மையினத்துக்கு குழப்பம் விளைவிக்காமல் வாழ வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு தொல்பொருள் சின்னங்களையும், வரலாற்று ஆய்வுகளையும் தூக்கியெறிந்துவிட்டு தான்தோன்றித்தனமான பொய்யான வரலாற்றை புனையும் நோக்குடன் செயற்படும் மெத்தானந்த தேரர் போன்ற, தமிழ் தொல்லியல் நிபுணர்களை தேடிப்பிடிக்க முடியாது என்பது உண்மைதான்.

எனவே வடக்கு கிழக்கு பகுதிகளை சிங்கள பௌத்த மயமாக்கப்படும் நோக்குடன் ஆதாரங்களை உருவாக்கும் தேவையை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே தொல் பொருட்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணியாகும். அச் செயலணியில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களானால் அவர்களின் அந்தக் கீழ்த்தரமான நோக்கத்துக்கு அவர்கள் இடையூறாக அமையக்கூடும். எனவே திட்டமிட்டு இச்செயலணி அமைக்கப்படும்போது தமிழர்களும், முஸ்லீம்களும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே இப்புறக்கணிப்பு தொடர்பாக அரசாங்கத்தை நியாயப்படுத்தும் போலி புனைகதைகள் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.

08.09.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE