Monday 18th of March 2024 09:57:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
தியாகதீபம் திலீபனின் போர்ப்பிரகடனம்! - நா.யோகேந்திரநாதன்!

தியாகதீபம் திலீபனின் போர்ப்பிரகடனம்! - நா.யோகேந்திரநாதன்!


15.09.1987 தொடக்கம் 27.09.1987 வரையான காலப்பகுதி உலக வரலாற்றிலேயே தனித்துவமான முத்திரையைப் பதிவு செய்த நாட்கள். தியாகி திலீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு உன்னத பதிவாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உலகிலேயே முதன்முதலாக நீர் கூட அருந்தாமல் மேற்கொண்ட உண்ணாவிரதம் மூலம் அவன் உயிர்க்கொடைப் பயணம் செய்த நாட்கள் அவை.

ஏற்கனவே இந்திய அகாலிகள் தலைவர்களில் ஒருவரான தாரா சிங், ஐரிஸ் விடுதலைப் போராட்ட வீரர் பொபி சன்டர்சன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரை அர்ப்பணம் செய்திருந்தாலும் கூட நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்த்தியாகம் செய்த முதல் சாதனையின் உரிமையாளர் தியாக தீபம் திலீபனே.

கடந்த 32 வருடங்களிலும் திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கும் நிகழ்வுகளை பல்வேறுவிதமான அடக்குமுறைகள், நெருக்கடிகள் மத்தியிலும் அந்த மகத்தான தியாகத்தின் மேன்மையைப் பாதுகாத்து தமிழ் மக்கள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டித்து வருகின்றனர். எனினும் இவ்வருடம் தியாகதீபம் திலீபனின் நினைவு நாட்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு எதிரான நீதிமன்றத்தடை; அத்தடையை மீறி அஞ்சலி செய்தமை; அப்படி அஞ்சலி செய்தவர் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டமை; தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் இப்புனித நினைவஞ்சலியை மூன்றாந்தர அரசியலுக்குள் தள்ளிவிட்டன.

ஒரு பிராந்திய வல்லரசும், இலங்கையின் இனவாத ஆட்சியாளர்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் நசுக்கக் கங்கணம் கட்டி நயவஞ்சக நடவடிக்கைகளில் இறங்கிய போது அதை எதிர்த்து போராளி திலீபன் எமது மக்களின் ஏகப்பிரதிநிதியாக உண்ணாநோன்பு என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து போர்ப்பிரகடனம் செய்தான்.

தமிழ் மக்களுக்காக தனி ஒருவனாக மக்களின் பேராதரவுடன் போராடி உயிர்நீத்த திலீபனின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மக்களை அணிதிரட்டி ஒரு வெகுஜன எழுச்சியை ஏற்படுத்த எந்த ஒரு தமிழ்த் தலைவரோ அல்லது தமிழ் அரசியல் கட்சியோ தயாராக இல்லை. இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால் மக்களுக்காக இன்பங்களை அனுபவிக்க வேண்டிய வாலிப வயதிலேயே உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனுக்காகத் தடியடி படவோ சிறை செல்லவோ எந்தவொரு அரசியல்வாதியும் தயாராக இல்லை. மாறாக திலீபனின் புனிதமான அஞ்சலியை 'அப்புக்காத்து' அரசியலுக்குள் தள்ளி அதன் மக்கள் மயப்பட்ட தன்மையை மழுங்கடித்து மக்களின் உணர்வுகளை மந்தமாக்கும் வகையில் செயற்படுகின்றனர்.

தமிழ் அரசியல் தலைமைகளின் நேர்மையற்ற சுயநலம் சார்ந்த அரசியல் காரணமாக இன்று தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும் அவர்களின் ஆதரவு சக்திகளும் இங்கு பலம் பெறும் நிலைமை உருவாகிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையத் தயாரின்மையும் அப்படியான ஒன்றிணைவைத் தடுக்கும் தமிழ் கட்சிகளுக்குள் ஊடுருவி இருக்கும் நபர்களை தூக்கியெறிய நடவடிக்கையெடுக்காமையுமே இத்தகைய பின்னடைவுக்கு காரணம் என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது. இப்படியான ஒரு விரும்பத்தாகாத நிலையிலும் தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் தவறுகளிலிருந்து வெளிவந்து சரியான திசைமார்க்கத்தில் செல்லமறுப்பது தங்களைத் தாங்களே அழிப்பதும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்துவதுமான நிலைமையே ஏற்படுத்தும்.

எனவே திலீபனின் நினைவஞ்சலிக்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தத் தயாரற்ற எமது அரசியல் தலைமைகள் திலீபனின் நாமத்தை உச்சரித்து தமது சுயநல மூன்றாந்தர நாடாளுமன்ற ஆசனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அரசியலை முன்னெடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவற்றிலிருந்து விடுவதற்கு தமிழ் மக்கள் எடுக்கும் முயற்சிகளையும் தனது பிராந்திய அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதையே அன்று தொட்டு இன்று வரை தனது தமிழ் மக்கள் தொடர்பான அரசியலாக மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாகப் பாவனை செய்து கொண்டு இந்திய மேலாதிக்கச் சக்திகள் காலங்காலமாக தனது நலன்களின் பலிக்கடாவாக தமிழ் மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி வருகின்றன.

1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அமெரிக்க தாசரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கையை மேற்குலக அரசியல் பொருளாதார இராணுவ வட்டத்திற்குள் கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் உச்சகட்டமாக திருமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு 30 வருடக் குத்தகைக்கு வழங்கத் திட்டமிட்டார்.

இந்த நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசுக்கு தொல்லை கொடுத்து அதைத் தனது காலில் விழவைக்கும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் பணத்தையும் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி ஊதிப்பெருப்பித்தது இந்தியா. உண்மையிலே இந்தியாவுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஒரு குழுவை மட்டும் பயன்படுத்தி அது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் சக்திப்படுத்தியிருக்கும் அல்லது எல்லா இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு உறுதியான தலைமையின் கீழ் எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வழி ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் இந்தியாவோ சில இயக்கங்களை தனது கைப்பொம்மைகளாக வைத்துக் கொண்டு இயக்கங்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தி மோதல்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி தமிழ் இளைஞர்களின் போராட்ட சக்தியை பலவீனப்படுத்திவந்தது.

எனினும் விடுதலைப் புலிகள் இந்தியா தமிழ் மக்களின் நலன்களைவிட தனது பிராந்திய மேலாதிக்கத்தை முன்னிறுத்தியே செய்றபடுகிறதென்பதை புரிந்துகொண்டு இந்தியாவுடனான உறவை அதற்கேற்ற வகையில் தந்திரமாகக் கையாண்டனர்.

'ஒப்பிறேசன் லிபறேசன்' இலங்கைப் படைக்கு ஏற்படுத்திய தோல்வியும், நெல்லியடி கரும்புலித்தாக்குதலால் இலங்கை இராணுவத்தினர் மத்தியில் தோன்றிய குழப்பமும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை இந்தியாவிடம் உதவிக்கு ஓட வைத்தது. அதைப் பயன்படுத்திய இந்தியா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்தியப்படையை இங்கு இறக்கியது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அமைவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள அம்சங்களுக்கு இசைவாக திலீபன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.

இந்தியா ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பக்கம் நின்று உண்ணாநோன்பு போராட்டத்தை முறியடிக்க நேரடி, மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதுடன் அப்போராட்டத்தை இழிவுபடுத்தும் பிரசாரங்களையும் மேற்கொண்டது.

இந்தியா திலீபனின் ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாது எனத் தெரிந்திருந்தும் தனக்குச் சாவு நிச்சயம் என்பதைப் புரிந்திருந்தும் திலீபன் இந்தியா தொடர்பாக எமது மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட மாயையை உடைத்தெறியவும் இந்தியப் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் இப்போரைப் பிரகடனம் செய்தான்.

திலீபனின் சாவு, தளபதிகள் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு என்பவற்றையடுத்து இந்தியா விடுதலைப் புலிகளின் மீது போரைக் கட்டவிழ்த்துவிட்டு அவ்வமைப்பை அழிக்க முயற்சித்தது. அந்த முயற்சியில் படு தோல்வியடைந்த பின்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசாங்கத்துக்கு தோள் கொடுத்தும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு துணை நின்றும் இலங்கை அரசுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.

ஆனால் இன்று வரை இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு இசைவாக முன்வைக்கப்பட்ட திலீபனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவோ, மகாண சபைகளுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப்படவோ இல்லையென்பதையும் அவற்றை நிறைவேற்ற இந்தியா வெறும் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தவிர வேறு எதையும் செய்வதில்லை என்பதையும் எல்லோரும் அறிவர்.

இப்படியான ஒரு நிலையில் கூட எமது தமிழ்த் தலைமைகள் எமது பிரச்சினைகளுக்கு இந்தியா ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத்தரும் என்ற மாயையை எமது மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எனவே இந்திய அரசின் நயவஞ்சக தமிழ் மக்கள் விரோத நிலைப்பாட்டை அம்பலப்படுத்திய திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் இந்திய மேலாதிக்க சக்தி தொடர்பான மாயையை இல்லாமல் செய்வதை எமது தலைமைகள் விரும்பாமல் இருப்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அன்று திலீபன் நல்லூர் ஆலய வீதியில் விடுத்தஅகிம்சைப் போர்ப்பிரகடனம் இந்திய விடுதலைப் புலிகள் போரின் ஆயுத வடிவமாக விரிந்தது. அது காலப்போக்கில் விடுதலைப் புலிகளின் இலட்சிய உறுதி காரணமாக எமது மக்களின் அசைக்கமுடியாத ஆதரவு காரணமாகவும் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி ஒரு நிழல் ஆட்சியதிகாரத்தை நிலை நிறுத்துமளவுக்கு வலுப்பெற்றது. ஆனால் சர்வதேச சதி மூலம் குறிப்பாக இந்தியாவின் நயவஞ்சகம் மூலம் அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்க வைக்கப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் போர்ப்பிரகடனம் தமிழ் மக்களின் மூச்சுக் காற்றில் கலந்து இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. எனவே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் அது இன்னொரு வடிவத்தில் மேலெழும்.

எமது இன்றைய கையாலாகாத தமிழ்த் தலைமைகள் எமது உரிமைப் போராட்டத்தைப் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் காற்சலங்கைகளின் மணிகளாக கோர்த்துக் கட்ட முயன்றாலும் திலீபனின் போர்ப்பிரகடனத்தின் பலம் சகலதையும் உடைத்துக் கொண்டு தமிழ் மக்களின் விடிவை நோக்கி முன்செல்லும் என்பது நிச்சயம்.

'போராடுவது தோல்வியடைவது; மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது; மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது அவர்களின் சவக்குழி வரை - இது ஒடுக்குமுறை யாளர்களின் நியதி'

'போராடுவது தோல்வியடைவது; மீண்டும் போராடுவது மீண்டும் தோல்வியடைவது; மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது இறுதி வெற்றி வரை - இது மக்களின் நியதி' - மாஓ- சேதுங் (சீன தேசிய தலைவர்)

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.

22.09.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE