Friday 26th of April 2024 07:07:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேர்தல்கால வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றி வருகிறார் - வியாழேந்திரன் தெரிவிப்பு

தேர்தல்கால வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றி வருகிறார் - வியாழேந்திரன் தெரிவிப்பு


எமது ஜனாதிபதி தனது தேர்தல் காலவாக்குறுதிகளை மிகவும் திறம்பட நிறைவேற்றி வருகின்றார், அத்தோடு எமது மாவட்டத்தைச் சேர்ந்த 199 நபர்களையல்ல 199 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளாரென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்துமாக அங்கு உரையாற்றுகையில்,

உண்மையில் இன்றைய நாளில் நான் ஆத்மார்த்தமாக சந்தோசமடைகின்றேன், காரணம் கடந்த 5 வருட கால அரசியலிலே நான் மிகக் கூடுதலாக சந்தோசமடைகின்ற நாளாக இன்றைய நாளை நான் பார்க்கின்றேன்.

கடந்த நான்கரை வருட காலத்திலே நாங்கள் கடந்தகால அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கொண்டு வரவு செலவு திட்டம், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் , பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அனைத்திலும் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பை சாரும்.

அவ்வாறு அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்தும் கடந்த காலத்திலே பாராளுமன்றத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுமார் 22 வேலைவாய்ப்புக்களே வழங்கப்பட்டிருந்தது.

இன்று நாட்டினுடைய புதிய அரசாங்கத்தினுடைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய தேர்தல் பிரச்சார காலத்தில் சொன்னார் நாட்டை சுபீட்சத்தின்பால் கொண்டு செல்வதுடன், வேலையற்ற பட்டதாரிகள் ஐம்பதாயிரம் பேரிற்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றும் ஒரு இலட்சம் க.பொ.த சாதாரண தரம் சித்தியடைய தவறிய வறுமைக் கேட்டின் கீழ் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவோம் என்ற வாக்குறுதியை அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக தெரிவித்திருந்தார். இது போன்று பல வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அவர் வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் வேகமாக இடம்பெற்று வருகின்றது. அந்த அடிப்படையில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு முடிந்துவிட்டது. இன்னும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.

அதே போன்று ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென கூறியிருந்தார் அதற்கு அமைவாக க.பொ.த சாதாரண தரம் சித்தியடைய தவறிய வறுமைக் கேட்டின் கீழ் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு முதற்கட்டமாக இலங்கையிலே 34,000 வேலை வாய்ப்புக்களை அரச துறையிலே வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதே போல் அடுத்தடுத்த கட்டங்களிலே மிகுதியாக இருக்கின்ற 66 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட இருக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 காரணத்தினாலேயே முழுமையாக ஒரே நேரத்திலேயே அனைவருக்கும் வேலை வழங்க கூடிய சூழல் இல்லை அதனால் தான் கட்டம் கட்டமாக அரசாங்கம் இதை வழங்கிவருகின்றது.

அந்த அடிப்படையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இன்று 249 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வை நாங்கள் ஒரு மண்டபத்திலேயே ஏற்பாடு செய்ய இருந்த போதிலும் கொவிட் - 19 நிலை காரணமாகவே இந்நிகழ்வை நாங்கள் எமது அலுவலகத்திலேயே செய்தோம் என்றார்.

இன்றும் இதை வழங்கியிருக்க மாட்டோம் ஆனால் அப்படி வழங்காமல் இருக்க முடியாது காரணம் இவர்கள் மிக விரைவாக பிரதேச செயலகங்களிலே அறிக்கையிட வேண்டும். அதனாலேயே 199 பேருக்கான நியமனம் என்னால் வழங்கப்படுகின்றது.

இவர்களுக்கு இந்நியமனம் கிடைக்கப்பெற்றதும் இவர்களுக்கு ஆறு மாத கால பயிற்சி இருக்கின்றது. இதற்காக மாதாந்தம் 22,500 கொடுப்பனவும் வழங்கப்பட இருக்கின்றது. பயிற்சிக்கு பிற்பாடு நிரந்தர நியமனம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு அவர்களுடைய வேலை வாய்ப்பு நிரந்தரமாக்கப்படவுள்ளது.

இவ்வாறாக எமது மாவட்டத்தில் உள்ள 199 இளைஞர் யுவதிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏதுவாக இருந்த எங்களுடைய நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலணிக்கு பெறுப்பாக இருக்கின்ற முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் நான் விசேடமாக இந்த இடத்திலே நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE