Wednesday 20th of January 2021 09:23:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்!

ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்!


பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது.

அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியத் தேவை தற்போது எழுந்துள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் குடியேற்றங்கள் மூலம் தமிழ் பிரதேசங்களை அபகரிப்பதை விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் தொடக்கி வைத்து வெற்றி மேல் வெற்றி பெற்றவர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க. அதைத் தொடர்ந்து பல்வேறு சிங்களத் தலைவர்களும் அதைத் தொடர்ந்தாலும்; தீவிரமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள் ஜே.ஆர்.ஜயவர்த்தன, காமினி திசநாயக்க கூட்டு என்றால் மிகையாகாது.

அதேபோன்று தமிழர் தாயகத்தைத் தற்சமயம் சிங்கள மயப்படுத்தும் கைங்கரியத்தைத் தீவிரமாக முன்னெடுப்பது ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியாகும். அவர்கள் நிலப்பறிப்பை விவசாய அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொண்டனர். ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களோ குடியேற்றம் என்ற தமிழ் மக்களை அச்சுறுத்தும் பெயரைக் கைவிட்டு கிராம அபிவிருத்தித் திட்டம் என்ற பதாகையுடன் களமிறங்கியுள்ளனர்.

அதாவது கிராமிய விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் ஒரு இலட்சம் பேருக்குக் காணிகள் வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. போதிய விளம்பரமோ கால அவகாசமோ வழங்கப்படாத நிலையில் தமிழ் மக்களிடமிருந்து ஐம்பதினாயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.

முதலாவது, இவ்விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகள் பற்றி இதுவரை தெளிவான விபரங்கள் இல்லாத நிலையில் விண்ணப்பிக்கும் பல தமிழ் விண்ணப்பதாரிகளில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. எனவே ஒரு இலட்சம் பேரில் தெரிவு செய்யப்படும் தமிழர்களைவிட மிகுதியான பெருந்தொகை சிங்களவர்களாலேயே நிரப்படும் என்பதை நம்பலாம்.

இரண்டாவது, இக்காணிகள் எங்கெங்கு வழங்கப்படும் என்பதோ, எந்தெந்தப் பிரதேசங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்பது பற்றியோ எவ்வித வரையறையும் இல்லை. எனவே தமிழ் மக்கள் குடியேறப் பொருத்தமற்றவையானவையும் பாதுகாப்பற்றதுமான பிரதேசங்களில் குடியேற்றப்படும் சாத்தியமும் உண்டு. அதன் காரணமாக அங்கு குடியேறும் தமிழர்கள் தாமாகவே வெளியேறும் நிலைமை உருவாக்கப்படலாம்.

மூன்றாவது, ஒரு குடியேற்றத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் குடியேற்றப்படும்போது சில முரண்பாடுகள் உருவாகுவதற்கான அல்லது உருவாக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தனி நபர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் கூட இன அடிப்படையில் நோக்கப்பட்டு முறுகல் நிலை தோற்றுவிக்கப்படலாம். அது போன்று ஒரு குடியேற்றத்திட்டத்தின் தனிப்பட்ட நபர்களுக்குள் எழும் முரண்பாடுகள் போன்ற விடயங்கள் இன அடிப்படையில் அணுகப்பட அரச அதிகாரிகள், பொலிஸார் சிங்களவர்கள் தரப்புக்கு ஆதரவு வழங்கத் தமிழ் மக்கள் இயல்பாக வாழமுடியாத நிலை ஏற்பட்டு அங்கிருந்து சிறிது சிறிதாக வெளியேறவேண்டிய நிலை ஏற்படுத்தப்படும்.

நான்காவது, நாடு பரந்த அளவில் இனக் கலவரங்கள் உருவாகும்போது கலப்புக் குடியேற்றத்திலுள்ள ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் சொத்துக்கள் சூரையாடப்பட்டும் பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படும். அதனால் அங்கு தமிழர் வாழமுடியாத நிலை ஏற்படும். இன விகிதாசார அடிப்படையிலேயே குடியேற்றங்கள் இடம்பெறுவதால் கலப்புக் குடியேற்றங்களில் சிங்களவர்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்பதனால் அவ்வாறான கொடுமைகள் சாத்தியமே. உதாரணமாகக் கலப்புக் குடியேற்றமாக உருவாக்கப்பட்ட கல்லோயா திட்டத்திலிருந்து 1956, 1958 காலப்பகுதிகளில் இடம்பெற்ற இனக் கலவரங்களின்போது அங்கிருந்து தமிழர்கள் முற்றாகவே விரட்டியடிக்கப்பட்டு அது தனிச் சிங்களக் குடியேற்றமாக மாற்றப்பட்டது. வவுனியா மாவட்டத்தின் பதவியாக் குடியேற்றத்திற்கும் இக்கதியே இடம்பெற்றது.

ஐந்தாவது, இத்தகைய குடியேற்றங்களைச் சுற்றி அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் குடியேற்றங்களும் காலப்போக்கில் அவை குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்படுவதுமாகும். வரலாற்றுப் புகழ் பெற்ற சோமாவதி விகாரை திருகோணமiலை மாவட்டத்தில் இருந்ததாகக் கூறப்பட்டு அங்கு ஒரு விகாரை அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிச் சிங்களக் குடும்பங்கள் ஒரு பௌத்த பிக்குவால் குடியேற்றப்பட்டனர். அதேபோன்று பாலம்போட்டாறு, கப்பற்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அங்கு நொச்சியாகம என்ற குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது. சோமாவதி விகாரையைச் சுற்றியும் குடியேறியவர்களும் சேருவில என்ற குடியேற்றத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்போது கிழக்கு மாகாணத்தின் நிலத் தொடர்பு துண்டிக்கப்பட்டு மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதி;யில் சேருவில என்ற ஒரு சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவும், தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டன. இது கல்லோயா, அல்லை ஆகிய கலப்பு குடியேற்றத் திட்டங்களின் விரிவாக்கம் என்பது முக்கியமான விடயமாகும். இவ்வாறே வவுனியாவில் பதவியாக் குடியேற்றத்தின் விரிவாக்கமாக பாரம்பரிய மாமடு கிராமத்தில் தொடக்கத்தில் சிங்களவர்கள் அடாத்தாகக் குடியேறினர். பின்பு அது பதவியாவின் கிராமிய விஸ்தரிப்புத் திட்டம் என்ற பேரில் குடியேற்றத்திட்டமாக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் மாமடுவை விட்டு வெளியேறி விட்டனர்.

இவ்வாறான கலப்புக் குடியேற்றங்களின் வௌ;வேறு வடிவங்கள் மூலம் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு என்ற ஒரு சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டது.

அபகரிக்கப்படும் தமிழர்களின் இதயபூமி

மணலாறு, பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் அடர்ந்த வனம் கொண்ட காடுகளையும் கொண்டதுடன் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஒரு பிரதேசமாகும். அதன் காரணமாகவே மணலாறு தமிழர் தாயகத்தின் இதயபூமி என அழைக்கப்படுகிறது.

அப்பிரதேசம் தென்னைமரவாடி என்ற வன்னிமையின் கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான தனித்தனிக்குளங்களைக் கொண்ட கிராமங்களைக் கொண்டிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலும் இப்பிரதேசம் சுதந்திரபூமியாக விளங்கி வந்தமை தெரியவந்துள்ளது. பின்னாட்களில் இப்பிரதேசம் நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்டிருந்தது.

1965 – 1970 காலப்பகுதியில் அப்பகுதியில் தலா ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட 12 காணிகள் விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கென 99 வருடக் குத்தகையில் பெரும் தமிழ் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டன. அங்கு ஏராளமான மலையக மக்கள் பணி புரிவதற்காக அப்பண்ணைகளில் குடியேற்றப்பட்டனர். 1983ல் கென்ற் பண்ணை, டொலர் பண்ணை ஆகிய இரு பண்ணைகளும் சுவீகரிக்கப்பட்டு சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டன. அங்கு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்கப்பட்டதுடன் கைதிகளின் குடும்பங்களும் குடியேற்றப்பட்டன. அங்கு ஏற்கனவே குடியிருந்த மலையக மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். 1984ல் மணலாற்றுப் பகுதி மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பண்ணைகளில் வசித்த மக்கள் மட்டுமின்றி, பாரம்பரிய தமிழ் கிராமங்களில் வசித்த மக்களும் 48 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். போர் முடிவுக்கு வந்தபோது இந்த வளமான கிராமங்கள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது மட்டுமின்றி மகாவலி அபிவிருத்தி சபையால் அவர்களுக்கு அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே மணலாற்றின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கும், மணலாற்றுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஏற்கனவே கல்லோயா, கந்தளாய், முதலிக்குளம், பதவியா போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் சந்தித்த அனுபவங்களும் தமிழர் தாயகப் பகுதிகளில் அம்பாறை, சேருவில, வவுனியா தெற்கு தனிச் சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டமையும் அரசாங்கம் கண் வைப்பதன் உள்நோக்கத்தையும் நீண்ட கால இலக்கையும் புரிந்து கொள்ள வைக்கின்றன.

கிராமியப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தற்போது எஞ்சியுள்ள பகுதிகளில் தமிழ் மக்கள் குடியேற்றப்படும் சாத்தியம் உண்டு. அப்படியான நிலையில் அங்கு சட்ட விரோதமாகவும் மகாவலி அபிவிருத்தி சபையாலும் குடியேற்றப்பட்டவர்களுக்கும் காணி உறுதிகள் வழங்கப்பட்டு அவர்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்படும். எனவே தமிழ் மக்களின் இதயபூமியான மணலாறு என்ற பரந்த பிரதேசம் கலப்பு குடியேற்றமாகும்.

தற்சமயம் இது முல்லை மாவட்டத்தில் ஒரு தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இனமோதல்கள், இராணுவ நடவடிக்கைகள், அரச அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கைகள் என்பன காரணமாக தமிழ் மக்கள் விரைவில் வெளியேறும் நிலை உருவாக்கப்படும். அத்துடன் மணலாறு முழுமையாகச் சிங்கள மயப்படுவதுடன் கல்லோயா, பதவியா போன்று விரிவடைந்து அயற் கிராமங்களை ஆக்கிரமிக்கும் நிலையும் ஏற்படும்.

அடிப்படையில் வடக்கில்வெலி ஓயா என்ற ஒரு சிங்கள மாவட்டத்தை உருவாக்குவதன் மூலம் தமிழர் தாயகத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் அதேவேளையில் வடக்குக் கிழக்குக்கான நிலத் தொடர்பும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம். இவற்றின் ஒரு பகுதியாக கற்பூரப்புல்வெளி, முள்ளியவளை தேக்கங்காடு, இரணைமடு, முறிகண்டியில் இராணுவக் குடும்பங்களுக்கா ன குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்ட 4,000 ஏக்கர், பூனகரி 4ம் கட்டை, முந்திரிகைக்குளம், மெனிக்பாம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இனவிகிதாசார அடிப்படையிலான குடியேற்றங்கள் என்ற பேரில் சிங்களவர் குடியேற்றப்படுவார்கள் என்பது மறுக்கப்படமுடியாது.

எனவே இந்தக் கிராமிய பொருளாதார அபிவிருத்திட்டம் மூலம் அம்பாறை போன்று, சேருவில போன்று, மொறவௌ போன்று, மணலாறு போன்று, பதவியா போன்று தமிழர் நிலங்களை அபகரிப்பதுடன் தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பைத் துண்டித்துச் சிதைக்கும் சதியே பிரதான இலக்காக உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டு தமிழ்த் தலைமைகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அரசாங்கத்தின் உள்நோக்கங்களை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும். இத்திட்டங்களில் தமிழர் மட்டுமே குடியேற்றப்படும் நிலை உருவாகும்வரை ஜனநாயகப் போராட்டங்கள் தொடரவேண்டும். அப்படியான ஒரு விழிப்பு நிலை உருவாகாவிட்டால் நாம் பெரும் ஆபத்தை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாததாகும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

24.11.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE