Friday 26th of April 2024 01:22:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்திய மீனவர்களின் அத்துமீறலும் இலங்கை இந்திய அரசியலும்! - நா. யோகேந்திரநாதன்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலும் இலங்கை இந்திய அரசியலும்! - நா. யோகேந்திரநாதன்!


அண்மையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பிரவேசித்து றோலர் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் இந்தியப் படகுகளை மூழ்கடிக்கப் போவதாக எச்சரிக்கை செய்துள்ளனர். அண்மைக் காலங்களில் முல்லைத்தீவு, பருத்தித்துறை, நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடலில், கரையிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை வந்து இழுவைப் படகுகளால் மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துச் செல்கின்றனர்.

2011ம் ஆண்டு தொடக்கம் கட்டற்ற வகையில் நடத்தப்படும் இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தும்படி நீரியல் வளத் துறையினரிடமும் கடற்றொழில் திணைக்களத்திடமும் மீண்டும் மீண்டும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல போராட்டங்களை நடத்தியும் உள்ளனர். இப்பிரச்சினைகள் தொடர்பாக பலமுறை இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்கள் நடந்தன. அதேபோன்று இந்திய மீனவர் அமைப்புகளுக்கும் இலங்கை மீனவர்கள் அமைப்புக்களுக்குமிடையேயும் பேச்சுகள் இடம்பெற்றன. அவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்துமே அவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியைத் தொடர வாய்ப்புக்களை நிலை நாட்டும் வகையிலானவையாகவே அமைந்திருந்தமையால் பேச்சுகள் வெற்றி பெறமுடியவில்லை.

இப்படியாக மீண்டும் மீண்டும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்துமீறிய மீன்பிடி தொடர்ந்து கொண்டிருப்பது மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் பெருமளவில் அதிகரித்தும் இடம் பெறுகிறது. கடந்த வருடத்தில் கடலெல்லையை மீறி வந்து மீன்பிடித்த மீனவர்களைப் பருத்தித்துறை மீனவர்கள் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்ததும் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. அது மட்டுமின்றிப் பலமுறை முல்லைத்தீவு, பருத்தித்துறை முனை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்கள் எமது மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக எமது மீனவர்களின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தப் பல வழிகளில் முயன்ற போதும் எதுவுமே வெற்றி பெறவில்லை. எனவே வேறு வழியற்ற நிலையிலேயே முல்லைத்தீவு மீனவர்கள் அத்துமீறும் இந்தியப் படகுகளை மூழ்கடிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் 22ம், 30ம் திகதிகளில் அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் காணொலி மூலம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இன்னொருபுறம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தலைமையில் மீனவர்கள் அமைப்பினர் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

அதையடுத்து முக்கிய இந்திய அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடிய மாவை சேனாதிராஜா தான் அந்த அதிகாரியிடம் இப்பிரச்சினையை நியாயபூர்வமாகத் தீர்த்து வைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு என வலியுறுத்தியுள்ளாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அத்துமீறி இடம் பெறும் இந்திய மீனவர்களின் அடாவடித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டாலும் கூட 15.12.2012 அன்று மீனவர் சங்கங்கள் ஒன்றுதிரண்டு முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய முயற்சிகளால் எவ்வித பலனும் கிட்டாத நிலையிலேயே தற்போதைய நகர்வுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அத்துமீறும் இந்தியப் படகுகளை மூழ்கடிப்பது என்ற முடிவிலிருந்து மீனவர்கள் பின்வாங்கவில்லை.

இப்படியான இழுவைப் படகுகளை மூழ்கடிக்கும் நடவடிக்கைகள் எவ்வளவு ஆபத்துமிக்கவை என்பதை எமது மீனவர்கள் அறியாமலில்லை. இப்படியான நடவடிக்கைகளின்போது இடம் பெறக்கூடிய மோதல்களில் எமது மீனவர்கள் உயிரிழக்கும் துர்ப்பாக்கியமும் ஏற்படக்கூடும்.

அதுமட்டுமன்றி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அல்லது கொல்லப்படும் நிலைமையும் ஏற்படலாம். இவற்றையெல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் இப்படியான ஆபத்தான நடைமுறையில் இறங்கத் தயாராகி விட்டனரென்றால் அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் நிலையிலும் எமது கடல் வளம் அழிவை நோக்கித் தள்ளப்படும் நிலையிலுமே அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய இலங்கை - இந்திய அரசாங்கங்களே பொறுப்புக் கூறவேண்டும்.

இலங்கையின் போர் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த மீன் தேவையில் 40 சதவீதத்துக்கு அதிகமாக வடபகுதி மீனவர்களே வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் முடிவுக்கு வந்த பின்பு கடற்படையினரின் கெடுபிடிகள், தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் வட கடலில் புகுந்து சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் என்பன காரணமாக வடபகுதி கடலுணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி எமது மீனவர்களின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட நி;லையில் மீனவர்களின் ஒரு பகுதியினர் தமது சொந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலை நாடவேண்டிய பரிதாப நிலைமையும் ஏற்பட்டது.

இப்படிப் பல்வேறு முனைகளிலும் பாதிப்புகளை எதிர்கொண்ட எமது மீனவர்கள் இன்று இந்திய மீன்பிடிப் படகுகளின் ஆக்கிரமிப்பால் மேலும் துன்பதுயரங்களை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடபகுதிக் கடல் பல கண்ட மேடைகளைக் கொண்ட கடற்பகுதியாகும். இதில் முல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்பரப்பில் மட்டும் 11 கண்டமேடைகள் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இவையே மீன்கள் இனப் பெருக்கம் செய்வதற்கான உகந்த இடங்களாகும். மேலும் இக்கடற்பகுதிகளெங்கும் பரந்து கிடக்கும் பவளப் பாறைகளில் மீன்களுக்கு உணவாகும் கடற்பாசிகள் உட்படப் பல வகையான கடற்தாவரங்கள் செறிந்து கிடக்கின்றன. அத்துடன் பல அரிய மீன் வகைகளும் இப்பவளப் பாறைகளிடையேதான் வாழ்கின்றன.

இக்கடற் பகுதியில் தடைசெய்யப்பட்ட மடி வலைகள், சுருக்கு வலைகள் என்பன பயன்படுத்தப்படும் போது அவற்றில் பெரிய மீன்களாக வளர்ச்சியடையக் கூடிய மீன் குஞ்சுகளும் மீன் முட்டைகளும் வலைகளில் சிக்கி அழிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பவளப் பாறைகளைச் சுற்றியுள்ள மீன்களின் உணவான கடற்தாவரங்களும் அழிந்து விடுகின்றன. இக்காரணங்களால் மீன் உற்பத்தி குறைவடைவதுடன் காலப்போக்கில் அழிந்து இல்லாமற் போகும் நிலையும் ஏற்படும். பாக்கு நீரிணையின் ஒருபுறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் அரபிக் கடலுடன் தொடர்புடைய இந்து சமுத்திரம் பகுதி மறுபுறமும் அமைந்திருப்பதால் இப்பகுதியின் நீரோட்டங்களின் மிதமான தட்ப வெப்பநிலை மீன் உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளன. எனவே இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீன்கள் பெருமளவில் அள்ளிச் செல்லப்படுவதுடன் எமது கடல் வளம் காலப்போக்கில் முற்றாகவே அழிந்து போய்விடும் ஆபத்தும் உள்ளது.

இந்த நிலை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது மட்டுமின்றி எதிர்காலமே சூனியமாகிவிடும் அபாயமும் ஏற்பட்டு விடும். அதேவேளையில் இது ஒரு தேசிய நட்டம் என்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

எமது நாட்டின் கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடிப்பது, எமது நாட்டில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் சட்ட விரோதமானவையாக இருந்தபோதிலும் இத்தகைய நடவடிக்கைகளைத்தடுத்து நிறுத்த இலங்கை அரசோ, இந்திய அரசோ உரிய நடவடிக்கைககளை எடுக்கவில்லை.

இலங்கையிடம் வலுவான கடற்படையும் 20இற்கு மேற்பட்ட அதிவேக டோறாப் படகுகளும் ஏனைய வசதிகளும் இருந்தும் இந்த இழுவைப் படகுகளின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவில்லை. தினமும் கேரள கஞ்சா, மஞ்சள் கடத்தல் போன்றவற்றைப் பிடிக்கும் கடற்படையினருக்கு இந்தப் படகுகள் மட்டும் கண்ணில் படுவதில்லை. கடத்தல்களின் ஈடுபடும் சிறிய ஒற்றைப் படகுகளைப் பிடிக்கும் இவர்களால் அத்துமீறிப் புகுந்து பல மணி நேரம் கடலில் தங்கித் தொழில் செய்யும் இந்த "றோலர்"களை ஏன் பிடிக்கமுடியவில்லை என்பது ஒரு பெரும் கேள்வியாகும். ஆனால் தற்சமயம் மீனவர்கள் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய அன்று நெடுந்தீவிலும் பருத்தித்துறைக் கடற்பகுதிகளில் சில இந்திய மீனவர்களைக் கைது செய்ததுடன் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு காலமும் இத்தகைய நடவடிக்கை எடுக்காமல் தற்சமயம் மேற்கொள்வதும் மீனவர்களின் ஆவேசத்தைத் தணிக்கும் முறையிலான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே கருதப்படவேண்டியுள்ளது.

அதேவேளையில் இந்திய கரையோரக் காவல் படை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பல கடல் மைல் தூரத்தைக் கண்காணிக்குமளவுக்கு வலிமையும் வசதியும் கொண்டதாகும்.

அவர்களும் தங்கள் நாட்டுப் படகுகள் எல்லை தாண்டிச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதில்லை. இந்த இரு தரப்பினரும் அசமந்தப் போக்கின் பின்னால் இலங்கை - இந்திய அரசுகளின் ஒரு நயவஞ்சக அரசியல் பின்னிக் கிடப்பது தான் முக்கிய விடயமாகும்.

இலங்கையில் போர் காலத்திலும் சரி, போர் முடிவடைந்த பின்பும் சரி பல்வேறு விதமான இன ஒடுக்குமுறைக் கொடுமைகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்தியத் தமிழகமே கொதித்தெழும் பல போராட்டங்கள், ஹர்த்தால்கள் என்பனவற்றை நடத்துவதுண்டு. இந்திய தமிழ் மக்களுக்கும் எமக்குமிடையேயுள்ள இரத்த உறவு காரணமாக எமக்கு இன்னல் நேரும் போதெல்லாம் துடித்தெழுந்து தமிழக மக்கள் எமக்கு ஆதரவுக் கரம் தருவார்கள்.

இலங்கைத் தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி இரு தரப்பினருக்குமிடையேயுள்ள உறவை மழுங்கடிக்கும் வஞ்சக நோக்கம் இரு அரசுகளுக்கும் உண்டு. எனவே இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் இழுத்தடிக்கும் போக்கைக் கைக்கொண்டு வருகின்றன.

இதைச் சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தாலேயே இப்பிரச்சினைக்கு ஒரு நியாயபூர்வமான நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் எமது மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒரு அமைச்சர் என்ற வகையில் அவரின் நடவடிக்கைகளும் ஒரு கண்துடைப்பாக அமையக் கூடும். எனவே எமது மீனவ சமூகம் மேலும் வலிமையான போராட்டங்களை நடத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலமே அவரின் முயற்சிகளையும் பயனுள்ளதாக ஆக்கமுடியும்.

அருவி இணைத்திற்காக - நா.யோகேந்திரநாதன்.

22.12.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நெடுந்தீவு, பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE