Tuesday 7th of May 2024 07:41:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
மைத்திரிபாலவை வைத்து கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் - பிள்ளையான்!

மைத்திரிபாலவை வைத்து கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் - பிள்ளையான்!


எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு கும்புறுமூலை பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள் அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம்.

இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக் காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி ஜெ.லோபன்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கும்புறுமூலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE