Thursday 25th of April 2024 09:58:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலை தொடர்பான ஓர் பார்வை!

கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலை தொடர்பான ஓர் பார்வை!


பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதன் ஊடாக வேலைவாய்ப்புக்கள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் இன்றும் இயங்கா நிலையிலேயே காணப்படுகின்றன.

அவற்றை இயங்க வைப்பதன் ஊடாக பல்வேறு நன்மைகள் ஏற்படும் என பல ஆண்டுகளாக கூறப்பட்டுவந்த போதிலும் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள இயங்க வைப்பது தொடர்பில் தற்போது மீள பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ள குறித்த தொழிற்சாலை தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம்.

திரவ வடிவிலான கொஸ்டிக் சோடாவை (Caustic soda) பிரதான உற்பத்தியாகக் கொண்டியங்கவிருக்கின்ற இந்தத் தொழிற்சாலை மூலம், மேலதிக விளைபொருட்களாக குளோரின், ஐதரோகுளோரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைட் என்பனவும் உப உற்பத்திகளாக மேற்கொள்ளப்படும் என்று கெமிக்கல் கம்பனி பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இவை இதர பல உற்பத்தி முயற்சிகளான, சோப், சுத்திகரிப்பு திரவங்கள், துணி சுத்திகரிப்பு மற்றும் நிறமூட்டல், உணவு பதனிடல் என பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியமான மூலப்பொருள்களாக அமையும் என்று குறிப்பிட்ட அவர்கள், இதன்மூலம் மேலும் பல கைத்தொழில்துறைகள் பயனடையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் உற்பத்திசெய்யக்கூடிய இந்த இரசாயன மூலப்பொருள்களின் தேவை தற்போது இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுகிறது.

இரசாயன தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீள ஆரம்பித்தால், இந்த மூலப்பொருள்களின் தேவையில் பெரும் பகுதி உள்ளூரிலேயே, குறைந்த செலவில் பூர்த்திசெய்யப்படும் எனவும் நம்பப்படுகின்றது.

2600 மில்லியின் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைச் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஓகஸ்ட் முதல் இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் என்று கூறும் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தினர், இந்தத் தொழிற்சாலை உற்பத்திகள் மூலம் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சுமார் 200 ஏக்கர் அளவிலான பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணியில் ஒரு பகுதியிலேயே முதற்கட்டத் தொழிற்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், தொழிற்சாலைச் சுற்றுவட்டாரத்தில் இரசாயன உற்பத்திகளுடன் தொடர்புடைய புதிய கைத்தொழில் முயற்சிகளை தனியார்துறையினர் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பரந்தன் கெமிக்கல் கம்பனியினர் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் இந்தப் பகுதி ஒரு இரசாயன கைத்தொழில் பேட்டையாக வளர்ச்சியடையும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது,

இது இரசாயன தொழிற்சாலை என்பதால் சூழலுக்கு ஏற்படக்கூடிய மாசுக்கள் தொடர்பாக மக்களிற்கு இருக்கும் சந்தேகங்கள் தொடர்பில் இவ்வாறு நம்பிக்கையூட்டுகின்றனர்.

தொழிற்சாலையின் செயற்பாட்டால் எழக்கூடிய ஒலி மாசு தொழிற்சாலை வட்டாரத்துக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்றும், இதர திண்ம, திரவ மற்றும் வாயு வடிவ கழிவுகள் மீள்சுழற்சிப்படுத்தல் மூலமோ அல்லது பாதுகாப்பான கழிவகற்றல் பொறிமுறை மூலமோ சுற்றாடல் பாதுகாப்புத்துறையினரின் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

1956-ஆம் ஆண்டு அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை அதன் முழுச் செயற்பாட்டுக் காலத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்களையும் வழங்கியிருந்தது.

1980களின் பிற்பகுதியில் ஆயுத மோதல்கள் காரணமாக செயலிழந்த அதன் தொழிற்பாடுகள் பின்னர் கொழும்புக்கு இடமாற்றப்பட்டது. தற்போது தொழிற்சாலை முற்றுமுழுதாக ஆயுத மோதல்களால் அழிவடைந்துள்ள நிலையில் அது மீளச் செயற்படுத்தும் முயற்சி கைத்தொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தேசிய வருமானம் அதிகரிக்கும் என்பதுடன், இறக்குமதியை கட்டுப்படுத்தி பலருக்க வேலைவாய்ப்புக்களையும் வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE