Friday 26th of April 2024 04:27:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு தமிழ் மீனவர்களை  ஒரு விதமாகவும் தென்னிலங்கை மீனவர்களை ஒரு விதமாகவும்  அரசு பார்க்கின்றது!

வடக்கு தமிழ் மீனவர்களை ஒரு விதமாகவும் தென்னிலங்கை மீனவர்களை ஒரு விதமாகவும் அரசு பார்க்கின்றது!


தென்னிலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவர்களின் விடுதலைக்கு அரசு துரித முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் வடக்கு மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யயப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில் அவர்களின் விடுதலைக்கு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(20) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-வட மாகாண மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியும் உள்ளோம். அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்று வரை எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டதே தவிர எவ்வித உதவிகளும் இது வரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் கைது செய்யப்படுகின்ற எமது வடக்கு மீனவர்களில் விடுதலை தாமதிக்கப்படுகின்றது.

ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவர்களின் விடுதலைக்கு அரசு துரித முயற்சிகளை மேற்கொண்டு அவர்களின் விடுதலைக்கு அக்கறை காட்டியுள்ளனர்.

குறிப்பாக மியன்மாரில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் அரசு மட்டத்தில் பேசப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.

ஆனால் வட பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக சிறைகளில் வாடுகின்றனர்.

குறிப்பாக தலைமன்னார் பகுதியை சேர்ந்த கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஆனால் அவர்களை நாட்டிற்கு அழைத்து வர இலங்கை அரசு இது வரை கூடிய கவனம் செலுத்தவில்லை.அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருவதாக இருந்தால் அந்த நாட்டு சட்டத்திற்கு அமைவாக உரிய முறையில் உரிய ஆவணங்களுடன் அவர்கள் இலங்கைக்கு வருகை தர முடியும்.

ஆனால் இலங்கையில் கைது செய்யப்படுகின்ற இந்திய மீனவர்களை கடல் மார்க்கமாக இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக பாரப்படுத்தப்பட்டு, அவர்கள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இலங்கை தமிழ் மீனவர்களை ஒரு விதமாகவும் தென்னிலங்கை மீனவர்களை ஒரு விதமாகவும் இலங்கை அரசு பார்க்கின்றது. கடந்த காலங்களில் கடற்தொழில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளிலும் குறித்த பாரபட்சத்தை பார்க்கின்றோம்.

குறிப்பாக இந்திய மீனவர்களை எமது கடற்பரப்பில் தொழில் செய்ய அனுமதிப்பதற்கான ஆலோசனையை மேற்கொள்ளுவதாக அறிவித்திருந்தார். இதற்கு எதிராக வட பகுதி மீனவர்கள் தமது ஆழ்ந்த எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளதா?அல்லது சிந்தனை மாற்றப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. அரச உயர் மட்டம் இவ்விடையம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு, எம்முடன் கலந்துரையாடி உள்ளனர்.

குறிப்பாக இந்திய மீனவர்களின் வருகையை அவர்களும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர் காலத்தில் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வதை முற்று முழுதாக எந்த மீனவர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

புயல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதி மீனவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான சூழ் நிலையில் அரசு இந்த மீனவர்களுக்கு என்ன உதவி செய்யப் போகின்றது.

-இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் எமது மீனவர்களின் வலைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு என்ன இழப்பீடுகளை வழங்க போகின்றார்கள்.

-இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் இந்த அரசு வட பகுதி மீனவர்கள் மீது அக்கரை கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமன்னார்,பேசாலை , சிறுத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பலர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.

-அவர்கள் இன்று வரை விடுவிக்கப்படவும் இல்லை.விடுவிக்கப்பட்ட சில மீனவர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர்.

தற்போது மன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களை கடலில் வைத்து கடற்படையினர் தாக்கி துன்புறுத்திய சம்பவங்கள் உள்ளது.இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும் கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் தொடர்பாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE