Friday 26th of April 2024 02:57:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்றும் பல் தேசிய நிறுவனங்களும்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையில் கொரோனா தொற்றும் பல் தேசிய நிறுவனங்களும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த மே மாதம் 17ம் திகதி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 281 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகப் புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

அவ்வறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருந்தது.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்தார். அதனையடுத்து தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நகர்வுப் பத்திரத்தின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டதுடன் சுகாதார முறைகளுக்கு உட்பட்டு நினைவேந்தலை நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்தீர்ப்பு வெளிவந்து சில மணிநேரத்தில் இராணுவத் தளபதியின் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாகச் சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. ஆனால் அடுத்த நாள் வடமாகாணச் சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்கள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 60 இற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அது மட்டுமின்றி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பெருந்தொகையான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் சுகாதாரப் பிரிவினர் திணறிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இனம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபாடான தகவல்கள் வெளியான போதிலும் அங்கு கொரோனா தொற்று ஆபத்தான அளவில் பரவியுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

அதேவேளையில் கிளிநொச்சியில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலைகளிலும் கூடத்தொற்றாளர்கள் இனம் காணப்பட்டபோதிலும் பணியாளர்களிடம் கட்டாயம் வேலைக்கு வரவேண்டுமென வலியுறுத்தியதாகவும் அப்படி வேலைக்கு வரத்தவறினால் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்மின்றி அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணின் கணவர் தனது பிள்ளைகளுடன் தனது மனைவியை வெளியே விடும்படி கோரி தொழிற்சாலை வாசலில் போராட்டம் நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மேலும் பாணந்துறை ஆடைத் தொழிற்சாலையில் 400 இற்கு மேற்பட்டோரும் துல்கிரிய தொழிற்சாலையிலும் பெருமளவானோரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் அதுபற்றி விசாரணைகள் இடம் பெறுவதாகவும் தெரியவருகிறது.

நாடு இரண்டு நாட்கள் 4 நாட்கள் என அடுத்தடுத்து முடக்கப்படும் நிலையில் இந்த ஆடைத் தொழிற்சாலைகள் மட்டும் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்பதைக் கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது. சில தொழிற்சாலைகளில் 6 மணி தொடக்கம் 2 மணி வரை பின்பு 2 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையும் என இரு பகுதிகளாக (சிவ்ற்) வேலைகள் இடம்பெறுகின்றன. அதாவது ஒரு நாளிலேயே இருமடங்கு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் மிகக் குறைந்த சம்பளத்திலேயே வேலை வாங்கப்படுகின்றனர்.

இலங்கையில் இத்தொழிற்சாலைகளில் தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளம் டொலர் பெறுமதியில் பார்க்கும்போது இந்தியாவில் என்றால் மூன்று மடங்கு வழங்கப்பட வேண்டுமெனவும் சிங்கப்பூரிலென்றால் 10 மடங்கு வழங்கப்படவேண்டுமெனவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இலங்கையில் டொலரின் பெறுமதி மோசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மிகக் குறைந்தளவு மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்பனவே நிறுவனங்களுக்கு ஏற்படும். எனவே இப்பல்தேசிய நிறுவனங்கள் எமது மக்களின் உயிர்களைப் பற்றிய அக்கறையின்றி, குறுகிய காலத்திலேயே கூடிய லாபத்தைக் கொள்ளையிடத் தயங்கப் போவதில்லை.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையிலேயே ஆரம்பமாகி பெலியகொடைக்கு பரவி மினுவாங்கொட, பேலிகொட என கொத்தணிகளை உருவாக்கியது. இப்போது புத்தாண்டுக் கொத்தணியாக 3 வது அலை நாடு முழுவதும் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் இன்று கொரோனா கொத்தணி என்ற எல்லையைக் கடந்து சமூகத் தொற்றாக வியாபித்து விட்டது. கொரோனா ஒருவர் தான் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறியாத நிலையில் நோயை ஒருவருக்கொருவர் தங்களையறியாமலே பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.

அவ்வகையில் இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு புதிதாக 3,000 பேர் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். அதே ஒரு நாளில் 30இற்கு மேற்பட்டோர் நோய்த் தொற்றுக் காரணமாக மரணமடைகின்றனர்.

இந்த நிலையில் அரச மருத்துவர் சங்கத் தலைவர் உடனடியாகப் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டுமெனவும் இல்லையேல் நாடு பெரும் அழிவை எதிர்நோக்க வேண்டி வருமெனவும் எச்சரித்துள்ளார். யாழ்.போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் கொரோனா கிருமிகள் ஒருவரிடமிருந்து 500 பேருக்குத் தொற்றும் வாய்ப்புள்ளதெனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இலங்கையில் இதேநிலை நீடித்தால் செப்டெம்பரில் உயிரிழந்தோர் தொகை 20,000 ஆக அதிகரிக்குமெனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்துகளின் அறிகுறியாகச் சுகாதாரப் பிரிவினர் அறிவதற்கு முன்பே வீடுகளிலும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும்போதும் மரணங்கள் இடம்பெற்றதாகவும், பின்பு அவை கொரோனாவால் ஏற்பட்டவையெனக் கண்டறியப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. தருமபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் பிரேத பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனாப் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரப் பிரிவினர், கொரோனா தடுப்புச் செயலணி ஆகிய தரப்புகளின் பார்வைக்கு அப்பாலும் கொரோனா பரவலடையும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான பேராபத்தான ஒரு சூழலிலும் பல்தேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஒரு ஆடைத் தொழிற்சாலை என்றால் அதில் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நிறுவனங்களின் பேரூந்துகளில் ஒவ்வொரு நாளும் தங்கள் வீடுகளுக்குச் சென்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு உட்படும் ஒரு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் நோய் அறிகுறிகள் வெளிப்படாத நிலையில் தன் குடும்பத்தாருடன் பழகுகிறார்கள். அக்குடும்பத்தினர் அயல் வீடுகளுடன் பழகுவார்கள். எனவே அந்த ஒரு பணியாளரில் தொடங்கி ஒரு கொரோனா நோய்த் தொற்று வலைப்பின்னல் உருவாகும் வாய்ப்புண்டு.

எனவே பல்தேசிய நிறுவனங்களைத் திருப்தி செய்யும் வகையில் அவர்களின் லாபவேட்டைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கொரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில் மக்களின் பாதுகாப்பு தொடர்பான அக்கறையை இரண்டாம் பட்சமாக்கி ஆடைத் தொழிற்சாலைகளை இயங்க அனுமதிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

அதேவேளையில் எதிர்வரும் ஜூன் 7ம் நாள்வரை முழு நாடுமே பயணத் தடைக்கு உட்பட்டுள்ளதாக கடந்த 24ம் திகதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது ஒரு ஆரோக்கியமான முடிவாகும். இம்முடிவு காலம் பிந்தி எடுக்கப்பட்டாலும் இதன் மூலம் அநேகர் ஒரே இடத்தில் கூடுவது தடுக்கப்பட்டமை ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

இந்நடவடிக்கையால் நாம் பல அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் எங்கள் பாதுகாப்புக்காகவும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அருவி இணையத்திற்காக - நா.யோகேந்திரநாதன்

01.06.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE