Friday 26th of April 2024 04:21:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஈழத்தின் மூத்த இசைநாடகக் கலைஞர் செல்லையா இரத்தினகுமார் மறைந்தார்!

ஈழத்தின் மூத்த இசைநாடகக் கலைஞர் செல்லையா இரத்தினகுமார் மறைந்தார்!


ஈழத்தின் மூத்த இசை நாடகக் கலைஞர் இசைநாடக பூபதி செல்லையா இரத்தினகுமார் இன்று கிளிநொச்சியில் காலமானார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளையை பிறப்பிடமாகக் கொண்ட இசைநாடக பூபதி இரத்தினகுமார் தன்னுடைய 08 ஆவது வயது தொடக்கம் இறுதி வரையில் அரிச்சந்திரா உட்பட்ட ஆயிரக்கணக்கான மேடைகளில் தோன்றி நடித்து புகழ்பெற்று விளங்கிவந்திருக்கின்றார்.

21.10.2012 அன்று யாழ்ப்பாணத்தின் தினசரிப் பத்திரிகை ஒன்றில் இசைநாடக பூபதி செ.இரத்தினகுமார் தொடர்பில் வெளிவந்திருந்த கட்டுரையை வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம் - எழுத்தாக்கம் வசாவிளான் தவமைந்தன்

இசைநாடகக் கலையின் முன்னோடிகளுள் ஒருவராக ஈழத்தில் மதிக்கப்படுபவர் நாடகதிலகம் கரவெட்டி கே.வி.நற்குணம். காங்கேசன்துறை வசந்தகான சபாவின் முக்கிய நடிகராக இருந்து நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் ஆயிரக்கணக்கான மேடைகள் கண்ட ஆற்றுகையாளராக மட்டுமல்லாமல் சிறந்த இசைநாடக நெறியாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரால் உருவாக்கப்பட்ட பலர் தற்காலத்தில் சிறந்த நடிகர்களாக விளங்கி வருகின்றனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்டவர்களுள் முதன்மையான ஒருவராகவும் சகலவிதமான இசைநாடகங்களிலும் முக்கிய வேடங்களில் சிறப்புடன் நடித்துவருகின்ற பட்டறிவு கொண்ட கலைஞனாகவும் சிறு வயதிலேயே நடிகமணியுடன் நடித்துப் பாராட்டப்பட்ட நடிகராகவும் தற்காலத்தில் இசைநாடகங்களை நெறிப்படுத்தி வருகின்ற சிறந்த நெறியாளராகவும் கடந்த நாற்பது ஆண்டுகளிற்கும் மேலாகக் கலைப்பணியாற்றி வருபவர் கலைத்தென்றல் செ.இரத்தினகுமார்.

காலம் சென்ற செல்லையா - இராசமணி தம்பதியரின் மகனாக 10.12.1954இல் பளையில் இவர் பிறந்தார். பளை மத்திய கல்லூரியில் எஸ்.எஸ்.சி வரை கல்வி கற்ற இவர் இயற்கையாகவே சுருதி, இலயம் தவறாமல் பாடும் திறன் கொண்டவராக விளங்கியதுடன் சங்கீதபூசணம் ஏ.கே.ஏரம்பமூர்த்தியிடம் குரலிசையை வரன் முறையாகக் கற்றுக்கொண்டார். எனினும் தந்தை, பேரன் ஆகியோர் இசைநாடகக் கலைஞர்களாக அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்தமையால் இவரது நாட்டமும் நாடகத்துறை சார்ந்ததாகவே இருந்து வந்தது.

இசைநாடக நடிகராக மட்டுமல்லாமல் ஹார்மோனியக் கலைஞராகவும் அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்த இவரது தந்தையார் வசந்தகான சபாவின் இசைநாடகங்களிற்கு ஹார்மோனியம் வாசித்து வந்த காலத்தில் தனது எட்டாவது வயதிலேயே அச்சபாவின் அரிச்சந்திரா மயானகாண்டத்தில் லோகிதாசனாக நடித்து வந்தார். இசைநாடகப் பரம்பரையில் தோன்றிய இவர் தந்தையாரின் வழிநடத்தலில் வேறு பல இசைநாடகங்களிலும் சிறு பாத்திரங்கள் ஏற்று நடித்து மிக விரைவாக வளர்ச்சியடைந்து தொழில் முறைக் கலையாக நாடகத்தைத் தெரிவுசெய்யும் கலைஞராகத் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

இளைஞனாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கே.வி.நற்குணத்தின் நட்பு இவரை முழுமையான இசைநாடகக் கலைஞன் ஆக்கியது எனலாம். ஒரு பாத்திரத்தை, எந்தெந்த நடிகன் எவ்வாறு நடிப்பான் என்பதையும் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அட்சரம் பிசகாமல் பொறுமையுடனும் அன்புடனும் நடித்துக் காட்டும் இயல்புடைய நற்குணத்தின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட சகல இசைநாடகங்களிலும் நடித்து வந்ததுடன் நடிக கலாமணி வ.செல்வரத்தினம், கலைவேந்தன் ம.தைரியநாதன், கலாவினோதன் சின்னமணி, வி.உருத்திராபதி, வி.என்.செல்வராசா போன்ற பேராற்றல் கொண்ட இசைநாடக நடிகர்களுடன் இணைந்து ஆண்வேடங்களில் மட்டுமல்லாமல் பெண்வேடங்களிலும் மிகச் சிறப்பாhக நடித்து வந்தார்.

சந்திரமதி, சாவித்திரி, மல்லிகா போன்ற பெண் பாத்திரங்களிலும் சத்தியவான், அரிச்சந்திரன், புலேந்திரன், நரேந்திரன், சத்தியகீர்த்தி, நந்தன், கோவலன், நல்லண்ணன் போன்ற அனைத்துப் பாத்திரங்களிலும் இன்று வரை நடித்துவருகின்ற இவர் சம்பூர்ண அரிச்சந்திராவில் முன் அரிச்சந்திரனாக நடிப்பதில் தனித்துவமானதொரு பாணியைப் பின்பற்றிவருகின்ற ஒருவராகவும் தற்கால இளம் நடிகர்களிற்கு எடுத்துக்காட்டான சிறந்த நடிகராகவும் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிதானமாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இசைநாடகப் பாடல்களைத் தெளிவாகவும் இனிமையாகவும் பாடியவாறு நடிக்கும் இயல்புடைய இவர் கே.வி.நற்குணத்தின் பெயர் சொல்லும் மாணவராகவும் அந்தக் காலத்தில் அவரால் கையாளப்பட்டு வந்த அரங்கியல் நுட்பங்களைப் பின்பற்றி வருகின்ற நடிகராகவும் ஈழத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற அனைத்து இசைநாடகங்களின் பாடல்கள் வசனங்கள் போன்ற அனைத்தையும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.

வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நாடக ஒலி, ஒளிப்பதிவுகளை வழங்கியிருக்கும் இவர் பாடசாலை மாணவர்களிற்கு இசைநாடகங்களை நெறிப்படுத்துவதில் வல்லவராகவும் நலிவடைந்து வருகின்ற இசைநாடகக் கலையை ஏற்றமுறச் செய்யவேண்டும் என்னும் நற்சிந்தனையுடன் ஓய்வின்றிச் செயற்பட்டு வருகின்ற ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.

'கலை என்பது தெய்வீகமானது, தூய்மையானது. ஆகையால் கலைஞனும் புனிதமானவனே. ஆனால் கலையை முழுநேரத் தொழிலாகக் கொண்ட எவரும் இலட்சாதிபதிகளாகவோ கோடீஸ்வரர்களாகவோ இருந்ததில்லை. கலைத்திறனும் புகழுமே அவர்களது செல்வம். அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமது முழுநேரத் தொழிலையே இலவசமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இறைதொண்டாகவும் மனத்திருப்திக்காகவும் கலைத்துறையில் ஈடுபடுகின்ற எவராலும் பெரிய அளவில் பொருளீட்ட முடிவதில்லை எனலாம்.

மாலை ஏழுமணியிலிருந்து மறுநாள் காலை ஆறுமணிவரை நாடகம் நடிக்கும் எமக்கு போதியளவு ஊதியம் கிடைப்பதில்லை என்பது உண்மையே. நாமும் பெருந்தொகைப் பணத்தை எதிர்பார்த்து அங்கே செல்வதில்லை. எனினும் கிடைக்கின்ற பணத்தோடு, நாடகம் மிக நன்றாக இருந்தது என்னும் மன நிறைவோடு வீடு திரும்பும் இயல்பு எனக்கு மட்டுமல்ல, என்போன்ற நடிகர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவருக்குமே இருக்கின்றது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.

தொழிலதிபர்களாகவோ நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்களாகவோ குளிரூட்டப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயணிக்கின்ற முதலாளிகளாகவோ மாறிவிடும் அளவிற்குக் கலைத்தொழில் கலைஞனிற்கு இடமளிப்பதில்லை. ஆனால் தற்காலத்தில் மருத்துவம் முதலான மக்கள் சேவைக்குரிய துறைகளில் ஈடுபடுவோர் தமது புனிதமான தொழிலை வியாபாரமாக மாற்றி எம் கண்முன்னேயே பெரும் செல்வந்தர்களாக இருப்பது மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டை ஏளனம் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

நாடகத்துறை மட்டுமல்ல எமது ஏனைய கலைத்துறைகளும் அவற்றின் கலைஞர்களும் சரியான முறையில் உயர் அதிகாரிகளாலோ கல்வியாளர்களாலோ மதிப்பளிக்கப்படுவதில்லை. ஆலயங்களிலும் கலைநிகழ்வுகள் அருகி வருகின்றமை யாவரும் அறிந்ததே. எனவே கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது கலைகளை வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் தன்மானமுள்ள கலைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்' எனத் தனது ஆழமான கருத்துக்களை இவர் உறுதியுடன் கூறுகின்றார்.

- வசாவிளான் தவமைந்தன் -

2019 மே 29 அன்று மாவிட்டபுரம் கிளானை அருள்மிகு வைரவர் ஆலயத்தில் 26.05.2019 அன்று நடைபெற்ற சம்பூர்ண அரிச்சந்திரா இசை நாடகத்தின் சில காட்சிகள்


Category: கட்டுரைகள், கலை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE