Monday 18th of October 2021 12:38:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
சீன மேற்குலகப் பனிப்போரின் களமாக இலங்கை! - நா.யோகேந்திரநாதன்!

சீன மேற்குலகப் பனிப்போரின் களமாக இலங்கை! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் ஆரம்பிக்கப்படவுள்ள “சிலன்டிவா“ பங்குடமை முதலீட்டுப் பொருளாதாரத் திட்டத்திற்கென கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல காணிகளை விற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதைத் தடுத்து நிறுத்தும்படியும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படியாக அங்கு அமைக்கப்படும் நிறுவனங்களின் 52 வீதத்துக்கு அதிகமான பங்குகள் இலங்கையர்களுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ சொந்தமாக இல்லாவிட்டால் அது இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக அமையாதெனவும் இலங்கைக் கணக்காளர் திணைக்களத்தில் கண்காணிப்புக்குக் கீழ் கட்டுப்படாதெனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு கோல்பேஸில் அமைந்திருந்த இலங்கை தரைப்படையின் தலைமையகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அந்த இடம் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு அங்கு “சிங்கறிலா“ உல்லாச விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே கொழும்பு துறைமுக நகரத்தில் அமையவுள்ள நிறுவனங்களும் முழுக்க முழுக்க அதற்கான ஆணைக்குழுவினாலேயே நிர்வகிக்கப்படும். அந்த நிறுவனங்கள் மத்திய வங்கியினதோ கணக்காய்வாளர் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளோ அதாவது நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்குள்ளோ உட்படாது. அங்கு இலங்கையர்கள் சொந்தமாக முதலீடு செய்யமுடியாது. அப்படி முதலீடு செய்வதானால் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்காளிகளாகவே இணையமுடியும். அது மட்டுமின்றி ஆணைக்குழு உறுப்பினர்களை இலங்கை நீதிமன்றங்களின் நிதி விசாரணைக்கு உட்படுத்த முடியாது.

இத்திட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

இப்படியான ஒரு நிலையில் அடுத்த கட்டமாகக் கொழும்பின் சில முக்கிய பகுதிகள் “சிலன்டிவா“ பங்குடமை முதலீட்டுப் பொருளாதார திட்டத்திற்காக விற்பனை செய்யப்படவுள்ளன.

கொழும்பு விமானப் படைத் தலைமையகம், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம், பொலிஸ் விளையாட்டு மைதானம், பொலிஸ் விடுதித் தொகுதி, விமானப் படை முகாம், அதன் விளையாட்டு மைதானம், கறுவாக்காடு பேர்ச் சைட், கொழும்பு எம்.டி.யு. சைடெக்ஸ் ஒப்பரேஷன் சென்றர், இராணுவப் பொறியியல் ரெஜிமண்ட் தொலை தொடர்பு உபகரணங்கள் தலைமையகம் என்பனவும் மேலும் கிராண்ட் ஓரியண்டல் கட்டிடத்தொகுதி, கபூர் கட்டிடம், வெளிவிவகார அமைச்சுக் கட்டிடம், பொலிஸ் தலைமையகம், ஹில்டன் ஹோட்டல், ஹயாத் ஹோட்டல் என்பனவும் மேற்படி திட்டத்திற்கென விற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இக்காணிகளை சைனா கொன்ஸ்ரக்சன் அன்ட் கொம்யூனிகேஷன் கொம்பனி என்ற சீன நிறுவனம் வாங்க முன்வந்த போதிலும் அது அமெரிக்காவால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்றபடியால் அதன் இன்னொரு நிறுவனமான செக் போட்சிற்றி கம்பனி என்ற நிறுவனம் வாங்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அதேவேளையில் தெற்கு அதிவேக வீதியையும் கட்டுநாயக்க அதிவேக வீதியையும் இணைக்கும் விதத்தில் தூண்களுக்கு மேலான அதிவேக வீதியொன்று அமைக்கப்படவுள்ளது. 3 வருடங்களில் அமைத்து முடிக்கப்படவுள்ள இந்த வீதி சீனாவின் இஞ்சினியரிங்க் அன்ட் கொன்ஸ்ரக்சன் கோப்பரேஷன் என்ற நிறுவனத்தினாலேயே அமைக்கப்படுகிறது. இதன் செலவினங்கள் முழுவதையும் அந்த நிறுவனமே பொறுப்பேற்கும். அதேவேளையில் 18 வருடங்களுக்கு அதன் உரிமையும் அந்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. அதில் பயணிக்கும் வாகனங்களின் கட்டணம் அறவிடுதல், பராமரிப்பு என்பன 18 வருடங்களுக்கு அந்த நிறுவனமே மேற்கொண்டு பின்பு அரசாங்கத்திடம் கையளிக்கும்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இலங்கை முற்று முழுதாகச் சீனமயப்பட்டு வருகிறதா என்ற எண்ணம் எவருக்காவது தோன்றினால் ஆச்சரியப்பட்டு விடமுடியாது.

ஆனால் அதில் முழுமையான உண்மை கிடையாது.

ஏனெனில் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள், இந்தியா என்பன இலங்கையில் வலுவான முறையில் கால்பதித்துள்ளன.

இலங்கைப் பொருளாதாரத்தில் 30 வீதத்துக்கு மேற்பட்ட ஏற்றுமதி வருமானத்தை வழங்கும் 200 இற்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனங்களுக்கு உரிமையானவை. இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தில் ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பங்கை குறைத்து மதிப்பிட்டுவிடமுயாது. கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் பெரும் வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இன்னொருபுறம் சீனாவால் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா உட்படப் பல நாடுகள் முதலீடு செய்யப் போட்டியிடுகின்றன. ஐரோப்பாவின் வலிமையான சந்தையாகக் கொழும்பு துறைமுக நகரம் மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவின் பல்தேசிய நிறுவனமான ரோத்சைட் குழுமத்தின் முக்கிய பங்காளியான தோனியல் ரோத்ஸ்சைல்ட் கொழும்பு வந்து துறைமுக நகரத்தைப் பார்வையிட்டதுடன் இலங்கையின் முதலீட்டுச் சபைத் தலைவர் சஞ்சயா மொஹட்பாலா, அதன் இயக்குனர் ஜெனரல் பசன் வணிகசேகர ஆகியோருடன் பேச்சுகளை நடத்தியுள்ளார். அதேவேளையில் ரஷ்யப் பெரும் தொழிலதிபரான ஆண்ரிமெல்மெல்னிச் சென்சோ கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து போட் சிற்றியைப் பார்வையிட்டதுடன் முதலீட்டு சபையினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதேவேளை சுவிட்சர்லாந்தின் உர நிறுவனமான யூரோ சொம், ரஷ்ய நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான “சுக்“ நிறுவனம் என்பனவும் போர்ட் சிற்றியில் முதலீடு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

எவ்வளவுதான் இலங்கை அரசாங்கம் சீன தேசத்துக்கு முதன்மை கொடுக்க விரும்பினாலும் சர்வதேச நிலைமைகளும் மேற்கு நாடுகளின் காய் நகர்த்தல்களும் அவற்றுக்கும் இடம் கொடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவையை உருவாக்கியுள்ளன.

எனவே இலங்கை மேற்கு நாடுகளும், சீனாவும் நேரடியாக மோதிக் கொள்ளும் பனிப்போரின் ஒரு களமாக உருவாகி வருவதை நாம் அவதானிக்கமுடியும்.

ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்து சமுத்திர மேலாதிக்கத்தைக் கையெடுக்க வகுத்த இந்தோ –பசிபிக் ஒத்துழைப்பு ஒப்பந்தம், சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் என ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் வல்லாதிக்கப் போட்டியில் இரு தரப்புகளுக்குமே இலங்கையின் தேவை முக்கியமானது.

எனவே இரு தரப்பினரும் இலங்கையில் வலுவாகக் கால் பதிக்க முயல்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

ஒருபுறம் சீனா நீண்ட காலக் கடன்களை வழங்குவதன் மூலமும் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பங்களிப்பு வழங்குவதன் மூலமும் இலங்கையைத் தனக்கு நெருக்கமாகவே வைத்துள்ளது. மேற்கு நாடுகள் முதலீடுகளை மேற்கொண்டும் நிதி உதவிகளை வழங்கியும் இலங்கையைத் தங்களை விட்டுத் தூர விலகி விடாமல் பார்த்துக்கொள்கின்றன. அதேவேளையில் இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களையும் இலங்கையை ஓரளவுக்காவது கட்டுக்குள் வைத்திருக்கும் ஆயுதமாகவும் அவை பயன்படுத்தி வருகின்றன.

அதாவது போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் பிரச்சினைகள், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டம், காணாமற் போனோர் விவகாரம் அனைத்துமே மேற்கு நாடுகளையோ இந்தியாவையோ பொறுத்தவரையில் இப்பனிபோரில் இலங்கையை ஓரளவுக்காவது கட்டுக்குள் வைக்கப் பயன்படுத்தும் ஆயுதங்கள்தான். இங்கு முதன்மைப்படுத்தப்படுவது இப்பனிப்போரில் இலங்கையைக் கையாளும் வழிமுறையேயொழிய இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு அல்ல என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

எப்படியிருப்பினும் சீன – மேற்குலகப் பனிப்போரின் களமாக இலங்கை பயன்படுத்தப்படும்போது அதனால் பாதிக்கப்படுவது சிங்கள மக்கள் மட்டுமல்ல, அதன் எதிர்விளைவுகள் தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்பது கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

அருவி இணையத்திற்காக :- நா.யோகேந்திரநாதன்

13.07.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE