Friday 26th of April 2024 09:24:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
சட்டபூர்வ மணல் அகழ்வுக்கான அனுமதிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்குங்கள் - அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

சட்டபூர்வ மணல் அகழ்வுக்கான அனுமதிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்குங்கள் - அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!


சட்டபூர்வமாக மணல் அகழ்வு செய்வதற்கு விண்ணப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒரு தொகுதியினருக்காவது உடனடியாக அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இந்த விடயம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை(22-07-2021) அவர் நடாத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இந்த இறுக்கமான பணிப்புரையை விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டப் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரி, வனவளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரின் பங்கேற்புடன், சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடாத்திய விசேட கலந்துரையாடலின்போதே, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு அதிகாரிகளைப் பணித்தார்.

சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் உட்பட பல விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டபோதும், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

சட்டபூர்வமாக மணல் அகழ்வுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு காலதாமதமின்றி அனுமதியை வழங்குவதன் மூலம், சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று முன்னதாக இதுதொடர்பில் நடாத்தப்பட்ட கூட்டமொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்திருந்திருந்தார்,

இதன் முன்னேற்ற நிலை குறித்து இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினாவியபோது, சட்டபூர்வமாக மணல் அகழ்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்டச் செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடிக் களப் பயணம் மேற்கொண்டு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படலாம் என்று பரிந்துரைத்தபோதும், உரிய காலத்துக்குள் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு, இடம் அடையாளப்படுத்தப்பட்டு மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று மாவட்டச் செயலாளர் தலைமையிலான சுற்றுச்சூழல் குழுவினரால் தீர்மானிக்கப்பட்ட பின்னரும் மாதக் கணக்கில் உரிய அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், இடைப்பட்ட காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டுவிடுவதாக பிரதேச செயலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அவ்வாறான சில இடங்கள் இனி அனுமதி வழங்கப்பட்டும் மணல் அகழப்பட முடியாத இடங்களாக மாறிவிட்டன என்றும் அவர்கள் இங்கு கவலை வெளியிட்டனர்.

மணல் அகழ்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கு அவசியமான தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்றவற்றின் அனுமதிகளைப் பெற்றுத்தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே புவிச்சரிதவியல் திணைக்களத்தில் காலதாமதம் ஏற்படுவதாக அவர்கள் தரப்பில் நியாயம் கூறப்பட்டது.

இதனையடுத்து, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயகாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா, ஏற்கனவே மாவட்டச் செயலாளர் தலைமையில் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு மணல் அகழ்வுக்கு அனுதிக்கலாம் என்று இனங்காணப்பட்ட பகுதிகளில் அதற்கான அனுமதியை காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு இறுக்கமான பணிப்புரையை விடுத்தார்.

இதுவிடயத்திற்குத் தானே பொறுப்பு நிற்பதாகவும், வீணான காலதாமதங்கள் ஏற்படாமல் உடனடியாக ஒரு தொகுதி விண்ணப்பதாரிகளுக்கேனும் அனுமதியை வழங்கி சட்டபூர்வ மண்ணகழ்வை ஊக்கப்படுத்துமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தார்.

ஒரு வார காலப்பகுதிக்குள் இந்த விடயங்களைச் செய்து முடிக்குமாறும், அடுத்தவாரம் இதுகுறித்து தமக்கு அறியத்தரப்படவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கடுமையாக உத்தரவிட்டார்.

இதன்மூலம், சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த முடிவதுடன், பாவனையாளர்களுக்கும் நியாயமான விலையில் மணல் கிடைக்க வழிசெய்ய முடியும் என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE