Thursday 25th of April 2024 09:49:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பில் தேரரை வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் தேரரை வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!


மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியாக இருந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திய அதேநேரம் குறித்த தேரரை வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவின் கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள பன்சலகல விகாரைக்கு முன்னால் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை அகற்றி தனக்கு காணிகளை வழங்கவேண்டும் என பட்டிப்பளை பிரதேச யெலாளரிடம் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த காணி தொடர்பான உரிமம் பிரதேச செயலாளரிடம் இல்லையெனவும் வனஇலாகாவிடமேயுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறிய நிலையில் தனக்கு காணியை வழங்கவேண்டும் என கூறி கடுமையான வார்த்தைப்பிரயோகங்களுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தினை நடாத்திய தேரர் அதனை தொடர்ந்து பிரதேச செயலாளரின் அறைக்குள் சென்றும் வாயிற்கதவிலிருந்து போராட்டத்தினை முன்னெடுத்தார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமரசம் செய்யமுற்சித்தபோதிலும் அவர் தொடர்ச்சியாக பிரதேச செயலக பிரதேச செயலாளரையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது குறித்த காணியானது தனது அதிகாரத்திற்குள் இல்லையெனவும் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணியொனவும் பிரதேச செயலாளரினால் கடிதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த தேரர் அங்கிருந்து சென்றார்.

இதேநேரம் பிக்குவின் செயற்பாட்டினை கண்டித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக உத்தியோகத்தர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பிளாந்துறை-பட்டிப்பளை பிரதான வீதியை மறித்து உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கிருந்து தேரர் சென்றதும் ஊழியர்களும் தமது போராட்டத்தினை கைவிட்டு கடமைக்கு திரும்பியிருந்தனர். எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செய்யவிடாது தடுத்தமை தொடர்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது பொலிஸார் நடவடிக்கையெடுக்கவேண்டும் என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE