Monday 29th of November 2021 05:11:56 PM GMT

LANGUAGE - TAMIL
.
தடை செய்யப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள்! - நா.யோகேந்திரநாதன்!

தடை செய்யப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள்! - நா.யோகேந்திரநாதன்!


யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அம்மாவட்ட நீதிமன்றங்கள் சில குறிப்பிட்ட பெயர்களைப் பட்டியலிட்டு மாவீரர் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தத் தடை செய்துள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் என்பனவற்றின் அடிப்படையில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து மேற்படி தடைகளை மாவட்ட மேல் நீதிமன்றங்கள் விதித்துள்ளன. கிளிநொச்சியில் 84 பேருக்கும் ஏனைய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட தொகையினருக்கும் மேற்குறிப்பிட்ட தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தடைகள் விதிக்கப்படாதவர்களுக்கும் செல்லுபடியாகுமா இல்லையா என்பது பற்றித் தெளிவாக எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. எப்படியிருப்பினும் பொலிஸார் இத்தடையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து மாவீரர் நிகழ்ச்சிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த மாவீரர்களின் நினைவஞ்சலிக்குத் தடைசெய்யப்பட்ட அதே வேளையில், கடந்த வாரம் அதே போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அனுராதபுரத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வாலும் ஒரு பிரமாண்டமான நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது. அது இலங்கையிலுள்ள மூன்றாவது பெரிய தூபி எனக் கூறப்படுகிறது.

அனுராதபுரத்தில் ஏற்கனவே மொட்டைக் கோபுரம் என அழைக்கப்படும் மாநாம பௌத்தத்திற்குரிய அபயராம விகாரை, பொன்முடி என அழைக்கப்படும் தேரவாத பௌத்தத்துக்குரிய ருவன்வலிசாய என்ற இரு பெரும் தூபிகள் அமைந்துள்ளன. அதே அனுராதபுரத்தில் இராணுவ வீரர்களுக்கான 3 வது பெரிய தூபி அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ருவன் வலிசாய எல்லாளன் என்ற தமிழ் மன்னனைப் போரில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய துட்டகைமுனு என்ற சிங்கள அரசனால் கட்டப்பட்டது. அப்போரில் ஏராளமான தமிழர்களைக் கொன்றதற்காக மன்னன் துட்டகாமினி மிகவும் மனம் வருந்தினானாம். அப்போது புத்த பிக்குகள் “தமிழரைக் கொல்வதில் பாவமில்லை. ஏனெனில் அவர்கள் பைசாசங்களை வழிபடுபவர்கள்” என அரசனுக்கு அறிவுரை வழங்கினார்களாம்.

இந்த துட்டகைமுனுவின் வெற்றிச் சின்னம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே கோத்தபாய ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ் சகோதரர்கள் வெற்றிச் சின்னமும் அதே பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டது.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் மாவீரர்கள் அஞ்சலிகள் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்படும்போது அதேபோரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் தன்னால் கொல்லப்பட்டமைக்காக துட்டகைமுனு வருத்தப்பட்டதுடன் எல்லாளனுக்கு நினைவுத் தூபி அமைத்து அனைவரையும் வணங்கிச் செல்ல வைத்தான். இன்றைய ஆட்சியாளர்கள் மாவீரர்கள் கல்லறைகளையே இடித்தழித்து மட்டுமின்றி மாவீரர்கள் அஞ்சலி செய்யப்படுவதையும் தடுக்கின்றனர்.

அதாவது துட்டகைமுனு மன்னன் தன்னால் தோற்கடிக்கப்பட்ட அரசருக்கு ஒரு பிரமாண்டமான நினைவுத் தூபி அமைத்து அப்பாதையால் செல்லும் அனைவரும் அதற்கு மரியாதை செய்தே செல்லவெண்டுமெனக் கட்டளையிட்டான். அந்நடைமுறை 1958 வரை நீடித்திருந்தது, தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களால் வெற்றி கொள்ளப்பட்டவர்களின் கல்லறைகளை அழித்ததுடன் அவர்களுக்கு அஞ்சலி செய்தவரையும் கடுமையாகத் தடை செய்துள்ளனர்.

இத்தகைய மனிதப் பண்புக்கு எதிரான நடத்தையை மேற்கொள்ளும் அவர்கள் அதற்குச் சொல்லும் காரணமாக மாவீரர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர். தற்போது உயிருடன் இல்லாத அவர்களின் நினைவு நாட்களில் வீதிகளெங்கும் காவல் நிலைகளும், சோதனைச் சாவடிகளும் நிறுவிப் பாதுகாப்பைப் பலப்படுத்தப்படுமளவுக்கு மாவீரர்கள் பயங்கரவாதிகளாகத் தோற்றப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வேளையின் சீன மக்களின் ஒப்பற்ற தலைவர். மாஓ சேதுங் அவர்களின் மேற்கோள் ஒன்றை நினைவு கூர்வது பொருத்தமாயிருக்கும்.

“நாம் எதிரிகளால் படுமோசமானவர்களென்றும் சிறிது கூட நல்ல அம்சங்கள் இல்லாதவர்கள் என்றும் தூற்றப்பட்டோமானால் நாம் மிகவும் சரியான பாதையில் செல்கிறோம் என்பது அர்த்தமாகும். எம்மிடம் சில நல்ல அம்சங்களும் உண்டு என எதிரி கூறுவானால் நாம் எமது பாதையிலிருந்து தவற ஆரம்பித்து விட்டோம் என்பது அர்த்தமாகும். அதேவேளை நாம் முற்றிலும் நல்லவர்களென எதிரியால் போற்றப்படுவோமானால் நாம் எதிரியின் பக்கம் விழுந்து விட்டோம் என்பது அர்த்தமாகும்”.

எனவே இறுதிப் போரை நடத்திப் போராட்டத்தைத் தோற்கடித்து பேரினவாத சக்திகளும், அவர்களின் அரசியல் தலைமைகளும் மாவீரர்களைப் பயங்கரவாதிகள் எனவும், பிரிவினைவாதிகளெனவும் சித்தரிப்பது மாவீரர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு புகழாரமென்றே கருதவேண்டும். அதாவது அது அவர்களின் மக்களுக்கான அர்ப்பண உணர்வுக்கும், தாயகத்தின் மீதான விடுதலை வேட்கைக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

அதேவேளையில் சிலரை நல்லவர்கள் எனவும் சமாதானவாதிகள் எனவும் எதிரிகள் போற்றுகின்றனர். அவர்கள் எமது மக்களுக்குத் துரோகம் செய்து எதிரிகள் பக்கம் விழுந்து விட்டனர் என்பதே அர்த்தமாகும்.

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாவீரர் நாள் வரை தாயகமெங்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்படுகின்றனர். இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்துகிறது.

அதாவது இக்குவிப்பானது முதியோர், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என வீதிகளில் செல்லும் சகலருக்கும் “இது மாவீரர் வாரம்” என்ற செய்தியை முரசறையும் ஒரு வெளிப்பாடாகவும் தெரிகிறது. சொல்லப்போனால் மாவீரர் வாரத்துக்குரிய பிரசாரத்தை அரசாங்கமே தனது செலவில் மேற்கொள்கிறது.

இந்த நிலையில் மாவீரர் நினைவுகளில் அஞ்சலி தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் நிலை என்ன? அரச ஒடுக்குமுறையைக் கண்டித்து ஆவேசமான அறிக்கைகள், மக்களைத் தங்கள் தங்கள் வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செய்யும்படி அழைப்புகள், மாவீரர் நாளன்று எங்காவது சுடறேற்றி விட்டு. அதையும் பொலிஸார் மேற்கொள்ளும் இடையூறுகளையும் படம் பிடித்து பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் வெளியிடல் போன்ற வாணவேடிக்கைகள் ஆகிய விடயங்களும் வழமைபோல் மட்டுப்படுத்தப் போகிறார்களா?

நீதிமன்றக் கட்டளைகளை மீறாமல் பொலிஸாராலோ இராணுவத்தினராலோ இடையூறு ஏற்படுத்த முடியாமல் தந்திரோபாயமான வழி முறைகளில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளப் போகிறார்களா? என்ற கேள்வி எழும்போது இல்லையென்ற பதிலே கிடைக்கும்.

எமது அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை அதற்கான அறிகுறிகள் எதுவுமேயில்லை. காரணம் அவர்கள் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலிலிருந்து வெகுதொலையிலேயே எப்போதும் உள்ளனரேயொழிய எமது மக்களின் இதய பூர்வமான ஆதங்கங்களை முழு உலகுக்கும் வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

26.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE