Thursday 25th of April 2024 10:03:20 PM GMT

LANGUAGE - TAMIL
.
இடைநிறுத்தப்பட்ட மின்சார உற்பத்தி நிர்மாணம்! - நா.யோகேந்திரநாதன்!

இடைநிறுத்தப்பட்ட மின்சார உற்பத்தி நிர்மாணம்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் வடபகுதியில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் சீனாவால் உருவாக்கப்படவிருந்த காற்று, கடலலைகள் என்பவற்றின் மூலம் மின்சாரம் பெறும் வேலைத்திட்டம் மேற்கொள்வதற்கான இணக்கப்பாடு இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே எட்டப்பட்டிருந்தது.

ஆனால் அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள தனது “டுவிட்டர்” பக்கத்தில் மேற்படி நிர்மாணத் திட்டத்தைத் தாம் இடைநிறுத்துவதாகவும் அத்திட்டத்தை மாலைதீவிலுள்ள 12 தீவுகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீடு காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வரவேண்டியிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் நிதியமைச்சர் இந்திய விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு பல தரப்பினரோடும் பேச்சுகளை நடத்தியுள்ள சந்தர்ப்பத்திலேயே சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. பசில் ராஜபக்ஷ் இந்தியாவின் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இந்திய முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது தொடர்பாகவும் பேச்சுகளை அங்கு நடத்தியிருந்தார். அவர் வெளிவிவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடத்திய சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாகக் கருதப்படுகிறது. அதில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பாதுகாப்புத் தொடர்பாக இலங்கை – இந்தியா இணைந்து செயற்படுவது பற்றிப் பேசப்பட்டதாகவும் சில செய்திகள் வெளி வந்துள்ளன.

இப்படியான ஒரு சூழலில் சீனா குறிப்பிட்ட மூன்றாவது தரப்பு என்பது இந்தியாவாகவே இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

எப்படியிருந்த போதிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் சக்தியைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்க உட்பட மேற்கு நாடுகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவது வெளிப்படையானது.

ஆனால் நீண்ட காலமாகவே இலங்கையுடன் நல்லுறவைப் பேணி வந்த சீனா முன்னறிவித்தல் எதுவுமின்றி இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கும்.

அதேவேளை கடந்த இரு மாதங்களின் முன்பு, சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சேதனப் பசளை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளதெனக் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதும், அக்கப்பல் திரும்பவும் வந்து 2 மாதங்களாக இலங்கைக் கடற்படரப்பில் தரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த உற்பத்தி நிறுவனம் மேற்படியான பசளை மூன்றாவது தரப்பால் பரிசீலிக்கப்பட வேண்டுமென முன்வைத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர். மேற்படி பசளையை ஏற்க மறுத்தால் 8 பில்லியன் டொலர் நஷ்ட ஈடாகவும் தாமதக் கட்டணமாகவும் கட்ட வேண்டிவரும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

எப்படியிருந்தபோதிலும் சீனாவுக்கும் இலங்கைக்குமான நீண்ட கால நல்லுறவில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறியாகவே இவ்விரு சம்பவங்களும் நோக்கப்படுகின்றன.

அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்க தயாரிப்பு முயற்சிகள் இடம்பெற்ற காலத்திலேயே இலங்கையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவுடனான இதுவரைக் கையாண்டு வந்த உறவு இன்னொரு கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

அதன் முதற்கட்ட நடவடிக்கை கெரவலப்பிடிய மின் நிலையத்தின் 40 வீதப் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுடன், இலங்கையின் எரிவாயு விநியோகம் முழுமையாகவே அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையின் மின்சார விநியோகம், எரிவாயு விநியோகம் என்பன அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகளுக்கு அடித்தளமிடப்படுகிறது.

இன்னொருபுறம் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் அமெரிக்க போர்க் கப்பல்கள், வர்த்தகக் கப்பல்கள் அங்கு தாராளமாக வந்து போகமுடியும். அதன் பாதுகாப்புக்கு என அமெரிக்கப் படையணி அங்கு நிறுத்தப்படும் சாத்தியமும் உண்டு.

இந்த நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில். கொண்டு வரப்படும் அபாயம் உண்டு.

இந்த நிலையில் சீனா மின்னுற்பத்தி நிர்மாணத் திட்டத்தை மாலைதீவுக்கு மாற்றியமை ஒரு பின்வாங்கலாக இருக்கக்கூடுமோ எனச் சிலர் சந்தேகப்படலாம்.

நிச்சயமாக இல்லை! சீனா இலங்கையில் மேலும் வலுவாகக் காலூன்ற இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். கடந்த காலங்களில் போர் காலத்திலும் போருக்குப் பிந்திய காலங்களிலும் இலங்கைக்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவையும் உதவியையும் வழங்கி வந்த சீனா மின்னுற்பத்தி நிலையம், சேதனப் பசளை என்பன மூலம் இலங்கையை இறுக்கிப் பிடிக்கவுள்ள விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருடங்கள் சீனாவுக்கே குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அது தொடர்பான கடன் கட்டிமுடிக்க வேண்டிய 70 வருடங்களுக்கு அது சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். கொழும்புத்துறைமுக நகரத்தில் மேற்கு நாடுகள் எவ்வளவு தான் முதலீடு செய்தாலும், அதன் 99 வருடங்களுக்கு சீனாவின் கையிலேயே இருக்கும். தற்சமயம் துறைமுகத்திலிருந்து களனிப் பாலம் வரை தூண்களுக்கு மேல் அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு, வரி அறவீடு என்பன, 14 வருடங்களுக்குச் சீனாவின் பொறுப்பிலேயே இருக்கும்.

எனவே சீனா இலங்கையில் ஏற்கனவே வலுவாகக் காலூன்றி விட்ட நிலையில் அது பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதேவேளையில் இலங்கையின் தென் பகுதியும் மேற்குப் பகுதியும் சீனாவுக்கும், கிழக்குப் பகுதி அமெரிக்காவுக்கும் பங்கு போடப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தற்சமயம் இலங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வல்லரசுகளுக்கிடையேயான அரசியல், பொருளாதாரப் போட்டி எதிர்காலத்தில் இராணுவப் போட்டியாக விரிவடையாது என்று சொல்லிவிடமுடியாது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சீனா, அமெரிக்கா ஆகிய இரு தரப்பினரும் இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சகல பொருளாதார, அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களையும் கையாள்வது தவிர்க்கமுடியாது.

எனவே இலங்கைக்கு மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளுக்கு நடுநிலைக் கொள்கையே பொருத்தமானதாகும். ஆனால் இலங்கை ஒரு சந்தர்ப்பத்தில் முற்றுமுழுதாக சீனா பக்கமும் இன்னொரு சந்தர்ப்பத்தில் மேற்குலகம் பக்கம் சாய்வதுமாக தனது நடவடிக்கைகளை நகர்த்தி வருகிறது. இரு தரப்பினரிடமும் நம்பிக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். இதன் விளைவு ஏதோவொரு தரப்பினர் தங்கள் பலம் மூலம் இலங்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நிலையையே உருவாக்கும்.

இதன் காரணமாக நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன திட்டமிட்டு உருவாக்கப்படும். இந்த நிலையை மீண்டும் மீண்டும் வெளிநாடுகளிடம் சரணடையும் நிலையே ஏற்படும்.

எனவே இன்றைய நிலைமை இப்போதைய ஆட்சியாளர்களி்ன் தூரதிருஷ்டி இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டவை என்பதை மறுத்துவிட முடியாது.

அதுமட்டுமின்றி இலங்கை அரசின் தற்சமயம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் வல்லரசு நாடுகளுக்குள் கழுத்தைக் கொடுக்கும் ஆபத்தான நிலைமையை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகின்றது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

07.12.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, வட மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE