Friday 26th of April 2024 12:12:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஆச்சரியமும் ஆபத்தும்! - நா.யோகேந்திரநாதன்!

ஆச்சரியமும் ஆபத்தும்! - நா.யோகேந்திரநாதன்!


கிளிநொச்சியில் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். பாடசாலை விடுமுறை நாளான அன்று அவர்கள் போதைப் பொருளை நுகர்வதற்காக அங்கு சென்றதாகவும் ஒவ்வொருவரிடமும் தலா 80 மில்லிகிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போதை வஸ்தை திருகோணமலையைச் சேர்ந்த இனந்தெரியாத ஒருவர் மாணவர்களுக்கு வழங்கியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் மாணவர்கள் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு புறம் ஆச்சரியத்தையும் இன்னொரு புறம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த செய்திக்குள் பெரும் ஆபத்து புதைந்துள்ளது என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். அதே வேளையில் இச்செய்தி தொடர்பாக எழக்கூடிய சில கேள்விகளுக்கு உரிய பதிலைக் கண்டறியாது இப்பெரும் ஆபத்திலிருந்து மாணவர்களை மட்டுமின்றி சமூகத்தைக் கூடக் காப்பாற்றுவது சாத்தியமில்லையென்பது உணரப்பட வேண்டும்.

முதலாவது விடயம் இந்த மாணவர்கள் போதைப் பொருள் பாவிக்க முயன்றதோ அல்லது பாவித்ததோ அதுதான் முதற் தடவையா அல்லது அவர்கள் ஏற்கனவே இப்பழக்கத்தை கைக்கொண்டு வந்தனரா என்பது பற்றி உண்மையான தகவல்கள் அறியப்பட வேண்டும். அவர்கள் அன்றுதான் முதன்முதலாகப் பாவிக்க முயன்றார்கள் என்றால் அவர்களுக்கு அவற்றை வழங்கிய இனந்தெரியாத நபரின் தூண்டுதல் இன்றி அது சாத்தியமில்லை. நன்கு விடயங்களையும் அறிந்திருக்கக் கூடிய ஒரு பிரபல பாடசாலையின் மாணவர்கள் முன்பின் தெரியாத ஒரு நபர் கொடுக்கும் பொருளை எவ்வித கேள்விகளும் இன்றி பாவிக்கும் அளவுக்கு முட்டாள்களா? அதேவேளையில் அந்த நபர் முன்பின் பழக்கமில்லாதவர்களிடம் பொதைப்பொருளை வழங்குவது தனக்கும் ஆபத்தாக அமையக்கூடும் என்பதைத் தெரியாமல் இருந்திருக்கமுடியுமா? எனவே ஏற்கனவே அந்த நபர் அந்த மாணவர்களுடனோ அல்லது அந்த மாணவர்களில் ஒருவருடனோ குறைந்த பட்சம் சிலநாட்களாவது நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். திருகோணமலையைச் சேர்ந்த அந்த நபருக்கும் இந்த மாணவர்களுக்கும் அல்லது ஒரு மாணவனுக்கு உறவு எப்படி உருவானது? அப்படி உறவு உருவாகிய காலகட்டத்தில் அவர் யாரென்பதை எந்த ஒரு மாணவனும் அறியாமல் இருந்திருப்பத சாத்தியமா?

இப்படியாக நியாயபூர்வமாக எழக்கூடிய கேள்விகளுக்கு விசாரணையின் போது விடை காணப்பட்டிருக்க வேண்டும். அப்படி விடை காணப்பட்டிருந்தால் இந்நேரம் அந்த இனந்தெரியாத நபர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியெதுவும் நடந்ததாக தெரியவில்லை. இப்படியான ஒரு நிலையில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட கூடாதவரா என்ற கேள்வியும் எழுகிறது.

இம்மாணவர்கள் ஏற்கனவே போதைப் பொருளுக்கு ஆட்பட்டவர்களாய் இருந்தால் அவர்களின் நண்பர்கள் சகமாணவர்கள் எனச் சிலரும் இக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். அப்படியானால் அவர்கள் யாரென கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? அவர்கள் எவர் மூலம் இப்பொருட்களைப் பெற்றனர் என்பதை அறிய முயற்சிக்கப்பட்டதா? இதையும் ஒரு முக்கிய கேள்வியாக எடுத்து பதிலைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே மாணவர் சமூகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றமுடியும்.

அடுத்த விடயம் இனந்தெரியாத நபரென்று கூறப்படுபவரால் போதைப் பொருளெனத் தெரிவிக்கப்படாமலே வேறு ஏதோ ஒரு பொருளாகக் கூறி வழங்கப்பட்டிருக்க முடியுமா? அப்படியான சந்தர்ப்பத்தில் அப்போதைப் பொருளை உட்கொள்ள முன்பே கைவசம் வைத்திருந்த போதே மாணவர்கள் கைது செய்யப்பட்டார்களா? மாணவர்கள் போதைப் பொருளை உட்கொள்வதற்காக பாடசாலைக்குச் செல்கிறார்கள் என்ற தகவலைபொலிசாருக்கு வழங்கியவர் யார்? அவருக்கு எப்படி இந்த விடயம் தெரியும்?

மாணவர்களுக்கு அந்தப் பொருளை எதுவென்று தெரியப்படுத்தியோ, தெரியப்படுத்தாமலோ வழங்கிய அந்த இனந்தெரியாத நபர் தான் பொலிசாருக்கு தகவலைக் கொடுத்தாரா என்ற சந்தேகமும் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் எழுந்தால் அதைத் தவறென்று கூறமுடியுமா?

இந்தக் கேள்விகளில் ஒன்றுக்காவது விடை கிடைக்குமா என்பது சந்தேகமே! அப்படி விடைகள் கண்டறியப்பட்டாலே பல உண்மைகள் வெளிவருவதுடன் போதை வஸ்து வர்த்தகத்தையும், பாவனையையும் முற்றாக ஒழித்து விட முடியும். அது மட்டுமின்றி போதை வஸ்து தடுப்பு என்ற பெயரில் மாணவர்கள் மீதோ இளைஞர்கள் மீதோ சில கெடுபிடிகளை மேற்கொள்ளவும் எடுக்கப்படும் அநீதியான நடவடிக்கைகளா இவை என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.

மூன்றாவது விடயம் இந்த மாணவர்கள் நீதிமன்றில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட போது அவர்களை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. போதை வஸ்து வர்த்தகர்களுக்கோ, பாவனையாளர்களுக்கோ நீதிமன்றத்தில் முதல்தவணை நிறுத்தப்படும் போது வழமையாக பிணை வழங்கப்படுவதில்லை. போதை வஸ்து விடயத்தில் நீதிமன்றம் தயவு தாட்சண்யம் பார்ப்பது கிடையாது. அப்படி போதை வஸ்து தொடர்பான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் திருப்திகரமாக இல்லையென்றே நம்பவேண்டியுள்ளது. எனவே மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்படட சம்பவத்தில் மாணவர்கள் குற்றமிழைத்திருக்கக் கூடும் என நீதிமன்றத்தின் முன் பொலிஸாரால் போதிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை என்றே நம்ப வேண்டியுள்ளது.

அப்படியென்றால் இச்சம்பவம் வெளியே பகிரங்கமாகத் தெரியாத ஏதோ ஒரு உள்நோக்கத்தினடிப்படையில் திட்டமிட்டு சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இப்படியான நிலையில் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் கல்விச் சமூகத்தினர் வைத்திய அதிகாரிகள் கூடி இவ்விடயம் தொடர்பாகச் சில தீர்மானங்களை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது. முக்கியமாக போதைப் பொருள் பாவனையின் கொடூரம் தொடர்பாகப் பெற்றோர்களையும் மாணவர்களையும் விழிப்படைய வைப்பதில் அனைவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த அவசரமும் அவசியமுமான தீர்மானம் பாராட்டப்பட வேண்டியதுடன் நிச்சயமாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய ஒன்றாகும். அதே வேளையில் இவ்விடயம் வெற்றிபெற வேண்டுமானால் ஏற்கனவே இங்கு எழுப்பப்பட்ட மூன்று விடயங்களுக்கும் நியாயபூர்வமான முறையில் விடை கண்டால் மட்டுமே இத்தீர்மானம் வெற்றிபெறுவது சாத்தியமாகும். அதற்கு கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை நினைவு கூர்வது அவசியமாகும்.

1996ம் ஆண்டு யாழ் குடா நாடு சூரியக் கதிர் நடவடிக்கை மூலம் அரச படைகளால் கைப்பற்றபட்ட பின்பு அக்காலப் பகுதியில் யாழ் பல்கலைக் கழக சுற்றாடலில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவ ஆரம்பித்தது. அதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் துணை இராணுவக் குழுக்களுமே செயற்பட்டன என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. எனினும் சில மாதங்களுக்குள்ளேயே 'புலிகள் அமைப்பினர்' வன்னியில் இருந்தவாறே 'ரிமோட் கொன்றோல்' மூலம் போதைப் பொருள் பாவனையை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே தடுத்து நிறுத்திவிட்டனர். இவ்விடயத்தில் போதைப்பொருள் பாவனையை பரப்ப முயன்ற தீயசக்திகளின் முயற்சி முளையிலே கிள்ளியெறியப்பட்டது.

இவ்வாறே 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் பிரபல பாடசாலைகளுக்கு அண்மையில் அமைந்திருந்த பல கடைகளில் 'மார்பியா' பாக்கு வியாபாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின்னால் இரும்பு வியாபாரம் என்ற பெயரிலும் வீட்டுத் தளபாடங்கள் கோழிக்குஞ்சுகள் சுமந்து விற்பவர்கள் என்ற பெயரிலும் சில தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த வியாபாரிகள் உண்மையில் யாரென்பதை எமது மக்கள் நன்கறிவர் எனினும் கல்விச் சமூகத்தினர், சமூக நலன்விரும்பிகள் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும் பொலிஸாருக்கு உரிய நேரங்களில் தகவல்கள் கொடுத்தும் அழுத்தம் கொடுத்தன் காரணமாகவும் சில நாட்களில் அவ்வர்த்தகம் இல்லாமல்போய்விட்டது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் எனக் கூறப்பட்டு சிலர் ஒட்டிசுட்டானில் வைத்து ஆயுதங்களுடனும், புலிகளின் சீரூடைகளுடனும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கியமான நபர் பல ஆண்டுகளாக இராணுவத்தினரிடம் மாத ஊதியம் பெற்று புலிகளுக்குள் ஊடுருவி வேலை செய்தவர் என்பது விசாரணையிலிருந்து தெரிய வந்தது. ஆனால் இச்சம்பவம் தொடர்பாகவும் மேலும் சுமந்திரன் மீதான கொலைமுயற்சி தொடர்பாகவும் கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் தடுத்து வைக்கப்படடுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சில இளைஞர்களைக் கைது செய்வதற்காகவே இப்படியொரு சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

2015ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் பொலிஸாருக்கு தாங்கள் ஆயுதம் மறைத்து வைத்திருக்குமிடத்தை காட்டுவதாகக் கூட்டிச்சென்று பொலிஸார் மேல் கைக்குண்டு வீச முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் சிறைக்காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் பல இடம்பெற்றன. 2012ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இராணுவத்தினரும் சிறைக்காவலர்களும் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 இற்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸாரைச் சுட முயன்றார் எனக் கூறப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படியிப்படியாக இடம்பெறும் சம்பவங்கள் ஆச்சரியத்தை ஊட்டுபனவாக இருந்தாலும் அவற்றின் பின்னால் உள்ள ஆபத்து படுபயங்கரமானது. ஏனெனில் இவற்றின் பின்னணியும், உள்நோக்கங்களும் வெளியே வராத போதும் நியாயமான தரப்பினரால் சில உண்மைகளை உணரப்படாமலில்லை.

எனவே கிளிநொச்சி மாணவர்கள் தொடர்பான சம்பவத்தில் சூத்திரதாரியான திருகோணமலையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் இனந்தெரியாதவர் யாரென்பது கண்டறியப்பட்டாலே இச்சம்பவத்தின் மூலவேரைக் கண்டறிய முடியும். இவருக்கும் போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கும் அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு உண்டா என்பது தொடர்பாகக் கண்டறியப்பட வேண்டும்.

போர் முடிந்த கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் இன்று வரை முற்றாக தடுத்து நிறுத்தப்படவில்லை. இடையிடையே சிலர் கைது செய்யப்படுவதும், சிறிது காலம் தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆனால் பெரும் இரத்தக்களரியை ஏற்படுத்துவதாகக் தோன்றும் இவர்களால் இதுவரை ஒரு கொலை கூட செய்யப்படவில்லை.

அடிப்படையில் வன்முறை ஒழிப்பு அதாவது அவர்கள் மொழியில் பயங்கரவாத ஒழிப்பு போதை வஸ்து ஒழிப்பு என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் கண்காணிக்கப்படுவதும் ஒரு அச்சுறுத்தலான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப் படுவதும் ஏதோ காரணங்கள் சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படுவதும் என தமிழ் இளைய சமூகத்தின் மீது கண்ணுக்குத் தெரியாது ஒரு ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

கிளிநொச்சி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவமும் அவற்றில் ஒன்றோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி இளைஞர் சமூகத்தின் மீது வெவ்வேறு வடிவங்களில் கண்ணுக்குத் தெரியாத விலங்குகள் பூட்டப்பட்டு அவர்களை ஒரு மந்த நிலைக்குள் வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற அச்சமும் எழுகிறது.

எனவே பெற்றோர்களும் சரி இளைஞர்களும் சரி சமூக நலன் விரும்பிகளும் சரி இன்றைய ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு அடியையும் வெகு அவதானமாக எடுத்து வைத்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த வழியுமில்லையென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE